ஷெய்க் ஸைத் ஷாகிர்
ஷெய்க் ஸைத் ஷாகிர் அவர்கள் அமெரிக்காவின் கலிபோனியா நகரில் 1956ஆம் ஆண்டு மே 24 ஆம் திகதி பிறந்தார்கள். 1977 ஆம் ஆண்டு அமெரிக்க விமான படையில் சேவை செய்து கொண்டு இருக்கும்போது இஸ்லாத்தை தழுவினார்கள்.
இவர்கள் வொஷிங்டனில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் தொடர்பான கற்கைத்துறையில் கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார்கள். றட்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானதுறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்கள்.
அக்காலப்பகுதியில், மஸ்ஜிதுல் ஹுதா என்னும் இஸ்லாமிய நிலையத்தை அமைத்தார்கள். பின்னர் எகிப்தில் அரபி மொழியை கற்ற இவர்கள் மீண்டும் நாடு திரும்பி பல்வேறு சமூக சேவைகளில் தம்மை ஈடுப்படுதிக்கொண்டார்கள். அப்போது, மஸ்ஜிதுல் இஸ்லாம், மூன்று மாநில முஸ்லிம் கல்வி முயற்சி, கென்னக்டிகட் முஸ்லிம் ஒருங்கிணைப்பு கமிட்டி என பல நிறுவனங்களை அமைத்தார்கள்.
1988 முதல் 1994 வரை மஸ்ஜிதுல் இமாம் பள்ளிவாசலில் இமாமாக பணிபுரிந்தார்கள். அத்தோடு, தென் கென்னக்டிகட் மாநில பல்கலைகழகத்தில் அரபி மற்றும் அரசியல் விஞ்ஞானம் கற்றுக்கொடுத்தார்கள். யாலே பல்கலைகழகத்தில் சர்வமத கவுன்சிலில் போதகராகவும் பணிபுரிந்தார்கள்.
பின்னர் சிரியாவில் இஸ்லாமிய பாரம்பரிய கல்வியை நிறைவு செய்தார்கள். மொரோக்கோ, சிரியா ஆகிய நாடுகளில் இவர்கள் ஏழு வருடங்கள் கற்றுள்ளார்கள். இஸ்லாமிய சட்டத்துறை, குர்ஆனின் கற்கைகள், அரபுமொழி, ஆன்மீகம் ஆகிய துறைகளிலும் இவர்கள் தேற்றுள்ளார்கள். சிரியாவின் அபூ-நூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதலாவது அமெரிக்கர் என்ற பெருமை இவர்களைச்சாரும்.
ஸைத் சாகிர் ஸைதுனா உயர் கல்வி நிறுவகத்தின் நிறுவனர்களில் ஒருவராவார்கள். அரபு சட்டம், இஸ்லாமிய ஆன்மீகம் ஆகிய துறைகளில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்கள். இதேவேளை Ta'leef Collective அமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார்கள். Ta'leef புது முஸ்லிம்களுக்கு கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளதோடு முஸ்லிமல்லாத இளம் இளைஞர்களுக்கு இஸ்லாம் தொடர்பான போதனைகளையும் வழங்கி வருகிறது. இஸ்லாத்தை இளைஞர், யுவதிகளுக்கு ஏற்ற வகையில் எடுத்துச் செல்லும் மகத்தான பணியையும் இவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.
இவர்கள் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சென்று இஸ்லாமிய சொற்பொழிவுகள் ஆற்றி வருகின்றனர். இவர்கள் பல அரபி நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்துள்ளனர். பல்வேறு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளனர். வொஷிங்டன் போஸ்ட் நியூஸ் வீக் போன்ற பத்திரிகைகளிலும் அவரது ஆக்கங்கள் வெளியாகின்றன.
அமெரிக்காவை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்று மிகுந்த ஆசை உள்ளவர்கள். 2009 ஆம் ஆண்டு The New York Times பத்திரிக்கைக்கு வழங்கிய பெட்டியில் "அமெரிக்கா ஒரு நாள் முஸ்லிம் நாடாக மாறும் என்றும் இஸ்லாமிய சட்டம் அமுல்படுத்தப்படும் என்று நான் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்று கூறி உள்ளனர்.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் ஒருவராகவும் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் ஸைத் ஷாகிர் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்