MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
தமிழ் பகுதி - சுத்தம், குளிப்பு, வுழு, தயம்மும் சட்டங்கள்
சுத்தம், குளிப்பு, வுழு, தயம்மும் சட்டங்கள்
சுத்தம் என்றால் என்ன?
சுத்தம் ஈமானில் பாதி என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள். சுத்தம் மூன்று வகைப்படும்.
1. உடல் சுத்தம்
2. உடை சுத்தம்
3. இடம் சுத்தம்
இம்மூன்று வகை சுத்தமும் செய்து கொள்ளாவிடில், தொழுகையை நிறைவேற்ற முடியாது.
தொடக்கு வகைகள்
1. பெரும் தொடக்கு
பெரும் தொடக்கு என்பது உடல் உறவு கொள்ளல், தூக்கத்திலோ அல்லது விழிப்பிலோ விந்து வெளியாவதால், மாத தீட்டு, பிரசவ தீட்டு போன்றவற்றால் ஏற்படும் அசுத்த நிலையை குறிக்கும். இந்த தொடக்கு உள்ள ஒருவர் கடமையான குளிப்பை குளிப்பதன் மூலமோ அல்லது தயம்மும் செய்வதன் மூலமோ மட்டுமே இத்தொடக்கிலிருந்து சுத்தமாக முடியும்.
2. சிறு தொடக்கு
சிறு தொடக்கு என்பது ஒருவர் வுளூ இல்லாமல் இருக்கும் நிலையை குறிக்கும். இவர்கள் வுளூ செய்வதன் மூலமோ தயம்மும் செய்வதன் மூலமோ இதிலிருந்து சுத்தமாகலாம்.
பெரும் தொடக்கு உள்ளவர்கள் (குளிப்பு கடமையானவர்கள்) செய்யக்கூடாத காரியங்கள் எவை?
தொழுதல், மஸ்ஜிதில் தங்குதல், குர்ஆனை ஓதுதல், குர்ஆனை தொடுதல், கஃபதுல்லாஹ்வை தவாபு செய்தல் போன்றவைகளை செய்யக்கூடாது. மேலும் குர்ஆனை கற்றுக்கொள்ள கூடாது. ஹதீஸ்களில் இடை இடையே வரக்கூடிய சிறிய ஆயத்துகளாக இருந்தாலும் கற்றுக்கொடுப்பதும் கற்றுக்கொள்வதும் ஓதுவதும் கூடாது. தூங்கும் போது வழக்கமாக ஓதி வரும் ஸுராக்களை ஓதக்கூடாது. குர்ஆன் ஓதும் நோக்கமின்றி பிஸ்மி ஓதலாம். திக்ரு, ஸலவாத்துகள், மஸ்னூன் துஆக்கள் ஓதுவது கூடும். குர்ஆன் வசனங்களில்லாத ஹதீஸ்களை ஓதலாம்.
மாதவிடாய், பிரசவ தீட்டு மூலம் பெரும் தொடக்காகி இருந்தால் பெண்கள் மேலே சொன்னவையுடன் நோன்பு நோற்கவும், உடலுறவு கொள்ளவும் கூடாது.
மாதவிடாய், பிரசவ தீட்டு காலங்களில் விடுப்பட்ட வணக்கங்களை பெண்கள் மீண்டும் செய்ய வேண்டுமா?
மாதவிடாய், பிரசவ தீட்டு காலங்களில் விடுப்பட்ட தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை. ஆனால், விடுபட்ட பர்ளான நோன்புகளை கணக்கு வைத்து பின்னர் நோற்க வேண்டும்.
குறிப்பு: மாதவிடாய், பிள்ளை பேறு உடையவர்கள் தொழுகையின் நேரம் வந்ததும் ஒழு செய்து, தொழுகும் நேர அளவு கலிமா, தஸ்பீஹ், இஸ்திஃபார் சொல்லி கொண்டு இருப்பது முஸ்தஹப்பாகும் (விரும்பத்தக்கது)
சிறு தொடக்கு உள்ளவர்கள் (வுளூ இல்லாதவர்கள்) செய்யக்கூடாத காரியங்கள் எவை?
தொழுதல், குர்ஆனை தொடுதல் (குறிப்பு - வுளூ இல்லாதவர் குர்ஆனை மனனமாக ஓதலாம்)
குர்ஆனை ஒதுவதற்கும், தொடுவதற்கும் எந்த தொடக்குகளில் இருந்து சுத்தமாகி இருக்க வேண்டும்?
