மௌலானா அஸ்ஸையித் ஷெய்க் நாஸிம் ஹக்கானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)
உலக இஸ்லாமிய ஆன்மீக தலைவர்/ நக்ஷபந்தி ஹக்கானி தரீக்காவின் ஆன்மீக தலைவர்
மௌலானா ஷெய்க் நாஸிம் ஹக்கானி அவர்கள் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் திகதி ஸைபிரஸ் நாட்டில் லர்னகா என்னும் ஊரில் பிறந்தார்கள். அன்னார் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் பரம்பரையில் உதித்தவர்கள். இவர்களின் தந்தை முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு பரம்பரையிலும் தாய் மௌலானா ரூமி ரலியல்லாஹு அன்ஹு பரம்பரையிலும் உதித்தவர்கள்.
இவர்களின் வீட்டிற்கு பக்கத்தில் ஸஹாபி பெண்மணியான உம்மு ஹரம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அடக்கஸ்தலம் உள்ள ஸாவியா அமைந்துள்ளது. மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள் சிறு வயதிலேயே அந்த ஸாவியாவிலேயே அதிக நேரத்தை செலவழிக்க கூட்டியவர்களாக இருந்தார்கள். 4,5 வயதாக இருக்கும் போதே ஸாவியாவில் நடக்கும் திக்ர் மஜ்லிஸில் கலந்து கொள்வார்கள்.
மௌலானா ஷெய்க் நாஸிமின் பாட்டனார் 40 ஆண்டுகள் காதிரி தரீக்காவின் ஷெய்க்காக இருந்து மக்களை வழி நடத்தினார்கள். மௌலானா அவர்கள் சிறு வயது முதல் பாடசாலை கல்வியிலும் சிறந்து விளங்கினார்கள். கல்வி சம்பந்தமான விஷயங்களை மனனம் செய்வதிலும் சிறந்து விளங்கினார்கள்.
இவர்கள் உயர் கல்வியை ஸைபிரஸ் நாட்டிலும் 1944 ஆம் ஆண்டு விஞ்ஞான பட்டப்படிப்பை துருக்கி நாட்டில் இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டதாரி ஆனார்கள். அவர்கள் துருக்கியில் இருக்கும்போது இஸ்லாமிய பிக்ஃ சட்டக்கலை மற்றும் ஸுபிஸம் சம்பந்தமான மார்க்க கல்விகளை அந்த காலத்தில் சிறந்த அறிஞராக திகழ்ந்த ஷெய்க் ஜமாலுதீன் லுசுனி என்ற மேதையிடம் கற்று இஜாஸா (அனுமதி) பெற்றார்கள்.
இவர்களின் அறிவின் சிறப்பையும், உயர்வையும் அறிந்துக்கொண்ட இவர்களின் ஆசிரியர் மார்க்க தீர்ப்புகள் (பத்வா) ஏதாவது வெளியிடும் முன் மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்களிடம் ஆலோசனை செய்வது வழக்கம்.
மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள் ஆத்மீக (தஸவ்வுப்) கல்வியை ஷேய்குல் மஷாயிக் ஸுலைமான் ஜூருமி அவர்களிடம் கற்றார்கள். ஷெய்க் ஸுலைமான் ஜூருமி அவர்கள் ரிஜாளுல்லாஹ் ஆவார்கள். அதாவது அந்த நேரத்தில் உலகில் உயர்தரத்தில் உள்ள 313 அவ்லியாக்களில் ஒருவராவார்கள்.
சிறிது காலத்திற்கு பின் ஷேய்குல் மஷாயிக் ஸுலைமான் ஜூருமி அவர்கள் ஷெய்க் நாஸிம் அவர்களிடம் கூறினார்கள், சிரியா நாட்டுக்கு சென்று அந்தக் காலத்தில் சுல்தானுள் அவ்லியாவாக இருந்த அப்துல்லாஹ் பாயிஸ் தகிஸ்தானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து அவர்களிடம் பைஅத் எடுத்து முரீத் ஆகும் படி கூறி அனுப்பி வைத்தார்கள். மௌலானா அவர்கள் ஷெய்க் அப்துல்லாஹ் பாயிஸ் தகிஸ்தானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தேடி சிரியா வந்தார்கள்.
