ஷெய்க் ஹம்ஸா யூஸுப்
மேற்கு உலகிலேயே புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞராக கருதப்படும் ஷெய்க் ஹம்ஸா யூஸுப் அவர்கள் 1958ஆம் ஆண்டு அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் பிறந்தார்கள். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவர்களின் ஆரம்பகால பெயர் மார்க் ஹன்சன் என்பதாகும். 1977 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவினார்கள்.
பின்னர் ஐக்கிய அரபு இராச்சியம், சவுதிஅரேபியா, மொரோக்கோ, முர்தானியா, அல்ஜீரியா போன்ற நாடுகளில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான காலப்பகுதியை இஸ்லாமிய கல்விக்காக அர்ப்பணித்தார்கள். இஸ்லாமிய உலகில் புகழ்பெற்ற பல அறிஞர்களிடம் இவர்கள் கல்வி பயின்று அவர்களிடம் இருந்து கற்பிப்பதற்கான அனுமதியை (இஜாஸத்) பெற்றுக்கொண்டார்கள். இன்னும் அமெரிக்காவின் சென்-ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தார்கள்.
இவர்கள் உலகின் பழைமை வாய்ந்ததும் புகழ்பெற்றதுமான மொரோக்கோவின் அல் கராவிய்ன் பல்கலைக்கழகத்தில் கற்பித்த முதல் அமெரிக்க பேராசிரியர் இவர்களாவர். அமெரிக்காவின் முதலாவது இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனமான ஸைத்தூனா கல்லூரியை 1996 இல் ஆரம்பித்தார்கள். ஸ்டான்பெட் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைக்கான ஆலோசகராகவும் இவர்கள் பணியாற்றுகிறார்கள்.
இஸ்லாமிய நிதித்துறை அறிஞரான பேராசிரியர் அப்துல்லாஹ் பின் பைய்யாஹ் அவர்களைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் The Global Center for Guidance and Renewal அமைப்பின் உபதலைவராகவும் இவர்கள் பணியாற்றுகிறார்கள். இஸ்லாமிய இளைஞர்களை இலக்காகக் கொண்டு இவர்கள் ஆரம்பித்த ரிஹ்லா பயிற்சிப் பாசறை புகழ்பெற்று விளங்குகிறது.
பெண்கள் உரிமை இஸ்லாமிய நீதித்துறை, மேற்குலகில் இஸ்லாம், தலைமைத்துவம், சமூக நீதி, பயங்கரவாதம், சமாதானம், போன்ற தலைப்புக்களில் பல்வேறு உரைகளை ஆற்றியுள்ளார்கள். உலகின் புகழ்பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு மகாநாடுகளிலும் இவர்கள் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்கள். இன்னும் அதிகமான புகழ்பெற்ற அரபி நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 42 ஆம் நபராக ஷெய்க் ஹம்ஸா யூஸுப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஐக்கிய இராச்சியத்தின் புகழ் பெற்ற பத்திரிகையான THE GUARDIAN இவர்களை "மேற்குலகிலேயே அதிக செல்வாக்குள்ள இஸ்லாமிய அறிஞர்" என்று வருணித்துள்ளது.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் ஹம்ஸா யூஸுப் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்