MAIL OF ISLAM

Knowledge & Wisdom



கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ​அன்னவர்கள் சாதாரண மனிதர் அல்ல


கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மனிதர் என்ற சித்தாந்தமாகிறது.

“நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் என்று நபியே நீர் கூறும்.” (அல்கஹ்பு – 110) என்ற பாதி வசனத்தை வைத்து உருவானதாகும்.


“நான் (அல்லாஹ்விடமிருந்து) எனக்கு வஹி அறிவிக்கப்படுகின்றதே அப்படிப்பட்ட உங்களைப் போன்ற மனிதன் என்று (நபியே) நீர் கூறுவீராக” என்ற முழு வசனத்தை சிந்தித்தாலோ அல்லது ரஸுல்மார்களைப் பார்த்து நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் அன்றி வேறில்லை என்று அம்மக்கள் கூறினார்கள். அதற்கு அந்த ரஸுல்மார்கள் நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தான் என்றாலும் அல்லாஹு தஆலா தன் அடியார்களில் தான் நாடியவர்களின் மீது அருள் புரிந்திருக்கின்றான் என்று கூறினார்கள் (இப்ராஹீம் 10-11) என்ற வசனத்தை சிந்தித்தாலோ மேலும் இந்த ரஸுல் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் என்று அநீதம் செய்பவர்கள் இரகசியமாக கூறுகின்றார்கள் (அல்அன்பியா -03) என்ற வசனத்தை சிந்தித்தாலோ இந்த தவறான சித்தாந்தத்துக்கு தெளிவான விளக்கம் கிடைக்கும். அல்லது வஹியின் யதார்த்தம் என்ன? அல்லாஹ்விடமிருந்து வஹீ எந்த அமைப்பில் இறங்கும்? ஒரு நொடி பொழுதில் மிஃராஜ் யாத்திரை மூலம் ஏழு வானங்களை கடந்து அல்லாஹ்வை சந்தித்து உறவாடிவிட்டு மீண்டும் மண்ணுலகத்துக்கு திரும்பி வந்த நிகழ்ச்சி? அவர்களின் சைக்கினைக்கிணங்க சந்திரன் இரண்டாக பிளந்திருக்குமா? மரங்கள் தான் சிரம் பணிந்து வந்திருக்குமா? என்று சிந்தித்தால் தெளிவு விளங்கும்.


மிகப் பிரமாண்டமான மலையே தாங்கிக்கொள்ள முடியாமல் தவிடுபொடியாகி விடும்” என்று (ஸுரத்துல் ஹஷ்ர்-21) சொல்லப்பட்ட குர்ஆனை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சாதாரண மனிதராக இருந்தால் தாங்கியிருக்க முடியுமா?

தொழுகைக்கு இகாமத்து சொல்லப்பட்டது அப்போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் முகத்தைக்கொண்டு எங்களின் பால் முன்னோக்கி உங்களின் சப்புகளை நேராக்கிக்கொள்ளுங்கள். மேலும் ஒருவருக்கொருவர் சேர்ந்து நின்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக நான் எனது முதுகுக்குக் பின்னால் இருந்தும் உங்களைப் பார்க்கிறேன் என்று கூறினார்கள். (புகாரி – 719) அப்படியானால் முதுகுக்குப் பின்னால் இருந்தும் பார்க்கின்ற ஆற்றலைப் பெற்றுள்ள கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் முகத்துக்கு முன்னால் இருக்கின்றவைகளையே ஒழுங்காகப் பார்க்க முடியாமல் தடுமாறும் நாமும் எங்ஙனம் சமமாக முடியும்?