ஷெய்க் அப்துல்லாஹ் பாயிஸ் தகிஸ்தானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வந்து அடைய ஐந்து வருடங்கள் சென்றன. அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள் ஷரீஆ கல்வியை ஹலப், ஹமா, ஹிம்ஸ் ஆகிய இடங்களில் கற்றார்கள். ஹிம்சில் மாபெரும் நபி தோழர் ஹஸ்ரத் காலித் பின் வலித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித அடக்கஸ்தலத்தில் அமைந்துள்ள மதரஸாவில் ஷெய்க் முஹம்மத் அலி உயுன் அல் ஸுத் மற்றும் ஷெய்க் அப்துல் ஜலில் முராத் அகியோர்களிடம் ஹனபி மத்ஹபின் சட்டங்களை கற்று இஜாஸா (அனுமதி) பெற்றார்கள். அதேபோல் ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்ன் முஹம்மத் அலி உயுன் அல் ஸுத் அல் ஹனபி அவர்களிடம் இருந்து ஹதீத் கலையை கற்று இஜாஸா (அனுமதி) பெற்றார்கள்.
மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள் ஷெய்க் ஸைத் அல் சிபாய் அவர்களிடமும் கற்றார்கள். மௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்கள் சிரியா வந்து பெரும்பாலும் டமஸ்கஸில் தங்கி இருந்தபோதும் அவ்வப்போது ஹலப், ஹிம்ஸ் ஆகிய நகரங்களுக்கு வந்து போவார்கள். அப்போது அன்னவர்கள் காலித் பின் வலித் மதரசாவின் இயக்குனராக இருந்த ஷெய்க் ஸைத் அல் சிபாய் அன்னவர்களை பற்றி அறியபெற்றார்கள். ஒரு நாள், ஷெய்க் ஸைத் அல் சிபாய் அவர்கள் மௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்களுக்கு கடிதம் எழுதினர். அதில் “எங்களிடம் துருக்கியில் இருந்து வந்து கல்வி பயிலும் ஒரு விசேசமான மாணவர் இருக்கிறார்” என்று எழுதினர். அதற்கு மௌலான அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்கள் “அந்த மாணவர் எங்களுக்குரியவர். அவரை எங்களிடம் அனுப்பி வையுங்கள்” என்று பதில் அனுப்பினர். அந்த மாணவர்தான் மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள். அதன்படி மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள் டமஸ்கஸ் வந்து மௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்களிடம் பையத்து எடுத்து முரீத் ஆனார்கள். இது 1941 - 1943 காலப்பகுதியில் நடந்தது.
மௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்களின் கீழ் முப்பது வருட ஆன்மீக பயிற்சியில் இருக்கும்போது மௌலானா நாஸிம் அவர்கள் பல கல்வத்துகளை மேற்கொண்டுள்ளனர். அதிலும் அன்னவர்கள் 33 வயதாக இருக்கும்போது மௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்கள் கூறினார்கள்: "எனக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களிடமிருந்து ஒரு கட்டளை வந்துள்ளது. அதாவது நீங்கள் பக்தாத்தில் உள்ள முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பள்ளிவாசளுக்கு சென்று அங்கு 6 மாதங்கள் கல்வத்து இருக்கும்படி" என்பதாக.
