ஷெய்க் கலாநிதி அஹ்மத் அல் தையிப்
ஷெய்க் அல் அஸ்ஹர் - அல் அஸ்ஹரின் தலைமை இமாம்
அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தலைவர்
பேராசிரியர் அஹமத் அல் தையிப் "ஷெய்க் அல் அஸ்ஹர்’’ என்ற பதவியை வகிக்கிறார்கள். அதாவது உலகின் பழைமை வாய்ந்ததும் முஸ்லிம் உலகின் அதியுயர் இஸ்லாமிய கல்வி பீடமுமான அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் தலைமை இமாம் என்னும் பதவி. இது முஸ்லிம் உலகின் பெரும் மதிப்புக்குரிய பதவி நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷெய்க் அஹ்மத் தையிப் அவர்கள் 1946 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் திகதி தென் எகிப்தில் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரையில் பிறந்தார்கள்.
இவர்கள் 1969 ஆம் ஆண்டு இஸ்லாமிய கற்கை மற்றும் கோட்பாட்டியல் துறையில் பட்டதாரியானார்கள். 1971 ஆம் ஆண்டு மாஸ்டர் பட்டமும் (Masters Degree), 1977 ஆம் ஆண்டு கலாநிதி (Phd) பட்டமும் பெற்றார்கள்.
பின்னர் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இறையியல் மற்றும் மெய்யியல் துறைப் பேராசிரியாக இமாம் அவர்கள் தனது பணியை ஆரம்பித்தார்கள். 1990-1991 காலப்பகுதியில் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைத்துறையின் பீடாதிபதியாக பணியாற்றினார்கள். பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கோட்பாடுவியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் இவர்கள் நியமிக்கப்பட்டதோடு 2002 மார்ச் மாதம் 3ம் திகதி எகிப்தின் தலைமை முப்தியாக நியமிக்கப்பட்டார்கள். 2003 ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்த இவர்கள் 2010 ஆம் ஆண்டு அப்போதைய அல் அஸ்ஹரின் தலைமை இமாமான முஹம்மத் சையித் தன்தாவியின் மறைவுக்கு பின்னர் அல் அஸ்ஹரின் தலைமை இமாமாக நியமனம் பெற்றார்கள்.
இவர்கள் இஸ்லாமிய கோட்பாடு துறையில் கலாநிதி பட்டம் பெற்றவர்கள். இவர்கள் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்கள். பல்வேறு பிரெஞ்சு ஆக்கங்களை அரபியில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். அத்தோடு பிரான்சிய பல்கலைகழகத்திலும் பேராசிரியாராக பணியாற்றி உள்ளனர். இவர்கள் இஸ்லாமிய ஷரீஆ மற்றும் ஆன்மீகம் சம்பந்தமாக பல நூல்களை எழுதி உள்ளனர்.
இவர்கள் சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், பாகிஸ்தான் நாடுகளில் உள்ள பல்கலைகழகங்களிலும் பணி புரிந்துள்ளனர்.
பேராசிரியர் தையிப் அவர்கள் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்கள். ஷிஆ சுன்னா பிளவுகளை தடுக்கவும் கிறிஸ்தவ – முஸ்லிம் உலகங்களுக் கிடையிலான ஒற்றுமையயை கட்டியெழுப்பவும் அஹமத் அல் தையிப் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 8 ஆம் நபராக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை போன்ற மார்க்க அறிஞர்களுக்கு அல்லாஹுதஆலா நீண்ட ஆயுளை வழங்கி முஸ்லிம் உலகிற்கு சேவை செய்ய துணை புரிவானாக
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்