குளிப்பு கடமையானவர்கள் குர்ஆனை தொடவும் கூடாது. மனப்பாடமாக ஓதவும் கூடாது. வுளூ இல்லாதவர்கள் குர்ஆனை மனனமாக ஓதலாம். ஆனால் தொடக்கூடாது.
கடமையான குளிப்பு
குளிப்பை கடமையாக்கும் காரியங்கள்
ஆண், பெண் உடல் உறவு கொள்ளல், மாதவிடாய் (ஹைலு) தொடக்கு ஏற்பட்டு முழுமையாக நின்ற பின், பிரசவ தீட்டு (நிபாஸ்) ஏற்பட்டு முழுமையாக நின்ற பின், தூக்கத்திலோ அல்லது விழிப்பிலோ விந்து வெளியாவதால்,பைத்தியம் ஏற்பட்டு தெளிவு ஏற்பட்ட பின்னர், வேறு மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்த பின்னரும் இக் குளிப்பு கடமையாகும்.
குளிப்பின் பர்ளுகள் - 2
1. "பெருந்தொடக்கை விட்டு நான் நீங்குகிறேன்" என்று மனத்தால் நிய்யத் செய்து கொள்ளுதல்
2. அந்த நிய்யத்தோடு உடல் முழுவதும் தண்ணீரால் நனையும் படி குளித்துக்கொள்ளுதல்.
குளிப்பின் ஸுன்னத்துகள் - 11
முதலாவது பிஸ்மி சொல்வது, இரு மணிக்கட்டு வரை கழுவ வேண்டும், வாய் கொப்பளிப்பது, மூக்கை சுத்தம் செய்தல், உடையில் அல்லது உடலில் நஜீஸ் பட்டு இருந்தால் கழுவுதல், குளிக்கும் முன் சிறுநீர் கழிப்பது, பூரணமான முறையில் வுழு செய்வது, கிப்லாவை முன்னோக்குவது, உடலை நன்றாக தேய்த்து குளிப்பது, ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை செய்வது.
கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது கவனிக்கவேண்டிய முக்கிய விடயங்கள்
தலையில் மூன்று தடவைகள் தண்ணீரை ஊற்ற வேண்டும். உடலை நன்றாக தேய்த்து குளித்தல், மூக்குத்தி, மோதிரம், தோடு போன்ற நகைகள் அணிந்துள்ள பெண்கள் அவற்றை நகர்த்தி அவற்றினுள் தண்ணீர் புகும்படி கழுவ வேண்டும். உதட்டு சாயம், நகப் போலிஷ் போட்டு இருந்தால் அவற்றை அகற்றி விட்டு குளிக்க வேண்டும். குளிக்கும் போது காதுகளையும், மூக்கையும், தொப்புளையும், மலம் சிறுநீர் கழிக்கும் பாகத்தையும் நன்றாக கழுவுவது கடமையாகும். இப்பகுதிகளுக்கு தண்ணீர் செலுத்தி சுத்தப்படுத்தவில்லையானால் குளிப்பு நிறைவேறாது. ஒரு முடி நனையாமல் இருந்தாலும் குளிப்பு நிறைவேறாது. வாஸ்லைன், ஹேர்டை போன்றவைகள் தலை முடியில் பூசப்பட்டு இருந்தால் அவற்றை சோப்பு அல்லது ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு கழுவ வேண்டும்.
குளிக்கும் முறை
கடமையான குளிப்பை நிறைவேற்று முன் மர்மஸ்தானத்தைக் கழுவி உளூச் செய்து கொள்ள வேண்டும்.உடல் முழுவதும் தண்ணீர் பட்டு நனையுமாறு குளிக்க வேண்டும். குளித்த பின் தொழ வேண்டியிருந்தால் மறுபடியும் உளூச் செய்ய வேண்டியதில்லை. குளிக்கும் போது செய்த உளூவே போதுமானது.
♦ நபி صلى الله عليه وسلم அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
♦ நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது கைகளின் மீது (சிறிதளவு தண்ணீர்) ஊற்றி இரண்டு, மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தில் ஊற்றி மர்ம ஸ்தானத்தைக் கழுவினார்கள். பின் தம் கைகளைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து, மூக்கையும் சுத்தம் செய்து முகத்தைக் கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தமது மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
♦ நபி صلى الله عليه وسلم அவர்கள் குளித்தபின் உளூச் செய்ய மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
வுழூ
வுழுவின் ஷர்த்துக்கள் என்ன?
வுழுவின் ஷர்த்துக்கள் 6 அவையாவன:
1. முஸ்லிமாகயிருத்தல்.
2. பகுத்தறிவும், புத்தியுள்ளவனாக இருத்தல்.
3. வுழு பர்ளு என்று அறிதல்.
