அஸ்ஸையித் ஷெய்க் ஹபிப் அலி அல் ஜிப்ரி
மௌலானா ஷெய்க் ஹபீப் அலி ஜிப்ரி அவர்கள் ஸஊதி அரேபியாவில் ஜித்தா நகரில் 1971 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி பிறந்தார்கள். அன்னாரின் தாய் தந்தை இருவரும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் ஸைய்யதுனா ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் வம்சாவழியில் வந்தவர்கள்.
முதன் முதலில் தன் தாயாரின் பெரிய தாயாரிடம் மார்க்க கல்வியை பயின்றனர். பின்னர் ஹிஜாஸ், ஹத்ராமௌத், எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் உள்ள பல அறிஞர்களிடம் கற்றார்கள்.
ஷெய்க் ஹபிப் அப்துல் காதிர் பின் அல் ஸக்காப் அவர்களிடம் ஸஹிஹ் அல் புகாரி, ஸஹிஹ் அல் முஸ்லிம் ஹதீது கிரந்தங்களையும் இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புகழ் பெற்ற இஹ்யாவு உலுமுத்தீன் கிரந்தத்தையும் இன்னும் பல முக்கிய நூல்களையும் தமது 10 ஆம் வயதில் இருந்து 21 ஆம் வயது வரை நேரடியாக கற்றார்கள். புகழ் பெற்ற பல நூல்களை எழுதிய ஷெய்க் ஹபிப் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் ஹத்தாத் அவர்களிடம் சில ஆன்மீக நூல்களை கற்றார்கள். மக்கா மதீனாவின் புகழ் பெற்ற ஹதீத் கலை வல்லுனரான ஷெய்க் முஹம்மத் பின் அலவி அல் மாலிகி அவர்களிடம் ஹதீது கலை, பெருமானாரின் ﷺ வாழ்க்கை சரிதை ஆகியவற்றை கற்றார்கள். மேலும் புகழ் பெற்ற பல அறிஞர் பெருமக்களிடம் கல்வி பயின்றுள்ளனர்.
1991 - 1993 காலப்பகுதியில் யேமன் ஸனாவிலுள்ள இஸ்லாமிய கற்கைகளுக்கான கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார்கள். இக்காலப்பகுதியில் ஷெய்க் ஹபிப் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் ஹத்தாத் அவர்களிடம் நேரடியாக கல்வி கற்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போதுதான் வெறுமனே கோட்பாடு ரீதியான கல்வியில் இருந்து மாறி இஸ்லாத்திற்கு மக்களை அழைக்கும் பணிக்கு தங்களை மாற்றி கொண்டார்கள். ஷெய்க் ஹபிப் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் ஹத்தாத் அவர்களின் முறைமைகளை நன்கு கற்று அதன் மூலம் நிறைய பயன் பெற்றார்கள்.
அந்த காலப்பகுதியில் இவர்களுக்கும் ஷெய்க் ஹபிப் உமர் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இந்த நட்பு 1993 முதல் 2003 வரை தாரிம் சென்று ஷெய்க் ஹபிப் உமர் அவர்களுடன் வசிக்க வழிவகுத்தது.
தாபாஹ் (Tabah) பவுன்டேசன் என்ற உலக தஃவா அமைப்பை அமைத்து அதன் மூலம் முழு உலகத்திலும் தஃவா பணி செய்து வருகிறார்கள். மேலும் யெமன் தாருல் முஸ்தபா அரபிக்கல்லூரியில் நிர்வாக இயக்குனர் குழு உறுப்பினராகவும், ஜோர்தான் இல் இருக்கும் ரோயல் அஹ்லுல் பைத் பவுண்டேஸன் உறுப்பினராகவும், இஸ்லாமிய கலாச்சார, விஞ்ஞான ஐரோப்பிய அகெடமியின் உறுப்பினராகவும், இன்னும் ஏராளமான உலக தஃவா அமைப்புக்களில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்கள்.
1991 இல் யேமெனில் தொடங்கி இன்று வரை பல நாடுகளுக்கு சுற்று பயணம் சென்று அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு மக்களை அழைக்கும் தஃவா பணி செய்து வருகிறார்கள். இவர்கள் மூலம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளார்கள். அதில் வளைகுடா நாடுகள், ஓமான், லிபியா, சிரியா, லெபனான், ஜோர்தான், எகிப்து, மொரோக்கோ, மொரித்தானியா, சூடான், கென்யா, தன்ஸானியா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஒல்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், துருக்கி, பொஸ்னியா, அமெரிக்கா, கனடா என்பன அடங்கும்.
மேலும் உலகில் பல நாடுகளில் பல கருத்தரங்குகளில் இவர்கள் உரையாற்றி உள்ளனர். பெரும்பாலும் மனித நேயம், சமாதனம், அன்பு இவைகளை மையமாக கொண்டு இவர்களின் உரைகள் அமைவது வழமை. மேலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளனர்.
பாப்பரசர் XVI இஸ்லாத்தை பற்றியும் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களை பற்றியும் தரக்குறைவாக பேசிய உரைக்கு பதிலளித்து அறிவுப்பூர்வமாகவும் உயர் பண்புகளோடும் எழுதப்பட்ட கடிதத்தில் ஒப்பமிட்ட 38 அறிஞர்களில் இவர்களும் ஒருவராவர். அதேபோல், பல்வேறு கொள்கைகளையுடைய 138 முஸ்லிம் அறிஞர்கள் கையொப்பமிட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க "A COMMON WORD" என்னும் அறிக்கையில் இவர்களும் கையொப்பமிட்டனர். இந்த ஆவணம் உலகில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ மத தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் பெருத்த வரவேற்பை பெற்றது. அதே போல், டென்மார்க் நாட்டுக்காரன் ஒருவன் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களை கேலி செய்து வரைந்த கேலி சித்திரத்துக்கு பதில் கொடுக்கும் விதமாக 42 புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றிணைந்து எழுதிய ‘Declaration by Muslim Religious Leaders’ "முஸ்லிம் மார்க்க தலைவர்களின் பிரகடனம்" என்னும் சாசனத்தில் இவர்களும் ஒருவராவர்.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 41 ஆம் நபராக ஷெய்க் ஹபிப் அலி அல் ஜிப்ரி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, இஸ்லாத்திற்கு எதிராக வரும் சவால்களுக்கு அறிவுப்பூர்வமாகவும் இஸ்லாமிய உயர் பண்புகளோடும் பதில் அளித்து இஸ்லாத்தை பாதுகாத்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் பிரயாணம் செய்து இஸ்லாமிய தஃவா பிரசாரம் செய்து பலர் இஸ்லாத்தில் நுழையவும் முஸ்லிம்கள் ஒழுக்கத்தோடு வாழவும் இவர்கள் செய்யும் சேவை அளப்பரியது.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் ஹபிப் அலி அல் ஜிப்ரி அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
English - தமிழ்