ஷெய்க் கலாநிதி தைக்கா சுஹைப் ஆலிம்
அல்லாமா தைக்கா சுஹைப் ஆலிம் அவர்கள் தமிழ் பேசும் உலகில் மாத்திரமன்றி அரபு உலகிலும் நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞராவார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் உலகம் தந்த மாபெரும் இஸ்லாமிய அறிஞர் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் பேரப்பிள்ளை ஆவார்கள்.
1930ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கீழக்கரை என்னும் இடத்தில் பிறந்தார்கள். ஆரம்ப இஸ்லாமிய ஆன்மீகக் கல்வியை உள்ளுரில் பெற்றுக்கொண்ட அவர்கள் மௌலவி பாஸில் பாடநெறியையும் பூர்த்தி செய்தார்கள். பின்னர் அப்லலுல் உலமா என்ற பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தார்கள்.
இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அவர்கள் அமெரிக்காவின் கொலம்பியா பசுபிக் பல்கலைக்கழகத்தில் கலாநிதி (முனைவர்) பட்டம் பெற்றார்கள். அரவி என்று அழைக்கப்படும் அரபுத் தமிழ் தொடர்பாக அவர்கள் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டார்கள்.
ஷெய்க் சுஹைப் அவர்கள் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதுவரை எட்டுப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். இஸ்லாமிய சட்டடங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களது முதலாவது நூல் நிய்யத்துக் கடன் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அப்பொழுது அவர்களுக்கு 17 வயதாகும். ஷெய்க் சுஹைப் ஆலிம் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம் உலகில் புலமைச் சொத்தாகவும் கருதப்படுகிறார்கள்.
ஷெய்க் சுஹைப் ஆலிம் அவர்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, ஜோர்தான், எகிப்து, அமெரிக்கா, ஈராக், உட்பட பல நாடுகளுக்குச் சென்று விரிவுரைகளை நடத்தி உள்ளார்கள். கலை, கலாசார துறைக்காக அவர்கள் ஆற்றியுள்ள பணி சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அரூஸிய்யத்துல் காதிரிய்யா தரிக்காவின் ஆன்மீக தலைவராவார்கள்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் சுஹைப் ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்