ஷெய்க் யஹ்யா ருதுஸ்
உஸ்தாத் யஹ்யா ருதுஸ் அமெரிக்காவின் மிஸுரியில் பிறந்தார்கள். 19 வயதாக இருக்கும்போது இஸ்லாத்தை ஏற்ற இவர்கள் இஸ்லாம் சம்பந்தமாக ஆரம்ப கால கல்விகளை ஷெய்க் ஹம்ஸா யூஸுப் அவர்களிடம் கற்றார்கள்.
1998 இல் முழு நேர கல்வியை மேற்கொள்ள மொரித்தானியா சென்ற இவர்கள் அங்கே மாபெரும் அறிஞர் ஷெய்க் முராபித் அல் ஹஜ் அவர்களிடம் கல்வி பயின்றனர். பின்னர் சிரியா டமஸ்கஸ்ஸில் அரபி, இலக்கணம், குர்ஆன் ஓதுதல் போன்றவைகளை கற்றார்கள்.
2000 ஆம் ஆண்டு யெமன் சென்று ஹழரமௌத் தாருல் முஸ்தபா பல்கலைக்கழகத்தில் அரபு இஸ்லாமியக் கற்கைகளை நிறைவு செய்தார்கள். அந்த காலப்பகுதியில் புகழ் பெற்ற அறிஞர் பெருமக்களான ஷெய்க் ஹபீப் உமர், ஷெய்க் ஹபீப் அலி ஜிப்ரி போன்றோரிடமும் கற்றார்கள். தப்ஸீர், ஹதீஸ், சட்டத்துறை, ஸீரா போன்ற கற்கைகளை பூர்த்தி செய்தார்கள்.
2005 ஆம் ஆண்டு அமெரிக்கா திரும்பிய இவர்கள் புகழ் பெற்ற ஸைத்தூனா கல்லூரியில் முழு நேர ஆசிரியராக பணிபுரிந்தார்கள். பின்னர் மீண்டும் பல்வேறு நாடுகளுக்கு கல்விக்காக சென்ற இவர்கள் பல்வேறு இஸ்லாமிய நிகழ்வுகளிலும் பங்குப்பற்றினர்.
2008 ஆம் ஆண்டு நடைப்பெற்ற COMMON WORD மாநாட்டில் இவர்கள் மௌலானா ஷெய்க் ஹபீப் அலி ஜிப்ரி அவர்களின் உத்தியோகப்பூர்வ மொழிப்பெயர்ப்பாளராவார்கள். அதேப்போல், ஷெய்க் ஹபீப் உமர் அவர்களுக்கும் மொழிப்பெயர்ப்பாளராகவும் இருந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு கலிபோர்னியா திரும்பிய இவர்கள் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டத்தை பெற்றுக்கொண்டார்கள்.
உஸ்தாத் யஹ்யா கனடாவை தளமாகக் கொண்ட Seekers Guidance நிறுவனத்தில் வருகைதரு விரிவுரையாளராக உள்ளார்கள். Ta'leef Collective வில் பகுதிநேர விரிவுரையாளராகவும் ஸைய்துனா உயர்கல்வி நிறுவகத்தில் முழுநேர விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார்கள்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் உஸ்தாத் யஹ்யா அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்