அஸ்ஸையித் ஷெய்க் யூஸுப் ரிபாயி
கலாநிதி யூசுப் ரிபாயி இஸ்லாமிய உலகில் நன்கு அறியப்பட்ட சகமகால அறிஞர்களில் பிரபல்யம் வாய்ந்தவர்கள். 1932ம் ஆண்டு குவைத்தில் பிறந்த யூசுப் ரிபாயி அவர்கள் ஓர் அஹ்லுல் பைத் ஆவார்கள். ஷாபியீ மத்ஹபை சேர்ந்தவர்கள். ரிபாயி தரீக்காவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவர்.
ஆரம்பக் கல்வியை ஷெய்க் அஹமத் அல் ஆகில் அவர்களிடம் பெற்றுக்கொண்ட ஸைய்யித் ரிபாயி அவர்கள் ஸிரியாவில் டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டக்கலை மற்றும் ஷாபியீ சட்டத்துறை என்பவற்றையும் பூர்த்தி செய்தார்கள்.
1963ம் ஆண்டில் குவைத்தின் அமைக்கப்பட முதல் பாராளுமன்றத்தில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி ரிபாயி அவர்கள் குவைத்தின் தொலைத்தொடர்பாடல் மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்கள். தொடர்ந்து இராஜாங்க அமைச்சுப் பதவியையும் வகித்தார்கள்.
கலாநிதி யூசுப் ரிபாயி இஸ்லாத்திற்கு ஆற்றிய பணிகள் என்றும் மறக்க முடியாதவை. யூசுப் ரிபாயி அவர்கள் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார்கள். அவற்றில் கவாதிர் பி அல் சியாஸா வல் முஜ்தமா (அரசியல் மற்றும் சமூக சிந்தனைகள்) என்னும் நூல் முஸ்லிமல்லாத நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தமது உரிமைகளை பாதுகாப்பது தொடர்ப்பான விடயங்கள் உள்ளடங்கியது. அதே போல், ஷெய்க் முஹம்மத் இப்ன் அல் சையித் அலவி அல் மலிக்கி அவர்கள் வஹாபிய கொள்கை குழப்பங்களுக்கு எதிராக எழுதிய நூலுக்கு வஹாபிகள் குறை சொன்னபோது அதற்கு எதிராக கலாநிதி யூஸுப் ரிபாயி அவர்கள் எழுதிய நூல் முக்கியமானது. அதேபோல், மஸ்ஜிதுன் நபவியை இஷா தொழுகையுடன் மூடிவிடும் வஹாபிய அரசாங்கத்தின் செயலைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்து அவர்கள் எழுதிய புத்தகம் புகழ் பெற்றதாகும். புத்தகம் வெளிவந்ததைத் தொடர்ந்து வஹாபிய அரசாங்கம் மஸ்ஜிதுன் நபவியை 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி வழங்கியது. கலாநிதி ஜிப்ரீல் ஹத்தாத் அவர்கள் இந்த நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
கலாநிதி யூஸுப் அவர்கள் அல் ஈமான் என்னும் பாடசாலையை குவைத்தில் நிர்வகித்து வருகிறார்கள். இது 1973 இல் அமைக்கப்பட்டது. அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தை போல் இஸ்லாமிய மற்றும் உலக கல்வி ஆகிய இரண்டையும் போதிக்கும் இப்பாடசாலையில் ஆரம்ப, இடைநிலை, இரண்டாம் நிலை வகுப்புகள் நடைப்பெறுகிறது.
உலகில் நடைப்பெறும் பல இஸ்லாமிய கருத்தரங்குகள் மற்றும் சொற்பொழிவுகளில் பங்கு கொள்ளும் இவர்கள் 1988 ஆம் ஆண்டு உலக இஸ்லாமிய பிரச்சார மற்றும் தகவல் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்கள்.
அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்