MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தராவீஹ் தொழுகை


எப்போது தொழ வேண்டும்?

ரமழான் மாதம் முப்பது நாட்களும் இஷாவின் பிந்தின ஸுன்னத்துத் தொழுகைக்குப் பிறகு இத்தொழுகையைத் தொழவேண்டும். இஷா தொழுகைக்குப் பிறகிலிருந்து வைகறைப் பொழுது வரை இத்தொழுகையின் நேரமாகும்.



எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?

இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பத்து ஸலாத்துடன் இருபது ரக்அத்துகள் தொழவேண்டும்.


"ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்"


அறிவிப்பவர் - இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு

நூற்கள்: பைஹகி 2-499, ஷரஹுன்னியாயா 1-104


மேலும் தராவீஹ் எத்தனை ரக்அத்துகள் என்பது சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸுகளை படிக்க இந்த லிங்க்கை அழுத்துங்கள்


ஹாபிள்களை நியமித்து ஜமாஅத்தாகத் தொழுவது மிகவும் சிறந்தது. ஒரு நாளைக்கு ஒன்னே கால் ஜுஸ்வு குர்ஆன் ஓதி 27ம் பிறையில் கத்தம் செய்துவரும் பழக்கம் எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது. ஹாபிள்கள் இல்லாத ஊர்களில் சிறிய சூராக்களையும் ஓதி தொழுது கொள்ளலாம். ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுது கொள்ள வசதி இல்லாதவர்கள் தனிமையிலும் தொழுது கொள்ளலாம்.



எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?

இத்தொழுகையின் நிய்யத்து “சுன்னத்தான தராவீஹ் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி மஃமூமாக அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும். தனிமையில் தொழுதால் “மஃமூம்” என்ற வார்த்தையை நீக்கிவிட வேண்டும். இத்தொழுகையை நிறைவேற்றுவது ஷாபியீ, ஹனபி இரு மத்ஹபிலும் ஸுன்னத்துதான்.



எப்படி தொழ வேண்டும்?

சாதாரணமாக  ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும்.  ஆனால், இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பத்து ஸலாத்துடன் இருபது ரக்அத்துகள் தொழவேண்டும். மற்ற தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.



ஸலாம் கொடுத்ததும் என்ன ஓத வேண்டும்?

ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்கு பின் ஸலாம் கொடுத்ததும் ரமலானில் ஓத வேண்டிய துஆ, கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத், ஒவ்வொரு நான்கு ரக்அத்துக்கு பின்னரும் நேர்வழி பெற்ற கலிபாக்களை நினைவு கூர்தல் போன்றவை  வழமையாக ஓதப்படுகின்றன. 

குறிப்பு: - தராவீஹ் தொழும் சமயம் ஸலாம் கொடுத்ததும் ஓதக்கூடிய திக்ருகள் பாடமில்லாதவர்கள் எந்த திக்ரையும் ஓதிக்கொள்ளலாம். மேலும் திக்ர் செய்யாவிட்டாலும் குற்றமில்லை.



இஷா தொழும் முன் தராவீஹ் தொழலாமா?

ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழையும்போது, இஷா தொழுகை முடிந்திருந்தால் முதலில் இஷாவின் பர்ளு ஸுன்னத் தொழுகைகளைத் தொழுத பிறகுதான் தராவீஹ் தொழுகையின் ஜமாஅத்தில் சேர்ந்து தொழவேண்டும். இதற்கிடையில் விட்டுப்போன தராவீஹ் ரக்அத்துகளை வித்ரு தொழுத பிறகு தொழுதுகொள்ள வேண்டும். இத்தகையவர் வித்ரு தொழுகையை ஜமாஅத்துடன் தொழவேண்டும்.


மேலும் பல தொழுகை முறைகளை எமது இணையத்தளமான www.mailofislam.com இல் கற்று கொள்ளுங்கள்.

                                        மேலும் படியுங்கள் - தெரியாதவர்களுடன் பகிருங்கள்


வித்ர் தொழுகை தொழுவது எப்படி?


தஸ்பீஹ் தொழுகை தொழுவது எப்படி?


தஹஜ்ஜுத்  தொழுகை தொழுவது எப்படி?