MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீது அன்பும், கண்ணியமும்
உண்மையில் முஸ்லிம்கள் என்றால் யார்? வெறுமனே வாயால் அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் ஈமான் கொள்பவர்களா? நிச்சயமாக இல்லை, அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் உண்மையாக உள்ளத்தால் ஈமான் கொண்டு, அவர்களது ஸிபத்துகளை அதாவது அவர்களுடைய பண்புகளை உள்ளதை உள்ளபடி உளப்பூர்வமாக ஏற்று ஈமான் கொண்டு, இன்னும் அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் தனது உயிரைவிடவும் மேலாக நேசித்து, அவர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்பவர்களே உண்மையான முஸ்லிம்களாவார்கள்.
சரி, நாங்கள் எவ்வாறு அல்லாஹ்வை ஈமான் கொள்ளவேண்டும்? அல்லாஹ்வை ஈமான் கொள்வது என்றால் “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு நாயன் யாரும் இல்லை என்று ஈமான் கொள்வதும் அவனுடைய ஸிபத்துகளை அதாவது அவனுடைய பண்புகளை வாஜிபான, முஸ்தஹீலான, ஜாயிஸான பண்புகளை உள்ளதை உள்ளபடி உளப்பூர்வமாக ஏற்றும் ஈமான் கொள்வதே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதாகும்.
அதேபோல் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும், அன்னவர்களுக்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ள ஸிபத்துகளையும் திருநாமங்களையும் உளப்பூர்வமாக ஏற்றும் ஈமான் கொள்வதே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஈமான் கொள்வதாகும். அதுமட்டுமின்றி அல்லாஹ்வை எந்தளவு நேசம் கொள்கின்றோமோ அதே அளவு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதும் நேசம் கொண்டாலே ஈமான் நிறைவடையும், பரிபூரணமாகும். இதைத்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “யாருக்கு என் மீது முஹப்பத் இல்லையோ, அவருக்கு ஈமான் இல்லை.” என்பதாக.
மேலும் கூறினார்கள்:
“நான் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றுமுள்ள மனிதர்கள் அனைவரையும் விட மிகப் பிரியமானவனாக ஆகின்ற வரை அவன் முஃமீனாக முடியாது.”
(நூல்; புகாரி 14,15, முஸ்லிம் 44–69,70, இப்னு மாஜா 67, நஸஈ 50–43, முஸ்னத் அஹ்மத் 3-288, மிஷ்காத் 7)
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது:
“இந்நபியாகிறவர் முஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விட மேலானவராக இருக்கின்றார்கள்.” (சூரா 33:6)
அன்பியாக்களுக்கு அடுத்தபடியாக எல்லா உம்மத்துகளிலும் உயர்ந்த அந்தஸ்தையுடையவர்கள் ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான். ஸுன்னத்துல் ஜமாஅத்தினரான எமது அகீதா இதுதான். இந்தளவு கௌரவத்தை, உயர்வை ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எது பெற்றுக்கொடுத்ததென்றால் அது அவர்களின் பூரணமான ஈமானே காரணமாகும்.
உலமாக்கள் கூறுகிறார்கள்: ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமான் எந்தளவு கனமானது என்றால் உலகிலே தோன்றிய, இனிமேல் தொன்றப்போகின்ற அனைத்து மனிதர்களுடைய ஈமானை ஒருதட்டிலும் ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமானை இன்னுமொரு தட்டிலும் வைத்தால் ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு ஏமாந்தான் கனமானதாக, பாரமாக இருக்கும் என்று உலமாக்கள் கூறுகிறார்கள். ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எந்தளவு உயர்வான ஈமான் எவ்வாறு கிடைத்ததென்றால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அளவுக்கடந்த நேசமும், அன்பும்தான் இந்த உயர்வான ஈமானை பெறுவதற்கு காரணமாக இருந்தது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு இந்த மேலான நிலையை அடைந்தது தமது உள்ளத்தில் ஒரு மேலான பொருளை கொண்டிருப்பதால் ஆகும்.” ஆம், அந்த மேலான பொருள்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு கொண்டிருந்த அளவுக்கடந்த நேசமும், அன்பும் ஆகும்.
எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொண்டிருந்த அன்பு இவ்வளவுதான் என்று அளவிடமுடியாது.