4. வுழுவின் முறைகளை எல்லாம் அறிந்திருந்தல்.
5. வுழுச் செய்வதற்கான துப்புரவான தண்ணீரை தேடுதல்.
6. வுழுச் செய்யும் பர்ளான உறுப்புகளில் தண்ணீர் படாமல் தடை செய்யக்கூடிய தார், சுண்ணாம்பு, சந்தனம், மெழுகு, மீன் செதில், கடதாசி தாள் போன்ற ஏதும் ஒட்டியிருந்தால் அவற்றை நீக்கி கொள்ளுதல்..
வுழுவின் பர்ளுகள் என்ன?
வுழுவின் பர்ளுகள் 6 அவையாவன:
1. வுழுவின் கடமைகளை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத்து செய்தல்.
2. அந்த நிய்யத்துடன் முகத்தை கழுவுதல்.
3. இரு கைகளையும் (முழங்கை உட்பட) கழுவுதல்.
4. தலையில் சில பகுதியை தண்ணீரால் தடவுதல்.
5. இரு கால்களையும் கரண்டையுட்பட கழுவுதல்.
6. மேலே கூறப்பட்ட ஒழுங்கு தவறாது ஒன்றன் பின் ஒன்றாக செய்தல்.
வுழுவின் சுன்னத்துக்கள் என்ன?
வுழுவின் சுன்னத்துக்கள் 14 அவையாவன:
1. கிப்லா பக்கம் முகம் நோக்குதல்.
2. வுழு செய்கிறேன் என்று நினைத்தல்.
3. பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதிக் கொள்ளுதல்.
4. இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுதல்.
5. பற்களை சுத்தம் செய்தல்.
6. வாய் கொப்பளித்தல்.
7. வாயுடன் நாசிக்கும் நீர் செலுத்துதல்.
8. முகம் கழுவும் போது தாடியை குடைந்து கழுவுதல்.
9. வலது பாகத்தை முதலில் கழுவுதல்.
10. தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்.
11. இரு காதுகளையும் மஸ்ஹு செய்தல்.
12. காலின் விரல்களை கோரிக் கழுவுதல்.
13. ஒவ்வொரு உறுப்புகளையும் மூன்றுமுறை கழுவுதல்.
14. கழுவிய உறுப்புக்கள் காய்வதற்கு முன் உறுப்புகளை கழுவுதல்.
வுழுவை முறிக்கும் காரியங்கள் எவை?
வுழுவை முறிக்கும் காரியங்கள் 5 அவையாவன:
1. முன் துவாரத்தால் அல்லது பின் துவாரத்தால் இந்திரியம் நீங்கலாக மற்றதேனும் வெளியாகுதல்.
2. பித்தட்டு பூமியில் நன்கு சரியாக அமையாமல், நித்திரை செய்தல்.
3. அபத்தில் (மர்ம ஸ்தானம்) கையின் உட்புறம் படுதல்.
4. சுய உணர்வு இல்லாமல் போகுதல்.
5. தனக்கு விவாகம் செய்ய தகுமான மாதரை திரையின்றி தொடுதல்.
வுழு இல்லாமல் செய்யகூடாத காரியங்கள் எவை?
வுழு இல்லாதவர்கள் செய்யகூடாத காரியங்கள் 3 அவையாவன:
1. தொழுதல்.
2. குர்ஆனை தொடுதல்.
3. மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ் என்னும் அல்லாஹ்வின் புனித ஆலயத்தை தவாபு செய்தல் (வலம் வருதல்)
தயம்மம்
தயம்மம் செய்வதன் விபரம்
தயம்மம் என்றால் வுழு அல்லது குளிப்புக்குப் பதிலாக புழுதி மண்ணால் செய்யப்படும் தூய்மையாகும். வுழு செய்து கொள்வதற்கோ, அல்லது கட்டாயமான குளிப்பை நிறைவேற்றிக் கொள்ளவோ தண்ணீரை உபயோகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு நோய் ஏற்பட்டிருந்தாலும் அல்லது தண்ணீரை உபயோகித்தால் நோய் கூடுதலாகி விடும் என அஞ்சினாலும் அல்லது தன்னிடமுள்ள தண்ணீரைக் கொண்டு மேற்படி வுழு குளிப்புக் கடமைகளை நிறைவேற்றி விட்டால் தனக்கோ அல்லது தனது வாகனமாகிய பிராணிக்கோ குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் போகுமெனப் பயந்தாலும் உரியவிலை கொடுத்தான் தண்ணீர் வாங்க முடியாவிட்டாலும் தயம்மம் செய்து கொள்ளலாம். தயம்மத்தால் புரியப்பட்ட வணக்கங்களைத் தண்ணீர் கிடைத்த பிறகு கழாச் செய்ய வேண்டிய அவசியமில்லை.
