அஸ்ஸையித் ஷெய்க் முஹம்மத் பின் யஹ்யா நினோவி
ஷெய்க் முஹம்மத் பின் யஹ்யா நினோவி அவர்கள் 1965ம் ஆண்டு ஸிரியா நாட்டில் அலெப்போ எனும் ஊரில் பிறந்தார்கள். இவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வம்சாவழியில் வந்தவர்கள். இவர்களில் குடும்ப பூர்வீகம் தென் ஈராக்கிலுள்ள நினோவா என்னும் கிராமமாகும்.
இவர்கள் ஆரம்ப கல்வியை இவர்களின் தந்தையான ஸைய்யித் யஹ்யா பின் முஹம்மத் அவர்களிடம் கற்றார்கள். அல்குர்ஆன் மனனம், அகீதா, பிக்ஃ, ஹதீத், இஹ்ஸான் போன்ற கல்விகளை கற்று இஜாஸத்தையும் பெற்றுக் கொண்டார்கள். மேலும் இஸ்லாமிய மார்க்க சட்டக் கல்வியை அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் கற்றார்கள். மேலும் மக்கா, மதீனா, ஸிரியா, பாலஸ்தீனம், மொரோக்கோ, எகிப்து, சூடான் போன்ற நாடுகளில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞர்களிடமும் மார்க்கக் கல்வியை கற்றுக் கொண்டார்கள்.
இவர்கள் ஏராளமான இஸ்லாமிய நூல்களை அதிலும் ஹதீஸ் மற்றும் தௌஹீத் சம்பந்தமாக அரபியில் எழுதியுள்ளார்கள். அவை இப்போது ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்க ஜார்ஜியா மாநிலத்திலுள்ள மஸ்ஜிதுல் மதீனாவில் இமாமாக பணியாற்றிவரும் இவர்கள் அங்கே வாராந்த குத்பா பிரசங்கமும் மார்க்க விளக்க வகுப்புகளும் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஜார்ஜியா பல்கலைகழகத்தில் உடலியல் சம்பந்தமான பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளனர்.
உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த இஸ்லாமிய மற்றும் சமாதான மாநாடுகளில் பங்குபற்றி உள்ளார்கள். உலகில் பல்வேறு நாடுகளுக்கு சென்று தஃவா பணி செய்து வருகிறார்கள். வன்முறைகளுக்கு எதிராகவும் சமாதானத்திற்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
தற்போது தமது குடும்பத்தோடு அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாநிலத்தில் அட்லாண்டா என்னும் இடத்தில் வசித்து வரும் இவர்களுக்கு இரண்டு மகன்மார்கள் உள்ளனர்.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் ஒருவராகவும் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் முஹம்மத் பின் யஹ்யா அல் நினோவி அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
English - தமிழ்