பேரறிஞர் ஷெய்க் சுக்ரீ லஹ்fபி
ஷெய்க் சுக்ரி இப்னு அஹ்மத் அல் சுக்ரி புகழ்பெற்ற இஸ்லாமிய சட்டவல்லுனர் ஆவார்கள். ஹனபி மத்ஹபை பின்பற்றும் இவர்கள் தற்போது ஷாதிலி-தர்கவி-ஹாஷிமி தரீக்காவின் தலைவராகவும் இருக்கிறார்கள். குர்ஆன், கவிதை, எழுத்தணிகலை ஆகிய துறைகளிலும் புகழ்பெற்று விளங்குகிறார்கள்.
ஷெய்க் சுக்ரி 1920 ம் ஆண்டு சிரியாவின் டமஸ்கஸ் நகரில் பிறந்தார்கள். இவர்களது தந்தையார் ஒரு காலணி தைப்பவர். ஆனால் மிக புத்திசாலியும் பொறுமையும் பரந்த மனப்பான்மையும் உள்ள ஒரு நல்லவர். தாயார் இறைபக்தி மிக்க ஒரு பெண்மணியாவர்கள்.
1944 ஆம் ஆண்டு தமது ஆரம்ப இடை நிலை கல்வியை பூர்த்தி செய்த ஷெய்க் சுக்ரி அவர்கள் மேல்நிலை பள்ளி படிப்பை நான்கு வருடங்கள் கழித்து நிறைவு செய்தார்கள். ஒன்பதாவது வயதிலேயே அல்குர்ஆனை மனனம் செய்தார்கள். தமது பட்டப்படிப்பை டமஸ்கஸ் பல்கலைகழக ஷரீஆ பீடத்திலே தொடர்ந்த ஷெய்க் அவர்கள் பின்னர் டமஸ்கஸ், தர்ரா, அலிப்போ போன்ற நகரங்களில் ஆரம்ப பாடசாலைகளில் கற்பித்தார்கள்.
இவர்கள் ஆண், பெண் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் குர்ஆனை மனனம் செய்ய நிறைய பயிற்சி வகுப்புகளை நடத்தினர். இதனால் பலர் மிக்க பயனடைந்துள்ளார்கள். நிறைய மாணவ மாணவிகள் இவர்களின் வழி காட்டுதலில் அல் குர்ஆனை மனனம் செய்துள்ளனர்.
இவர்கள் அரபியோடு பாரசீக மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்கள். ஷெய்க் அவர்கள் எழுதிய புத்தகம் “துபாத் அல் அஸ்ர் பி இல்ம் அல் கிராத் முதாவாதிர் அல் அஷ்ர்” என்ற பெயரில் 1966ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
ஹாபிழ்களாக விரும்புவோருக்கு ஷெய்க் அவர்கள் வழங்கியுள்ள ஆலோசனை “தூங்க செல்ல முன்னரும் தூங்கி எழும்பியதும் அல்குர்ஆனை மீட்ட வேண்டும்” என்பதாகவும்.
ஷெய்க் சுக்ரி அவர்களின் மனைவியவர்கள் ஸைய்யதுனா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்களாவர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
ஷெய்க் சுக்ரி அவர்கள் புகழ் பெற்ற ஒரு அறிஞரும் மிக்க பணிவும் மிக்க பண்பாளரும் ஆவார்கள். மாபெரும் ஒரு ஷெய்க் ஆக இருந்தும் இன்னும் ஷாதுலி தரிக்காவின் ஹழரா மஜ்லிஸ்களில் கலந்து கொள்வோருக்கு தண்ணீர் பங்கீடு செய்பவராக அவர்கள் இருக்கின்றனர். அதேபோல், பள்ளிவாசலில் உள்ள காலணிகளை அடுக்கி வைப்பவராகவும் இருக்கின்றனர். அந்தளவு பணிவு மிக்க பண்பாளர் அவர்கள். எப்பொழுது தலை குனிந்த நிலையில் கீழே பார்ப்பவராகவே இருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று வகைக்கு மேலான ஆடைகள் அணிந்து அவர்களை யாரும் பார்த்ததில்லை.
மாபெரும் ஷெய்க் முஹம்மத் அல் யாகூபி கூறினார்கள்: ஷெய்க் ஷுக்ரி அவர்கள் தன்னடக்கத்தின் துருவம் என்று.
அதேபோல, ஷெய்க் பூத்தியின் மகனான ஷெய்க் தௌபீஃ அல் பூத்தி அவர்கள் கூறினார்கள்: ஸஹாபி ஒருவரை காண விரும்பினால் ஷெய்க் சுக்ரி அல் லஹ்பி அவர்களைப் பார்க்குமாறு.
அல்லாஹ் அன்னாருக்கு நீண்ட ஆயுளை வழங்கி பாதுகாப்பானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்