மர்ஹூம் பேராசிரியர் ஷெய்க் ஸஈத் ரமலான் பூத்தி
இவர்கள் சமகால முஸ்லிம் உலகின் மாபெரும் அறிஞராவார்கள். 1929ம் ஆண்டு வட சிரியாவில் அய்ன் தேவார் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள். நான்கு வயதாக இருக்குபோது தன் தந்தையோடு டமஸ்கஸ் இற்கு இடம்பெயர்ந்தார்கள்.
தமது ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலை கல்வியினை டமஸ்கஸ்ஸில் கற்ற இவர்கள் 1953 ஆம் ஆண்டு உலக புகழ் பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் ஷரீஆ பீடத்தில் பிரவேசித்து 1955 ஆம் ஆண்டு தமது பட்டப்படிப்பை முதல் தர (First Class) சித்தியோடு முடித்தார்கள். அதற்கடுத்த வருடம் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக அரபி மொழி பீடத்தில் இருந்து டிப்ளோமா பட்டம் பெற்றார்கள்.
பின்னர் சிரியா திரும்பிய அவர்கள் 1958 ஆம் ஆண்டு ஹோம்ஸ் (சிரியா) இலுள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்து கொடுத்தார்கள். 1961 ஆம் ஆண்டு டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தின் ஷரீஆ பீடத்தின் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள். 1965 ஆம் ஆண்டு மீண்டும் அல் அஸ்ஹர் திரும்பிய அவர்கள் அங்கே அவர்களின் முதுமாணி (Phd) பட்டதை சிறப்பு தகுதியோடு பெற்றார்கள்.
பின்னர் டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியராக நியமிக்கப்பட்டனர். பின்னர் 1975 ஆம் ஆண்டு அதே பல்கலைகழகத்தின் துணை வேந்தராகவும் 1977 ஆம் ஆண்டு வேந்தராகவும் நியமிக்கப்பட்டனர்.
பேராசிரியர் பூத்தி அவர்கள் ஜோர்தானில் அமைந்துள்ள இஸ்லாமிய சிந்தனைகளுக்கான அஹ்ல் அல் பைத் மையத்தின் உறுப்பினராகவும், ஒக்ஸ்போர்ட் அகடமியின் தலைமை கவுன்சிலின் உறுப்பினராகவும், அபுதாபி தாபாஹ் மையத்தின் தலைமை ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்கள்.
பேராசிரியர் பூத்தி அவர்கள் ஷாபீயீ மத்ஹபின் சட்டங்களையும் அஸ்அரிய கொள்கையையும் பின்பற்றுவராக இருந்தனர். மேலும் இஸ்லாமிய சட்டம், சட்ட மூலாதாரம், இஸ்லாமிய கோட்பாடு ஆகியவைகளில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற ஒருவராவர்கள்.
பேராசிரியர் பூத்தியின் உரைகள் மக்களை ஈர்க்கக்கூடியவை. பேராசிரியர் 60 க்கும் மேற்பட்ட புத்தகங்ளை எழுதியுள்ளதுடன் இவை உயர்கல்வி நிறுவனங்களிலும் சர்வதேச மட்டத்திலான பல்கலைக்கழகங்களிலும் அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதோடு பட்டப்படிப்பு முதுமாணி கற்கைகளுக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளமையும் விஷேட அம்சமாகும்.
பேராசிரியர் பூத்தி ஸலபிஸ (வஹாபிஸ) த்தை பகிரங்கமாக கண்டிப்பதோடு பரராம்பரிய இஸ்லத்திற்கும் ஸலபிஸத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள். ஸலபி அறிஞர்களுடன் பல சந்தர்ப்பங்களில் விவாதங்களையும் நடத்தியுள்ளார்கள். ஸலபிகளின் கொள்கைகளை மறுத்து அவர்கள் சில நூல்களையும் எழுதியுள்ளார்கள்.
பேராசிரியர் ரமழான் பூத்தி பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கும் ஆக்கங்களை எழுதி வந்தனர்.
2004 ஆம் ஆண்டு துபாய் சர்வதேச அல் குர்ஆன் விருது ஏற்பாட்டு குழுவினால் பேராசிரியர் பூத்தி அவர்கள் முஸ்லிம் உலகின் ஆளுமையாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 27 ஆம் நபராக ஷெய்க் பூத்தி அவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
2013 மார்ச் 21 ஆம் திகதி டமஸ்கஸ் பள்ளிவாசலில் வகுப்பு நடத்தி கொண்டு இருந்தபோது தீவிரவாதிகளால் அன்னார் ஷஹீதாக்கப்பட்டனர். அல்லாஹ் அன்னாருக்கு ஜென்னதுள் பிர்தௌசை வழங்குவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்