தயம்மமின் ஷர்த்துக்கள் என்ன?
தயம்மமின் செய்வதற்கு நிபந்தனைகள் 7 அவையாவன:
1. தயம்மம் செய்ய வேண்டிய வஸ்து மண்ணாக இருத்தல் வேண்டும். சுண்ணாம்பு, சீமெந்தி, மாவு, தனி மணலாக இருக்கக் கூடாது.
2. அந்த மண் சுத்தமானதாக இருத்தல்.
3. முன்னர் தயமத்திற்கு உபயோகிக்கப்படாததாக அந்த மண் இருத்தல்.
4. அம்மண் புழுதி உள்ளதாக இருத்தல்.
5. அந்தந்த நேரம் வந்தபின் அந்தந்த வக்துக்காக தயம்மம் செய்தல்.
6. தண்ணீர் உபயோகிக்க வாய்ப்பில்லாமல் இருத்தல்.
7. தயம்மத்திற்கு முன் உடம்பிலுள்ள அசுத்தங்களைச் சுரண்டித் தேய்த்துக் கழுவுதல்.
தயம்மமின் பர்ளுகள் என்ன?
தயம்மமின் பர்ளு 7 அவையாவன:
1. தொழுகையை அல்லது கஃபாவை தவாபு செய்வதை (எதை நினைக்கிறானோ அதை) ஆகுமாக்கத் தேடுகிறேன் என்று மண்ணில் இருகைகளையும் அடிக்கும் போதே நிய்யத்துச் செய்தல்.
2. மண்ணை நாடுதல்.
3. அந்த மண்ணைத் தன் கைகளாற் தடவிச் செப்பப்படுத்தல்.
4. முந்திய அடியாள் முகத்தைத் தடவிக் கொள்ளுதல்.
5. இரண்டாம் அடியால் இரு கைகளையும் முழங்கை உட்பட தடவிக் கொள்ளுதல்.
6. மேற்கூறியவைகளை வரிசைக் கிராமமாகச் செய்தல்.
7. முகத்திற்கு ஓர் அடியும், கைகளுக்கு ஓர் அடியும், அந்த மண்ணில் இரண்டு அடிகள் தனித்தனியாக அடித்தல் வேண்டும்.
தயம்மமின் சுன்னத்துக்கள் என்ன?
தயம்மமின் சுன்னத்துக்கள் 6 அவையாவன:
1. கைகளை மண்ணில் அடித்துப் பிறகு இரு புறங்கைகளாலும் தட்டிவிடுதல்.
2. ஆகுமாக்கத் தேடும் செயலை வாயால் உரைத்தல். உதாரணமாக தொழுகையை ஆகுமாக்குகிறேன் என்றோ, அல்லது கஃபாவை தவாபு செய்ய ஆகுமாக்குகிறேன் என்றோ வாயாற் கூறுதல்.
3. இவ்வாறு கூறிய பின் “பிஸ்மில்லாஹ்” கூறுதல்.
4. தடவும்போது வலது கையை முதலாவதாகத் தடவுதல்.
5. முகத்தை மஸ்ஹு செய்தபின் சுணக்கமின்றிக் கைகளுக்கு மஸ்ஹு செய்தல்.
6. கைகளுக்கு மஸ்ஹு செய்யும்போது இடது கையின் பெருவிரளைத் தவிர மற்ற விரல்களில் உட்புறத்தை வலது கைவிரல்களின் முதுகுப்புறத்தில் (மேற்பகுதியில்) வைத்தவண்ணம் முழங்கை வரை தடவி அதன் பின் இடதுகையின் உள்ளங்கையை வளதுகையின் உட்பாகத்தில் (கீழ்ப்பகுதியில்) தொட்டவண்ணம் மணிக்கட்டுவரை தடவுதல், பின்னர் இடது கைப்பெருவிரலை வலதுகைப் பெருவிரலின் மேற்பாகத்தில் தடவுதல் இதேவிதமாக இடதுகைக்கும், வலது கையால் தடவ வேண்டும்.
தயம்மத்தை முறிக்கும் காரியங்கள் எவை?
தயமத்தை முறிக்கும் காரியங்கள் 7அவையாவன:
1. வுழுவை முறிக்கும் ஐந்து காரியங்கள்.
2. தண்ணீரில்லாதவன் அதனைப் பெற்று விடுதலும் அதை உபயோகிக்க இயல்பிருத்தலும்.
3. இஸ்லாத்தை விட்டும் மதம் மாறிப் போகுதல்.