MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
தஸ்பீஹ் தொழுகை
தஸ்பீஹ் தொழுகையின் சிறப்பு
ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபை நோக்கிக் கூறியதாவது:- அப்பாஸே! எனது பெரிய தந்தையே! நான் உங்களுக்கு வழங்கட்டுமா? உங்களுக்குக் கொடுக்கட்டுமா? உங்களுக்கு நன்கொடையாக கொடுக்கட்டுமா? உங்களில் பத்து விடயங்களை ஏற்படுத்தட்டுமா? அதனை நீங்கள் செய்தால் அல்லாஹ் உங்களது பாவங்களில் முன்னையது பின்னையது, பழையது புதியது, தவறுதலாக செய்தது தெரிந்து கொண்டே செய்தது, சிறியது பெரியது, இரகசியமானது பரகசியமானது ஆகிய அனைத்தையும் மன்னித்து விடுவான். நீங்கள் நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரத்துல் பாத்திஹாவையும் மற்றொரு ஸுராவையும் ஓத வேண்டும். முதல் ரக்அத்திலே ஓதி முடிந்ததும் நிற்கும் நிலையிலேயே ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் என பதினைந்து முறை கூறுங்கள். பின்னர் நீங்கள் ருகூஃ செய்து ருகூஃவில் இருந்த வண்ணம் அதனை பத்து முறை கூறுங்கள். பின்னர் உங்களது தலையை ருகூஃவிலிருந்து உயர்த்தி அதனை பத்து விடுத்தம் கூறுங்கள். பின்னர் குனிந்து ஸுஜூது செய்து ஸுஜூது செய்த நிலையிலேயே அதனை பத்து முறை கூறுங்கள். பின்னர் உங்களது தலையை ஸுஜூதிலிருந்து உயர்த்தி பத்து முறை கூறுங்கள். பின்னர் ஸுஜூது செய்து பத்து முறை அதனைக் கூறுங்கள். பின்னர் உங்களது தலையை உயர்த்தி அதனை பத்து முறை கூறுங்கள். அதனை நான்கு ரக்அத்துக்களிலும் செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் ஒவ்வொரு நாளும் ஒருமுறை செய்துகொள்ளுங்கள். அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு முறை (செய்துகொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு மாதத்திலும் ஒருமுறை (செய்துகொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு வருடத்திலும் ஒரு முறை (செய்து கொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் உங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது (செய்து கொள்ளுங்கள்)
நூற்கள் - அபூதாவூத் 1297, இப்னுமாஜா 1386, 1387 (தரம் - ஸஹீஹ்)
எப்போது தொழ வேண்டும்?
இந்தத் தொழுகையை முடிந்தால் நாள் தோறும் தொழுது வருவதும், இயலாவிடில் வாரத்திற்கொரு முறை தொழுவதும், இயலாவிடில் மாதத்திற்கொரு முறை தொழுவதும், இயலாவிடில் ஆண்டுக்கொரு முறை தொழுவதும், அதுவும் இயலாவிடில் ஆயுளில் ஒரு தடவையாவது தொழுவதும் சுன்னத்தாகும்.
இத்தொழுகையை வெள்ளிகிழமை ஜும்ஆவுக்கு முன் தொழுவது சிறப்பாகும். அதிக நன்மைகளை பெற்று தரும் ரமழான் மாதத்திலும் அதிகம் இதனை தொழலாம்.
எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?
இது நான்கு ரக்அத்துகளாகும். இரண்டிரண்டு ரக்அத்துகளாக இரண்டு ஸலாமில் தொழுவது ஏற்றமாகும். நான்கு ரக்அத்துகளை ஒரே ஸலாமிலும் தொழலாம்.
எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?
இத்தொழுகையின் நிய்யத்து “சுன்னத்தான தஸ்பீஹ் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.
எப்படி தொழ வேண்டும்?
♦ தக்பீர் தஹ்ரீமா கட்டியபின் வஜ்ஜஹ்த்து, சூரத்துல் பாத்திஹா, மற்றொரு சூரா ஆகியவை ஓத வேண்டும்.
♦ இப்போது நிலையில் 15 (பதினைந்து) தடவை மூன்றாம் கலிமாவில் “ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” என்பது வரை ஓத வேண்டும்.
