ஷெய்க் முஈஸ் மஸூத்
ஷெய்க் முஈஸ் மஸூத் அவர்கள் 1978 ஆம் ஆண்டு எகிப்தில் பிறந்தார்கள். அரபுலகின் மிக புகழ் பெற்ற பேச்சாளராகவும் தொலைக்காட்சி மற்றும் வானொலி தொகுப்பாளராகவும் உள்ளார்கள். இஸ்லாமிய ஆன்மிகம், மதங்களுக்கிடையிலான உரையாடல், நவீன உலகில் இஸ்லாம் போன்ற தொனிப்பொருள்களில் இவர்களது நிகழ்ச்சிகள் நடைப்பெறுகின்றன.
சிறு வயதில் அல்குர்ஆனை மனம் செய்த இவர்கள் கெய்ரோவிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாவார்கள். இஸ்லாமிய அகீதா மற்றும் கல்விகளை புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர்களிடம் கற்றுள்ளர்கள். பல முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத நாடுகளுக்கு பிரயாணம் செய்துள்ள இவர்கள் தற்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் MPhil பட்டப்படிப்பை முடித்து கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரது உரைகள் கூடுதலாக இளைஞர், யுவதிகளை ஈர்ப்பதாக அமைந்துள்ளன. இவர்களின் இஸ்லாம் சம்பந்தப்பட்ட முதல் நிகழ்ச்சி "Parables in the Qur'an" (அல் குர்ஆனிலுள்ள நீதிக்கதைகள்) என்ற ஆங்கில நிகழ்ச்சியாகும். இது உலகம் முழுவதும் பல பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த தொடர்கள் முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆன்மீக கட்டளைகளை சரிவர நிறைவேற்றி கொண்டே வெற்றிகரமான ஒரு உலக வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறையை போதிக்கக்கூடிய நிகழ்ச்சியாகும். இவர்களின் முதல் அரபி நிகழ்ச்சி அல் தாரிக் அல் ஸாஹ் என்பதாகும். அது 2007ஆம் ஆண்டு ரமலானில் ஒளிப்பரப்பானது. முஸ்லிம் உலகம் எதிர்கொள்ளும் போதை, மது, பாலியல் பிரச்சினை, தீவிவாதம் போன்ற விடயங்களை மையமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரிதும் புகழ் பெற்றது. YOUTUBE இல் இருந்து மட்டும் இந்த நிகழ்ச்சி 15 லட்சம் தடவைகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் பல்வேறு நாடுகளில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டு உள்ளனர். மேற்குலகு மற்றும் அரேபிய நாடுகளில் இவர்களது உரைக்கு மிகுத செல்வாக்கு உள்ளது. அண்மையில், இவர்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூஸ்வீக் இணைந்து நடத்திய "ON FAITH" என்னும் மதம் மற்றும் நம்பிக்கை சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிகழ்ச்சியில் பங்குபற்ற அழைக்கப்பட்டனர். 2006 இல் அபுதாபியில் நடைப்பெற்ற மதங்களுக்கிடையிலான மாநாட்டில் "நவீன உலகில் இஸ்லாம்" என்னும் தலைப்பில் ஆற்றிய உரை YOUTUBE இல் 20 லட்சம் தடவைகள் பார்வை இடப்பட்டுள்ளது.
FACEBOOK மற்றும் TWITTER போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் அதிக செல்வாக்குள்ள இவர்களின் பக்கங்கள் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பின்பற்றப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு இவர்கள் எகிப்தின் மிக செல்வாக்குள்ள சமய அறிஞர் என்று பெயரிடப்பட்டர்கள். 2011 ஆம் ஆண்டு "The Economist" சஞ்சிகை உலகின் செல்வாக்குள்ள ஐந்து முஸ்லிம் பேச்சாளர்களில் ஒருவராக கலாநிதி முஈஸ் மசூதையும் தெரிவு செய்திருந்தது.
உலகில் மிகச் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்களின் பட்டியலிலும் இவர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.
2012ஆம் ஆண்டு சுவிட்ஸலாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார பேரவையின் மாநாட்டிலும் கலந்து கொண்ட கலாநிதி மசூத்தின் உரைகள் ஸுபிச செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்துள்ளன. பேராசிரியர் ஸஈத் ரழழான் பூத்தி, ஷெய்க் ஹபீப் அலி ஜிப்ரி ஆகியோர் கலாநிதி முஈஸ் மஸ்ஊதில் தாக்கம் செலுத்தியுள்ளார்கள்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்