MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸஹாபாக்களை பின்பற்றலாமா?
நாங்கள் அல்லாஹ்வினதும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களினதும் சொல்படி வாழ்பவர்கள். ஸஹாபாக்களை பின்பற்றலாமா கூடாதா என்ற விஷயத்தில் அல்லாஹ்வும் ரசூலும் எங்களுக்கு என்ன சொல்லி இருக்கிறார்களோ அதனைத்தான் நாங்கள் செய்ய வேண்டும். இன்று யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு தேவை இல்லை. அல்லாஹ்வினதும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களினதும் வார்த்தைதான் எங்களுக்கு முக்கியம்.
சரி முதலில் ஸஹாபாக்களை பின்பற்றும் விசயத்தில் அல்லாஹ் எங்களுக்கு என்ன கூறுகிறான் என்று பாப்போம்.
அல் குர்ஆன் ஆதாரம் 1
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், இன்னும் நற்செயலைக்கொண்டு அவர்களைப் பின்பற்றியவர்கள் (ஆகிய) அவர்களைக்கொண்டு அல்லாஹ் பொருந்திக்கொண்டான். அவர்களும் அவனை பொருந்திக்கொண்டார்கள். அவர்களுக்காக சொர்க்கங்களையும், அவன் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் எப்பொழுதும் அவர்கள் நிறந்தரமாக இருப்பார்கள். இது மகத்தான வெற்றியாகும். அல் குர்ஆன் 9:100
மேலுள்ள ஆயத்தில் அல்லாஹ் ஸஹாபாக்களை பின்பற்றுபவர்களை குறித்து சொல்லி காட்டுகிறான். ஸஹாபாக்களை பின்பற்றுவோரை தான் பொருந்திகொண்டதாகவும், இன்னும் அவர்களுக்கு சுவர்க்கம் உண்டு எனவும் அது மகத்தான வெற்றி எனவும் படைத்த அல்லாஹ்வே சொல்கிறான்.
அடுத்து கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸஹாபாக்களை பின்பற்றும் விசயத்தில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்
அல் ஹதீஸ் ஆதாரம் 2
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
எனது தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். எனவே அவர்களில் நீங்கள் யாரை பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள். மிஷ்காத் 6018
அல் ஹதீஸ் ஆதாரம் 3
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய்ப்பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.
திர்மிதி 2676, இப்னு மாஜா 42, அபூதாவுத் 4607, முஸ்னத் அஹ்மத் 4 - 126, மிஷ்காத் 165
அல் ஹதீஸ் ஆதாரம் 4
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
எனது ஸஹாபாக்களை சங்கை செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தான் உங்களில் மிக சங்கையானவர்கள் ஆவார்கள்.
மிஷ்காத்: 6012, முஸ்னத் அஹ்மத்: 1 - 26
எனவே, ஸஹாபாக்களை பின்பற்றலாம் என்பதற்கு அல் குர்ஆன், அல் ஹதீஸில் தெளிவான நிறைய ஆதாரங்கள் உள்ளதால் ஸஹாபாக்களை தாராளமாக பின்பற்றலாம்.
இவ்வளவு தெளிவாக இஸ்லாத்தில் சொல்லப்பட்ட பின்பும் பின்பற்றக்கூடாது என்று ஒருவன் சொன்னால் நிச்சயமாக அவன் ஒரு வழிகேடன் ஆவான். எனவே அப்படிப்பட்ட கெட்டவர்களை விட்டும் நாம் ஒதுங்கி கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒன்று:
இந்த உலகத்தில் ஸஹாபாக்களை பின்பற்றியவர்கள் தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், உலமாக்கள், ஸாலிஹீன்கள், மூமினான முஸ்லிம்கள்.
ஆனால் ஸஹாபாக்களை பின்பற்றாதவர்கள் முஹ்தஸிலாக்கள், கவாரிஜியாக்கள், ஷியாக்கள், காதியானிகள், வஹாபிகள் அதாவது இன்று தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இருக்கும் வழிகேடர்கள். இவர்கள் அனைவரையும் விட்டு அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.