♦ இப்போது ருகூவிற்கு செல்ல வேண்டும். அங்கு வழமையாக ஓதும் "சுப்ஹான ரப்பியல் அலீம் வபிஹம்திஹி" என்பதை மூன்று முறை ஓதி விட்டு மீண்டும் “ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” என்பதை 10 (பத்து) தடவை ஓத வேண்டும்.
♦ இப்போது நிலைக்கு வந்து அங்கு வழமையாக ஓதுவதை ஓதிவிட்டு 10 (பத்து) தடவை மேற்சொன்ன மூன்றாம் கலிமாவை ஓதவேண்டும்.
♦ இப்போது ஸுஜூதுக்கு சென்று அங்கு வழமையாக ஓதும் "சுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி" என்பதை மூன்று முறை ஓதி விட்டு மீண்டும் 10 (பத்து) தடவை மேற்சொன்ன மூன்றாம் கலிமாவை ஓதவேண்டும்.
♦ பின்னர் சிறு இருப்பில் இருந்து 10 (பத்து) தடவை மேற்சொன்ன மூன்றாம் கலிமாவை ஓதவேண்டும்.
♦ இப்போது இரண்டாவது ஸுஜூதில் வழமையாக ஓதும் "சுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி" என்பதை மூன்று முறை ஓதி விட்டு மீண்டும் 10 (பத்து) தடவை மேற்சொன்ன மூன்றாம் கலிமாவை ஓதவேண்டும்.
♦ பின்னர் இஸ்திராஹத் இருப்பில் 10 (பத்து) தடவை மேற்சொன்ன கலிமாவை ஓதி எழும்ப வேண்டும்.
இவ்வாறு ஒரு ரக்அத்தில் எழுபத்தைந்து தடவை வீதம் நான்கு ரக்அத்துகளில் முன்னூறு தடவை ஓதவேண்டும். மேற்கூறப்பட்ட அந்தக் கலிமாவுடன் விரும்பினால் ‘வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹி அலிய்யில் அளீம்’ என்பதையும் சேர்த்து ஓதலாம்.
♦ இரண்டாவது ஸஜ்தாவில் இருந்து இஸ்திராஹத் இருப்பிற்கு எழுந்திருக்கும்போது தக்பீர் சொல்லி எழுந்து உட்கார்ந்து, பிறகு பத்து தடவை தஸ்பீஹ் ஓதியபின் தக்பீர் சொல்லாமல் எழுந்திருக்க வேண்டும்.
♦ இரண்டாவது ரக்அத்தில் இரண்டாவது ஸஜ்தாவுக்குப் பின் எழுந்து இருக்கும் அத்தஹியாத் இருப்பில் அத்தஹிய்யாத்துக்கு முன் முதலில் 10 (பத்து) தடவை மேற்சொன்ன கலிமாவை ஓத வேண்டும். பின்னர் அத்தஹிய்யாத் ஓதவேண்டும்.
♦ பின்னர் ஸலாம் கொடுக்க வேண்டும்.
ருகூஇல் ஓத வேண்டிய தஸ்பீஹை மறந்து சிறு நிலைக்கு வந்துவிட்டால் திரும்ப ருகூவுக்குப் போவதோ, மறந்த தஸ்பீஹை சிறு நிலையில் ஓதுவதோ கூடாது, எனினும், அந்த பத்து தஸ்பீஹையும் ஸுஜுதில் ஓதிக் கொள்ள வேண்டும்.
தஸ்பீஹ் தொழுகையில் முதல் ரக்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் ‘அல்ஹாக்குமுத் தகாதுர்’ சூராவும், இரண்டாவது ரக்அத்தில் ‘வல் அஸ்ரி’ சூராவும் மூன்றாம் ரக்அத்தில் குல்யா அய்யுஹல் காஃபிரூன் சூராவும், நான்காம் ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு சூராவும் ஓதுவது சிறப்பாகும்.
மேலும் பல தொழுகை முறைகளை எமது இணையத்தளமான www.mailofislam.com இல் கற்று கொள்ளுங்கள்.
மேலும் படியுங்கள் - தெரியாதவர்களுடன் பகிருங்கள்
தராவீஹ் தொழுகை தொழுவது எப்படி?
தஹஜ்ஜுத் தொழுகை தொழுவது எப்படி?
இஷ்ராக் தொழுகை தொழுவது எப்படி?