அஸ்ஸையித் ஷெய்க் ஹிஷாம் கப்பானி
மௌலானா ஷெய்க் ஹிஷாம் கப்பானி அவர்கள் லெபனான் நாட்டில், பெய்ரூட் நகரில் 1945ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் திகதி பிறந்தார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்களின் முரீதாகவும் கலீபா ஆகவும் இருக்கிறார்கள்.
மார்க்க கல்வியின் பட்டப்படிப்பை சிரியாவிலும், மருத்துவ கல்வியை பெல்ஜியம் நாட்டிலும், ரசாயனவியல் பட்டப்படிப்பை லெபனான் நாட்டிலும் கற்றார்கள்.
மௌலானா ஷெய்க் நாஸிம் அன்னவர்களின் வேண்டுக்கோளின் படி 1991 ஆம் ஆண்டிலிருந்து இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் 23 ஸுfபி நிலையங்களையும் இஸ்லாமிய கற்கை நிலையங்களையும் உருவாக்கி அதன் மூலம் ஏராளமான மக்களை இஸ்லாத்திற்கு எடுத்துள்ளார்கள். இன்னும் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளிலும் ஸுfபி நிலையங்களை நிறுவி ஏராளமானவர்களை இஸ்லாத்திற்கு எடுத்துள்ளார்கள். இஸ்லாத்தின் உண்மை கோட்பாடுகளான அன்பு, சமாதானம், சகோதரத்துவம் என்பவற்றை மக்களுக்கு போதித்து அதை கொண்டு பலர் இஸ்லாத்தை தழுவ காரணமாய் இருந்துள்ளனர்.
அமெரிக்காவின் இஸ்லாமிய சுப்ரீம் கவுன்ஸில் தலைவராகவும், அஸ்ஸுன்னாஹ் பவுன்டேசனின் தலைவராகவும், அமெரிக்கா நக்ஷபந்தி ஹக்கானியின் தலைவராகவும் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தில் (இங்கிலாந்தில்) ஸுபி முஸ்லிம் கவுன்ஸிளை நிறுவி உள்ளார்கள்.
அமெரிக்காவின் இஸ்லாமிய சுப்ரீம் கவுன்ஸில் தலைவராக இருந்து பல இஸ்லாமிய கருத்தரங்குகளையும் சமாதான கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றனர். மேலும் பல நூல்களையும் இவர்கள் எழுதி உள்ளார்கள். அதில் புகழ் பெற்றவை "The Prohibition of Domestic Violence", "Sufi Science of Self Realization", "Encyclopedia of Islamic Doctrine and Beliefs", "Classical Islam and the Naqshbandi Sufi Order" என்பவை முக்கியமானவை.
இவர்கள் உலக புகழ் பெற்ற பல்வேறு பல்கலைகழகங்களில் உரை நிகழ்த்தி உள்ளார்கள். ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம், கலிபோர்னியா பல்கலைகழகம், சிகாகோ பல்கலைகழகம், கொலம்பியா பல்கலைகழகம், அமெரிக்க பல்கலைகழகம், ஹோவார்ட் பல்கலைகழகம் என்பன அதில் அடங்கும்.
ஷெய்க் ஹிஷாம் கப்பானி அவர்கள் மார்க்க சேவையோடு பொதுநல சமூக சேவையிலும் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள். கென்யாவில் தண்ணீர் மற்றும் பொதுநல வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக அவர்களால் சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும் நைரோபி நாட்டில் அநாதை ஆசிரங்களுக்கு நிதி மற்றும் பொருட்கள் கொடை வழங்கி வருகின்றனர். மேலும் கென்யா, நைரோபி, தன்சானியா, உகண்டா ஆகிய நாடுகளில் ரமலானில் உணவு வழங்கல் திட்டம் ஒன்றையும் மேற்கொண்டு அதன் மூலம் பலர் உணவு கிடைக்க வழி வகுத்தனர்.
2011 ஆம் ஆண்டு இவர்களும் Dr. ஹுமைரா சியாத் அவர்களும் இணைந்து அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் எழுதிய பத்வாவானது முக்கியமானது. அது "உள்நாட்டு வன்முறைகளின் தடை" என்னும் பெயரில் வெளிவந்தது. ஷெய்க் ஹிஷாம் கப்பானி அவர்கள் வன்முறைகளுக்கும் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்திற்கும் எதிராக சிறப்பான முறையில் செயற்பட்டு வருகின்றனர். மாற்று மதத்தவருக்கு இஸ்லாம் என்பது வன்முறையை தூண்டும் மார்க்கம் அல்ல என்பதையும் அது அமைதியையும் சமாதானத்தையும் போதிக்கும் மார்க்கம் என்பதையும் மிக சிறப்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் பல ஆயிரம் மக்கள் இஸ்லாத்துக்கு வர துணை புரிந்து உள்ளனர்.
இவர்கள் மௌலானா ஷெய்க் நாஸிம் அன்னவர்களின் மகளான ஹஜ்ஜா நாஸிஹா ஆதில் அவர்களை மணந்து உள்ளார்கள். அவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகளும் 1 பெண் பிள்ளையும் உள்ளனர்.
2012 ஆம் ஆண்டு உலகின் 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் இவர்களும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டனர்.
இஸ்லாத்திற்காக அன்னார் மென்மேலும் சேவை செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக.
English - தமிழ்