அஸ்ஸையித் ஷெய்க் ஹபிப் உமர் பின் ஹாபிஸ்
மௌலானா ஷெய்க் ஹபீப் உமர் அவர்கள் யெமன் நாட்டில் ஹல்றமௌத் என்ற நகரில் 1963ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பிறந்தார்கள். அன்னார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவ்ர்களின் வம்சாவழியில் வந்தவர்கள். அவர்களின் தந்தையார் புகழ் பெற்ற ஒரு தியாகியும், அறிஞருமான அல் ஹபீப் முஹம்மத் பின் சலீம் ஆவார்கள். சிறு வயதிலேயே குர் ஆனை மனனம் செய்து ஹாபிள் ஆகி விட்டார்கள்.
இவர்கள் பிஃஹ், ஹதீத் கலை, அரபி மொழி ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் ஆன்மீகம் உட்பட பல கல்விகளை தம் தந்தையார் அல் ஹபீப் முஹம்மத் பின் சலீம் அவர்களிடம் கற்றார்கள். மேலும் அவர்கள் முஹம்மத் பின் அலவி பின் ஷிஹாப் மற்றும் பத்ல் பா பத்ல் போன்ற பாரம்பரிய அறிஞர்களின் வகுப்புகளில் பங்கேற்று உள்ளனர். பின்னர் பாரம்பரிய கற்கைகளை அல் ஹபீப் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் ஹத்தார் அவர்களிடமும் ஷாபியீ மத்ஹபின் அறிஞரான அல் ஹபீப் ஸெய்ன் பின் ஸுமைத் இடமும் கற்று கற்பிப்பதற்கான அனுமதியை பெற்று கொண்டார்கள். பின்னர் தாயிஸின் முப்தி அல் ஹபீப் இப்ராஹிம் பின் அகில் பின் யஹ்யாவிடம் கற்றார்கள். அவர்கள் ஷெய்க் ஹபிப் உமர் அவர்களை மிகவும் அன்போடு நடத்தினார்கள்.
பின்னர் ஷெய்க் அல் ஹபீப் முஹம்மத் அல் ஹத்தார் அவர்களின் மகளை திருமணம் செய்தார்கள். பின்னர் அவர்கள் ஹிஜாஸ் சென்று பல நூல்களை புகழ் பெற்ற அறிஞர்களிடம் கற்றார்கள். பின்னர் தாரிம் திரும்பியதும் புகழ் பெற்ற தாருல் முஸ்தபா கல்லூரியை அமைத்தார்கள். இன்று உலகெங்கும் இருந்து பல மாணவர்கள் வந்து அங்கு கல்வி பயிலுகின்றனர். அவர்களின் நிர்வாகத்தின் கீழ் மேலும் பல கல்வி கூடங்கள் உள்ளன. புகழ் பெற்ற தாருல் முஸ்தபா கல்லூரி பற்றி அமெரிக்காவின் புகழ் பெற்ற "த நியூ யோர்க் டைம்ஸ்" பத்திரிக்கையிலும் செய்தி வந்துள்ளது. ஷெய்க் ஹபிப் உமர் அவர்களிடம் கல்வி பயின்ற பல அறிஞர்களில் அமெரிக்காவை சேர்ந்த கலீல் மூரே, அப்துல் கரீம் யஹ்யா, யஹ்யா ரோதுஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். தாருல் முஸ்தபா என்ற அரபிக் கல்லூரியை நிறுவி அதன் மூலம் ஏராளமான ஹாபிள்களையும், உலமாக்களையும் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இஸ்லாமிய தஃவா பிரசாரத்திற்காக அவர்கள் உலகம் முழுதும் பல நாடுகளுக்கு சென்றுள்ளனர். அதில் வளைகுடா நாடுகள், சிரியா, லெபனான், ஜோர்தான், எகிப்து, மொரோக்கோ, அல்கேரியா, சூடான், மாலி, கென்யா, தன்ஸானியா, தென் ஆபிரிக்கா, இந்திய, இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், புருனே, ஆஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஒல்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், ஸ்வீடன், ஸ்பெயின், அமெரிக்கா, கனடா என்பனவாகும். மேலும் உலகெங்கும் பல இஸ்லாமிய கருத்தரங்குகளில் பங்குபற்றி உள்ளனர்.
அதே போன்று, ஷெய்க் ஹபிப் உமர் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர். அதில் பல நூல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 36 ஆம் நபராக ஷெய்க் ஹபிப் உமர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் ஹபிப் உமர் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
English - தமிழ்