ஷெய்குல் இஸ்லாம் கலாநிதி தாஹிருல் காதிரி
ஷெய்குல் இஸ்லாம் அவர்கள் 1951ம் ஆண்டு பெப்ரவரி 19ம் திகதி பாகிஸ்தானில் ஜாங் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் அறிஞர் கலாநிதி ஷைக் பரிதுத்தீன் காதிரி அவர்களின் மகன் ஆவார்கள்.
சிறு வயது மார்க்க கல்வி மற்றும் உலக கல்வி ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கிய இவர்கள் மதீனாவில் அபூ அய்யூப் அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் அமைக்கப்பட்ட மத்ரஸதுல் அல் உலும் அஷ்ஷரியா என்னும் மதரஸாவில் தனது 12வது வயதிலேயே மார்க்க கல்வியை ஆரம்பித்தார்கள்.
1970 ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆனார்கள். அதே நேரம் தமது பாரம்பரிய இஸ்லாமிய கற்கைகளையும் பூர்த்தி செய்தார்கள். 1972 ஆம் ஆண்டு இஸ்லாமிய கல்வியில் பஞ்சாப் பல்கலைகழகத்தில் தங்க பதக்கத்தோடு மாஸ்டர் பட்டம் (M.A) பெற்றார்கள். 1974 ஆம் ஆண்டு சட்டத்துறையில் பட்டதாரி ஆன இவர்கள் பின்னர் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக பயிற்சி பெற்றார்கள். 1978 ம் ஆண்டு இஸ்லாமிய சட்டக் கலையில் Phd கலாநிதி பட்டத்தை பெற்று கொண்டார்கள்.
அவர்கள் உச்ச நீதிமன்றம் மற்றும் பாகிஷ்தான் பெடரல் ஷரீஆ நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றினார்கள். அதேபோல் பாகிஸ்தான் கல்வி அமைச்சில் இஸ்லாமிய விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகராக பணியாற்றினார்கள். லாஹூரிலுள்ள பஞ்சாப் பல்கலைகழக இஸ்லாமிய சட்ட பீடத்தில் இவர்கள் பேராசிரியராகவும் இவர்கள் பணியாற்றி உள்ளனர். இவர்களே அந்த பல்கலைகழகத்தின் வரலாற்றில் மிக குறைந்த வயதில் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் 1981 ஆம் ஆண்டு மின்ஹாஜுல் குர்ஆன் அமைப்பை லாஹூரில் உருவாக்கினார்கள். கடந்த 30 வருடங்களில் மின்ஹாஜுல் குர்ஆன் சுமார் 90 நாடுகளில் பரவியுள்ளது. உலகிலுள்ள மிக பெரும் அரச சார்பற்ற நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இவர்கள் பாகிஸ்தான் லாகூர் மின்ஹாஜ் பல்கலைகழகத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார்கள். இந்த பல்கலைகழகத்தில் பல மாணவர்கள் உயர் கல்வி பெற்று வருகிறார்கள். இவர்கள் மின்ஹாஜ் கல்வி சமூகம் என்னும் அமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக இன்று பாகிஸ்தானில் சுமார் 570 பாடசாலைகளும் கல்லூரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மின்ஹாஜ் பொதுநல அறக்கட்டளை என்று ஒரு சமூக சேவை அமைப்பை உருவாக்கி அதன் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு சமூக சேவை திட்டங்கள் இடம்பெற்று வருகிறது.
அதே போல் மின்ஹாஜுல் குர்ஆன் உலமா கவுன்சில், மின்ஹாஜுல் குர்ஆன் பெண்கள் அமைப்பு, மின்ஹாஜ் இளைஞர் அமைப்பு, முஸ்தபவி மாணவர் அமைப்பு மற்றும் முஸ்லிம் கிறிஸ்தவர் உரையாடல் அமைப்பு ஆகியவற்றின் ஸ்தாபகரும் இவர்களே ஆவர்.
இவர்கள் உருது, ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிதாபுகளை எழுதி உள்ளார்கள். அதேபோல் சுமார் 5000 ற்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை செய்துள்ளார்கள். அவை காஸெட், சிடி, டிவிடி என பல்வேறு முறைகளில் இணையத்தில் காண கிடைக்கிறது.
இவர்களின் புகழ் பெற்ற அல் குர்ஆன் தொடர்ப்பான ஆக்கங்களாக, இர்பானுல் குர்ஆன் (அல் குர்ஆனின் உர்து மற்றும் ஆங்கில மொழிப்பெயர்ப்பு), தப்ஸீர் மின்ஹாஜுல் குர்ஆன், தப்ஸீர் சூரா அல் பாத்திஹா, கஷ்ப் அல் கிதா அன் மஃரிபத் அல் அக்ஸம் லில் முஸ்தபா (நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் சிறப்பினை எடுத்து சொல்லும் அரபு மொழியிலான தப்ஸீர்), தஸ்மிய்யா அல் குர்ஆன் ஆகியவற்றை கூறலாம்.
இதே போல் ஹதீது துறை, இஸ்லாமிய அகீதா, நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அன்னவர்களின் சிறப்புகள், இஸ்லாமிய சட்டம் மற்றும் சட்ட மூலாதாரம், இஸ்லாமிய அரசியல் மற்றும் பொருளாதாரம், தஸவ்வுப் (சூபித்துவம்) மற்றும் ஆன்மிகம், மனித உரிமைகள் மற்றும் நவீன விஞ்ஞானம் என அவர்களின் நூல்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் இவர்கள் கௌரவத்திற்குரிய பட்டியலில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்குல் இஸ்லாம் கலாநிதி தாஹிருல் காதிரி அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி மென்மேலும் முஸ்லிம் உலகிற்கு சேவை செய்ய அருள் புரிவானாக.
English - தமிழ்