இந்த கல்வத்து பற்றி மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்களே கூறும்போது: "ஐந்து நேர தொழுகைக்கு மட்டுமே நான் எனது அறையில் இருந்து வெளியேறுவேன். மற்ற எல்லா நேரங்களிலும் நான் என் அறைக்குள்ளேயே இருப்பேன். அது என்னை எப்படிப்பட்ட நிலைக்கு உயர்த்தியது என்றால், ஒன்பது மணித்தியாலத்தில் நான் முழு குர்ஆனையும் ஓதி முடித்துவிடுவேன், அதற்கு மேலதிகமாக, லா இலாஹா இல்லல்லாஹ் என்ற திக்ரை 124,000 முறையும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத்து 124,000 முறையும் ஓதி முழு தலாயிளுல் கைராத் என்னும் கிதாபையும் முழுமையாக ஓதி முடித்துவிடுவேன். அதற்கு மேலதிகமாக, நான் ஒவ்வொரு நாளும் 313,000 முறை "அல்லாஹ் அல்லாஹ்" என்று ஓதி வருபவனாக இருந்தேன். இந்த காலப்பகுதியில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காட்சிகளை காணக்கூடியவனாக இருந்தேன். அவர்கள் என்னை ஒரு படிநிலையிலிருந்து இன்னொரு படிநிலைக்கு உயர்த்தி சென்றனர். கடைசியில் இறை சந்நிதானத்தில் பனா ஆகும் நிலைக்கு என்னை கொண்டு சென்றனர்."
இந்த பொய் உலகில் இருந்து மறையும் முன் மௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்கள் மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்களை தமது கலிபா ஆகவும் தமது ஆன்மீக வாரிசாகவும் நியமித்தார்கள். மேலும், மௌலானா ஷெய்க் நாஸிம் அன்னவர்களின் பெயரை நக்ஷபந்தி தரீக்காவின் ஸில்ஸிலாவில் சேர்க்கும் படியும் கட்டளை இட்டார்கள். அன்றிலிருந்து மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள் பல்வேறு கீழைத்தேய நாடுகளுக்கு சென்று ஆன்மீக பணியை செவ்வனே செய்து வருகிறார்கள். அத்தோடு மேலைத்தேய நாடுகளில் உள்ள மக்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைத்து, இஸ்லாமிய உண்மை கோட்பாடுகளான அன்பு, சமாதானம் போன்றவற்றை மக்களுக்கு எடுத்து காட்டி பல ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமாக இருந்துள்ளார்கள். மேலும் மௌலானா அவர்கள் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்கள்.
மௌலானாவின் அன்பு துணைவியார் காலம் சென்ற அன்னை ஹஜ்ஜா ஆமினா அன்னவர்களும் ஒரு மாபெரும் இறைநேசராவர்கள். அன்னையார் இஸ்லாத்திற்காக நிறைய சேவை செய்துள்ளனர். பல நூல்களை எழுதியும் பல பெண்களுக்கு நேர்வழி காட்டியும் உள்ளனர். அதிலும் அன்னையவர்கள் எழுதிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் முக்கியமான ஒன்று.
மௌலானாவிற்கு முஹம்மத், பஹாஹுத்தீன், நாசிஹா, ருகையா என்று நான்கு பிள்ளைகளும் பல பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
91 வயது வரை ஸைபிரஸ் நாட்டில் வசித்து வந்த மௌலானா அவர்கள் சத்திய மார்க்கத்தை பாதுகாத்தும், ஆன்மீக வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்து சொல்லியும் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவை SALTANAT TV, மற்றும் வெப்சைட்கள் மூலம் ஒளிபரப்படுகிறது. மாஷா அல்லாஹ் மௌலானா அவர்களின் முரீதுகள் (மாணவர்கள்) உலகில் இலட்சக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். உலக புகழ்பெற்ற அறிஞர்கள், மன்னர்கள், நாட்டின் தலைவர்கள், இஸ்லாமிய பாடகர்கள் என்று பட்டியல் நீளுகிறது. ஒவ்வொரு நாளும் உலகின் பல பாகங்களில் இருந்து இஸ்லாமிய அறிஞர்களும் முக்கிய பிரமுகர்களும், முரீதீன்களும், முஹிபீன்களும் ஸைபிரஸ் வந்து மௌலானாவை தரிசித்து அன்னாரின் ஆசியை பெற்று சென்றனர்.
இவர்கள் 2014 ம் வருடம் மே மாதம் 7ம் திகதி இறையடி சேர்ந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உயர்ந்த தரஜாவை வழங்குவானாக! அவர்களின் பொருட்டால் எமக்கும் உயர்ந்த தரஜாவை தருவானாக! ஆமீன்.
English - தமிழ்