அஸ்ஸையித் ஷெய்க் முஹம்மத் யாகூபி
ஷெய்க் முஹம்மத் யாகூபி அவர்கள் 1963ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி சிரியா நாட்டில் டமஸ்கஸ் என்னும் ஊரில் பிறந்தார்கள். இவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் வந்தவர்கள். இவர்கள் டமஸ்கஸ் நகரில் வாழ்ந்த மாபெரும் அறிஞராக விளங்கிய அஸ்ஸையித் இப்ராஹீம் அல் யாகூபி அவர்களின் மகனாவார்கள். இவர்களின் பாட்டனார் இஸ்மாயில் அல் யாகூபி அவர்கள் மிக பிரபல அறிஞரும் சூபி தலைவரும் ஆவார்கள்.
ஷெய்க் யாகூபி அவர்கள் சிறுவயது முதல் அல் குர்ஆன், ஹதீத் கலை, பிக்ஃ கலை, தர்க்கக்கலை போன்ற இஸ்லாமிய கல்விகளை தனது தந்தையிடம் கற்றார்கள். இவர்களின் தந்தையிடம் இருந்து ஷெய்க் யாகூபி அவர்கள் பத்வா, ஹதீஸ் தொகுப்பு போன்றவற்றுக்கான இஜாஸத்தை (கற்பிப்பதற்கான அனுமதியை) பெற்றுக்கொண்டார்கள். அதேபோல, தன் தந்தையிடமிருந்து இவர்கள் தசவ்வுப் கல்வியையும் கற்றுகொண்டார்கள்.
மேலும் இவர்கள் சிரியா நாட்டிலுள்ள ஏராளமான உலமாக்களிடமும் இஜாஸத் பெற்றுள்ளார்கள். அவர்களில் சிரியாவின் மாலிகி முப்தி மக்கி அல் கிதானி, சிரியாவின் ஹனபி முப்தி முஹம்மத் அபுல் யுஸ்ர், துனிசியாவின் ஜைனுலாப்தீன், டமஸ்கஸின் அப்துல் ரஹ்மான் அல் ஷகூரி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்.
இவர்கள் 12 வயதாக இருக்கும்போது தங்களது முதல் கஸீதாவை இயற்றினார்கள். அது கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களை புகழ்ந்து உதவி தேடி எழுதப்பட்டதாகும். தங்களது 11 ஆம் வயதில் இவர்கள் அல்குர்ஆன் மற்றும் தஜ்வீத் ஆகியவைகளை தர்விஷிய்யா பள்ளிவாசலில் கற்பிக்க தொடங்கினர். தமது 14 ஆம் வயதில் தமது முதல் ஜும்ஆ குத்பாவை அல் ஸாதாத் பள்ளிவாசலில் நிகழ்த்தினர். தமது 17 ஆம் வயதில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான இமாமாகவும் குத்பா நிகழ்த்தவும் நியமிக்கப்பட்டனர். ஆன்மீக அறிவுகளை கற்பிப்பதற்கான ஆசிரியராக தமது 20 ஆம் வயதில் நியமிக்கப்பட்டனர்.
1987 ஆம் ஆண்டு ஷெய்க் யாகூபி அவர்கள் டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் அரபி இலக்கியத்துக்கான பட்டப்படிப்பை முடித்தார்கள். பின்னர் பெய்ரூட் அரபி பல்கலைக்கழகத்திலே இரண்டு வருடங்கள் தத்துவஞானம் கற்றார்கள். 1992 இல் இங்கிலாந்து சென்ற ஷெய்க் யாகூபி அவர்கள் அங்கே பல ஆங்கில கற்கைநெறிகளை ஒரு வருடத்துக்குள் பூர்த்தி செய்தார்கள். பின்னர் ஸ்வதிஷ் மொழியையும் கற்றார்கள்.
பின்னர் சுவீடனில் அரபி இலக்கியத்துக்கான ஆய்வாளராகவும் ஆசிரியராகவும் கடமை புரிந்தார்கள். பின்னர் 1999 இல் ஸ்வீடன் இஸ்லாமிய சமூகம் அவர்களை சுவீடனுக்கான முப்தியாக நியமித்தது.
2000 ஆம் ஆண்டு சிரியா திரும்பிய ஷெய்க் யாகூபி அவர்கள் அல் ஹஸன் பள்ளிவாசல் மற்றும் உமய்யாத் பள்ளிவாசல்களில் கற்பித்து வந்தனர். அங்கே அகீதா, தப்ஸீர், ஹதீஸ், தசவ்வுப், பிஃஹ், உஸூல் ஆகியவைகளை கற்றுக்கொடுத்தார்கள்.
அரபி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இவர்கள் அரபு நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு சென்று தஃவா பணி செய்து வருகிறார்கள். இவர்கள் ஏராளமான இஸ்லாமிய நூல்கள் எழுதியுள்ளார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த இஸ்லாமிய மாநாடுகள் கருத்தரங்குகளில் பங்குபற்றி உரையாற்றியுள்ளார்கள். இவர்களிடம் ஏராளமானவர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளார்கள்.
சிரியா அரசிற்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக 2011 ஆம் ஆண்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது மொரோக்கோவில் வசித்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் ஒருவாராக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் யாகூபி அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
English - தமிழ்