கலாநிதி ஷெய்க் அப்துல் ரவூப்
ஷெய்க் அப்துல் ரவூப் மிஸ்பாஹி அவர்கள் 1944 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 05 திகதி இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி எனும் ஊரில் பிறந்தார்கள். இவர்களது தந்தை அல்ஹாஜ் அபுல் இர்பான் அப்துல் ஜவாத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஒரு பிரபல மார்க்க அறிஞராகவும் அற்புதங்கள் நிகழ்த்திய ஒரு இறைநேசராகவும் திகழ்ந்தார்கள்.
தங்களது தந்தை போல் தாமும் ஒரு மார்க்க அறிஞராக ஆக வேண்டுமென்ற வேட்கையால் தன் தந்தையிடம் பயின்ற பின்னர் இலங்கையில் காலி என்னும் ஊரில் அமைந்துள்ள பஹ்ஜதுல் இப்றாஹீமியா, பாணந்துறை அல்மத்ரஸதுத் தீனிய்யா அறபுக் கலாபீடங்களில் கற்ற பின்னர் இந்தியா, ஸவுதிஅரேபியா சென்றும மார்க்க கல்வி பயின்றார்கள்.
இவர்கள் அறபுமொழி, அறபு இலக்கியம், சொல்லிலக்கணம், மொழியிலக்கணம், தப்ஸீர், ஹதீஸ், தர்க்க சாஸ்திரம், “பிக்ஹு” சட்டக்கலை, யாப்பிலக்கணம், அணியிலக்கணம்’ ஆகிய கலைகளிலும் குறிப்பாக “தஸவ்வுப்’’ “ஸூபிஸ’’ (மனிதனின் உளக்கறையை நீக்கி அவனை இறைவனிடம் சேர்த்து வைக்கும்) கலையில் சிறந்தோங்கினார்கள்.
இறைவன் தனக்கு வழங்கிய அறபுமொழி ஆற்றலை பயன்படுத்தி இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகளான உலமாக்ளால் அறபு மொழியில் எழுதப்பட்ட “புதூஹாத் அல் மக்கிய்யாஹ்” “புஸுஸுல் ஹிகம்” “அல் இன்ஸானுல் காமில்” “துஹ்பதுல் முர்ஸலஹ்”
“லவாமிஉல் பய்யினாத் பீஷர்ஹி அஸ்மாயில்லாஹி வஸ்ஸிபாத்” “றூஹுல் பயான்” “ஹிகம்” “அல்ஹகீகஹ்” போன்ற இறைஞான ஸூபிஸ நூல்களைப் பார்த்து, ஆய்ந்தறிந்ததுடன் தமக்கேற்பட்ட ஐயங்களை இறைஞான ஆசிரியர்களை தேடிச்சென்று கேட்டறிந்து அத்துறையில் தெளிந்தார்கள்.
பல அறபுக்கலாபீடங்களில் அதிபராகக் கடமையாற்றிய அவர்கள் சில ஆண்டுகள் அரச பாடசாலைகளிலும் மௌலவி ஆசிரியராகக் கடமையாற்றினார்கள். இறைஞான ஸூபிஸ துறையிலும் மார்க்க விடயங்கள் பற்றியும் தமிழ் மொழியில் 30க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்கள்.
அவர்கள் இறுதியாக எழுதிய “தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்” என்ற நூல் அரபுத் தமிழ் விளக்கம் கொண்ட நூலாகும். இந்நூல் இமாம் பூஸிரீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுதிய உலகப் பிரசித்திபெற்ற “புர்தா ஷரீப்” நூலுக்குரிய அறபு தமிழ் விரிவுரை நூலாகும்.
புர்தா ஷரீப் 300 “ஷரஹ்” விரிவுரை நூல்கள் எழுதப்படுள்ளதென்பது அறிஞர்களின் கருத்தாகும். “தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில்புர்தஹ்” அஷ்ஷெய்க் அப்துல் ரவூப் மிஸ்பாஹி அவர்களின் விரிவுரை நூல் 301 வது நூலாகும். அவர்கள் எழுத்துத் துறையில் சிறந்தோங்கியது போல் பேச்சுத் துறையிலும் வல்லமை படைத்திருந்தார்கள்.
இவர்கள் அகில இலங்கை ஸுபிஸ ஜமியத்துள் உலமா சபையின் தலைவர் ஆவார்கள்.
இலங்கையில் இவர்களுக்கு ‘ஈழத்தின் சொற்கொண்டல்’ என்று பட்டம் வழங்கப்பட்டது போல் “ஷம்சுல் உலமா (மார்க்க அறிஞர்களின் சூரியன்) என்று இந்திய உலமாக்களாலும் இந்தியாவில் வைத்து பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
“அவர்கள் 500க்கு மேற்பட்ட ஒலி, ஒளிநாடாக்கள் பேசியுள்ளார்கள் அவைகளை நாடெங்கும் பிற நாடுகளிலும் மக்கள் கேட்டும் பார்த்தும் வருகின்றனர்.
அவர்கள் “தஸவ்வுப்” எனும் இஸ்லாமிய ஸூபிஸக் கொள்கையை தரீகத், ஹகீகத், மஃரிபத் அடிப்படையில் பேசுவதுடன் “ஷரீஅத்” சட்டங்களையும் தெளிவுபடுத்தி வருகின்றார்கள்.
காத்தான்குடியில் பள்ளிவாயலில் மார்க்கத்திற்காக தன்னை 35 வருடங்களாக அர்ப்பணித்தவர் இவர்கள். குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ் ஆகிய மூலாதாரங்களைப் பின்பற்றி அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்பவர்.
இலங்கை அரசாங்கத்தின் பாராளுமன்ற அங்கீகாரம் பெற்று அரச வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்ட ‘அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு’ (Incorporated by Act Parliament No 46 of 2009) நிதியத்தின் தவிசாளரும் இவர்களேயாவர். இவர்களின் அதிகாரத்திலேயே இந்நிதியம் தங்கியுள்ளது.
இலங்கை அரசின் அகில இலங்கை சமாதான நீதவான் பதவியில் இருப்பவர். 2009 ம் ஆண்டில் அகில இலங்கை சமாதான மன்றத்தால் கலாநிதி, சாமசிறீ பட்டம் பெற்றவர். பகையையும் பகைவர்களையும் நுண்மை அறிவாலும் அன்பாலும் வென்றவர்.
ஆத்மீகத்தின் மூலம் மக்கள் நெஞ்சக் கறையினை துடைத்து இறைவனிடம் சேர்த்து வைக்கும் பணியில் வாழ்பவர்.
காதிரியா தரீக்கா ஷெய்கு ஆக ‘‘பைஅத்” கொடுப்பவர். இவர்களது முரீதீன்கள் இலங்கையிலும் பிற நாடுகளிலும் உள்ளனர்.
ஷெய்க் அப்துல் ரவூப் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: அப்துல் மனாfப்
www.shumsme.com/2011/10/blog-post_28.html?spref=fb
English - தமிழ்