மேலும் நிச்சயமாக ஷைத்தான் என் வடிவத்தில் வரமுடியாது என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி ஹ.எ 6993- 6997 ஹ முஸ்லிம்: ஹ.எ 2266 -11- 2267) அப்படியானால் ஷைத்தானுக்கு வடிவம் எடுக்க முடியாது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் ஷைத்தானுக்கு வடிவம் எடுக்க முடிந்தவர்களான நாமும் எப்படி சமமாக முடியும்? மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித ஆன்மா உலகிலுள்ள எல்லா ஆன்மாக்களை விட மிக ஏற்றமானது என்றும் அன்னவர்களின் மனைவிமார்கள் முஃமீன்களின் தாய்மார்கள் என்றும் அல்லாஹ்வால் சொல்லப்பட்ட (அல் அஹ்ஸாப்- 06) கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் நாமும் எப்படி சமமாக முடியும்? மேலும் மைய்யித்தை கப்ரில் வைக்கப்பட்டவுடன் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை மைய்யித்திடம் காட்டி இவர்களைப் பற்றி நீ என்ன சொல்லப் போகின்றாய்? என்று மலக்குமார்களால் கேட்கப்படக் கூடிய கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் மண்ணோடு மண்ணாகும் நானும் எப்படி சமமாக முடியும்?



மேலும் கியாமத் நாளையில் கேள்வி கணக்குக்காக அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பாட்டப்பட்டிருக்கும் வேளையில் தாங்களைக் காப்பாற்றி கரை சேர்க்க வேண்டுமென்று கேட்டு பாவிகள் யாவரும் சில நபிமார்களின் சமூகத்திற்கு சென்று கெஞ்சுவார்கள். இறுதியாக நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அந்தப்பாவிகளுக்காக அல்லாஹ்விடம் மன்றாடி கரைசேர்ப்பார்கள் என்று ஹதீஸ் வந்துள்ளது. (புகாரி 199)


அப்படியானால் பாவிகளுக்காக பரிந்துரை செய்து காப்பாற்றி கரை சேர்க்கும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் பரிந்துரை செய்யப்படுவதற்காக அழுது கெஞ்சி அலைமோதும் நாமும் எங்ஙனம் சமமாக முடியும்?


ஆகவே உலக மாந்தர் யாவரிலும் இறையச்சத்தின் உச்சியிலும் சங்கையின் உச்சத்திலும் இருக்கக்கூடிய கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய அந்தஸ்திற்கும் இறையச்சம் என்றால் என்னவென்றே அர்த்தம் புரியாமல் தடுமாறும் நம்முடைய அந்தஸ்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் அல்லவா இருக்கிறது?


மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நம்மைப் போன்ற மனிதர் என்று கூறினால் (அதன் அக்ஸு- விளைவு) நாமும் அன்னவர்களைப் போன்ற மனிதர் என்று கூறியதாக ஆகிவிடுமே – அப்படி கூறியதாக ஆகிவிட்டால் நிச்சயமாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்கள் என்று நமது மூலமந்திரமான களிமாவிலும் பாங்கு, இக்காமத்திலும் தொழுகை போன்ற இன்னபிற வணக்கங்களிலும் கூறுவதில் என்ன பயன் இருக்கின்றது?


அப்படியானால் உடல் ரீதியாலும் உளரீதியாலும் குணம் ரீதியாலும் இன்னும் எந்தவொரு அம்சத்தை எடுத்துக் கொண்டாலும் அத்தனை அம்சங்களிலும் அல்லாஹ்வின் பிரமாண்டமான அருளைப் பெற்றிருக்கின்ற கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் நாமும் எப்படி ஒன்றாக ஆக முடியும்? என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சாதாரண மனிதர் என்ற சித்தாந்தம் சுக்குநூறாகி விடும். ஆகவே இதுவரை கூறப்பட்ட விளக்கங்கள் மூலம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நம்மைப் போன்ற மனிதராகும் என்ற வாதம் பிழையானது என்பதை தெட்டத்தெளிவாகி விளங்கிக் கொள்ளமுடிகின்றது. எல்லாம் வல்ல நாயன் நாம் யாவரையும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மனிதரில் மாணிக்கமாக இருக்கிறார்கள் என்பதை விளங்கிநடந்த நல்லோர்களுடன் சேர்த்தருள் புரிவானாக ஆமீன்!