கலாநிதி ஷெய்க் அலி ஸாபூனி
புகழ் பெற்ற அல் குர்ஆன் விரிவுரையாளர்
சமகால முஸ்லிம் உலகின் தலைசிறந்த தப்ஸீர் துறை அறிஞராக கருதப்படுபவர் டாக்டர் ஷெய்க் முஹம்மத் அலி ஸாபூனி அவர்கள். 1930ம் ஆண்டு சிரியாவின் அலிப்போ நகரில் பிறந்தார்கள். இவர்களின் தந்தையார் ஷெய்க் ஜமில் அவர்கள் சிரியாவில் இருந்த தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராவார்கள். ஷெய்க் முஹம்மத் அலி ஸாபூனி அவர்கள் தமது ஆரம்ப கல்வியை தம் தந்தையிடமே பெரிதும் கற்றார்கள்.
தம் இளம் வயதிலேயே அல்குர்ஆனை மனனமிட்டமிட்டார்கள். இவர்கள் பல புகழ் பெற்ற மார்க்க அறிஞர்களிடம் கல்வி பயின்றுள்ளனர். ஷெய்க் முஹம்மத் நஜீப் சிராஜூத்தீன், ஷெய்க் அஹ்மத் அல் ஷமா, ஷெய்க் ஸைத் அல் இத்லீபி, போன்றோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.
தம் ஆரம்ப கல்வியை முடித்து விட்டு, இவர்கள் சிரியா அலேப்போவில் ஷரீஆ கஸ்ரவியா பாடசாலையில் சேர்ந்து கற்றனர். பின்னர் 1949ம் ஆண்டில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்கள்.
ஷெய்க் ஸாபூனியின் திறமைகளால் வியந்த சிரியாவின் அரசாங்கம் மேலதிக கல்விக்காக அவரை அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியது. 1952 இல் அல் அஸ்ஹரின் ஷரீஆ பீடத்திலும் பட்டம் பெற்று 1954 இல் சிறப்பு கற்ககையையும் பூர்த்திசெய்தார்கள்.
பின்னர் தம் சொந்த ஊரான அலேப்போ திரும்பிய இவர்கள் அங்கு எட்டு ஆண்டுகள் பல்வேறு கல்லூரிகளில் கல்வி கற்றுகொடுத்தார்கள். பின்னர் மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகம் மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகம் என்பவற்றில் பேராசிரியராக 28 ஆண்டுகள் பணியாற்றினார்கள். இவர்களின் வழி காட்டலில் பல பிரசித்திப்பெற்ற அறிஞர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.
இவர்கள் உலக முஸ்லிம் லீக் அமைப்பின் அல் குர்ஆன் சுன்னா விஞ்ஞான ஆய்வு கவுன்சிலின் ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார்கள்.
ஷெய்க் எழுதிய புத்தகங்கள் பல மொழிகளில் வெளிவந்துள்ளன. ஸப்வத் அல் தப்ஸீர், ரவாஇ அல் பயான் பி தப்ஸீர் அயாத் அல் அஹ்காம், இஸ்லாமிய வாரிசுரிமை, சுன்னாவின் புதையலில் இருந்து, நபித்துவமும் நபிமார்களும் அல் தப்ஸீர் அல் வாதி அல் முயாஸர் என்பன ஷெய்க் அவர்கள் எழுதி சில புத்தகங்களாகும்.
புனித ஹரம் ஷரீபிலும் பாடம் நடத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. தப்ஸீர் தொடர்பான 600 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்கள். துபாய் சர்வதேச குர்ஆன் விருது ஏற்பாட்டுக்குழுவினால் ஷெய்க் அவர்கள் முஸ்லிம் உலகின் ஆளுமையாக 2007ம் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 33 ஆம் நபராக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அல்லாஹ் அன்னாருக்கு நீண்ட ஆயுளை வழங்குவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்