ஒரு முறை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது ஹபீபான ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருநாள் இரவில் நாம் பிரயாணம் செய்யவேண்டி வரும். அப்போது நான் உங்களை இன்ஷா அல்லாஹ் அழைத்துப்போக வருகிறேன் என்று கூறிவைத்திருந்தார்கள். சில நாட்களுக்குப்பின் அல்லாஹ்விடமிருந்து ஹிஜ்ரத்தை மேற்கொள்ளும்படி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது. ஒரு நடுநிசி வேளையிலே ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்குச் சென்று கதவைதட்டுவதற்காக தனது முபாரக்கான கையை கதவின் மீது வைக்கும் முன்பே கதவு திறந்துக்கொண்டது. கூடவே ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரயாணத்துக்கு தேவையான ஆயத்தங்களுடன் தயாராக வாசலிலே நின்றார்கள். இதனைக்கண்ணுற்ற கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஆச்சிரியப்பட்டு, “அபூபக்கரே, நான் இப்போது வருவது உங்களுக்கு எப்படி தெரியும்? வீட்டு வாசலிலே தயாராக காத்திருக்கிறீர்களே? என்று கேட்டபோது ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “யா ரசூலுல்லாஹ் நீங்கள் எப்போது ஒரு இரவில் என்னை அழைத்துப் போக வருகிறேன் என்று கூறினீர்களோ அன்று முதல் இன்று வரை நான் இவ்விடத்தில் இவ்வாறுதான் காத்திருக்கிறேன். ஏன் என்றால் அல்லாஹ்வின் ஹபீபான தங்களின் வருகைக்காக நாங்கள் தான் காத்திருக்க வேண்டும். மாறாக அல்லாஹ்வின் ரஸுலே உங்களை எனது வீட்டு வாசலில் காத்திருக்க வைப்பதா? அந்த பெரிய குற்றத்துக்கு நான் ஆளாகாமல் இருக்கவே இவ்வாறு செய்தேன் என்றார்கள். இவ்வாறு அளவுக்கடந்த நேசத்தையும், கண்ணியத்தையும் இனிய மதீனத்து வேந்தர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது வைத்திருந்ததால் தான் ஈமானிலே உயர்ந்த அந்தஸ்தை பெற்றார்கள்.
இதேபோன்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால், “எனக்கு பின்பு ஒரு நபி வருவதாக இருந்தால் அது ஸெய்யதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களாக தான் இருப்பார்கள் என்று போற்றப்பட்ட ஸெய்யதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு முறை அவர்களின் மகனாரும், இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். பேச்சினூடே ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்து உங்கள் தந்தை என் பாட்டனார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அடிமைத்தானே என்று கூற இப்னு உமர் அவர்கள் வேதனையோடு தன் தந்தையிடம் இதை கூறிவிட்டார்கள். இதனைக்கேட்டதும் தன் மகனையும் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் கையைப்பிடித்து கூட்டிக்கொண்டு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ரவ்லாவின் முன் நின்று யா ரஸுலல்லாஹ்! என்னை தங்களுடைய அடிமை என்று தங்களின் அருமை பேரர் கூறிவிட்டார்கள். இது அவரும் சாட்சியாக இங்கு இருக்கிறார். தாங்கள் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் யா ரஸுலல்லாஹ்! தாங்கள் என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு விட்டால் நான் ஈருலகிலும் மேன்மை அடைந்து விடுவேனே யா ரஸுலல்லாஹ்! என்று கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட தேம்பித் தேம்பி அழுந்துக்கொண்டிருந்தார்கள்.
சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் பெற்ற இந்த அருமை ஸஹாபாவின் செய்கை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதும் அவர்களின் சந்ததிகள் மீதும் காட்டப்படவேண்டிய அன்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதேபோன்று ஸஹாபாக்கள் மட்டுமல்ல பின்னால் வந்த அனைத்து இஸ்லாமிய பெரியார்களும் வலிமார்களும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அளவுகடந்த அன்பும், கண்ணியத்தையும் கொண்டிருந்தார்கள். அதனாலேயே அவர்களின் ஈமான் பரிபூரணமடைந்தது. அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தையும், பெற்றுக்கொண்டுத்தது.
இதையே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “நீங்கள் யாரை முஹப்பத் வைக்கிறீர்களோ, அவர்களுடன் நாளை கியாமத்தில் இருப்பீர்கள்.” ஆகவே நாம் அல்லாஹ்வின் நேசத்தை திருப்தியை பெற்ற நல்லடியார்களாக வாழ்ந்திட வேண்டுமாயின் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நமது உயிருக்கும் மேலாக நேசிக்க வேண்டும். அதிகம் அதிகம் ஸலவாத்தை ஓதி அன்னவர்களின் அன்பை பெற்றுக்கொள்ளவேண்டும். இதன் மூலம் நம் அனைவரையும் அல்லாஹ் பரிபூரணமடைந்த முஃமீன்களாக ஆக்கியருள்வானாக! ஆமீன்...