MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
மணம் கமிழும் பூமான் முகம் காண
தங்கள் முகம் காண துடிக்கின்றேன் நாயகமே..!
தங்கள் அழகு முகம் காண ஏங்குகிறது என் உள்ளம் நாயகமே…..!
நான் பிறந்த பிறப்பிற்கே பயன் ஏது தங்கள் முழுமதி காண்பதே என் நாயகமே…..!
என் கண்கள் தங்களை அல்ல தங்கள் பாதணியை கூட காண அருகதை அற்றது என் நாயகமே…..!
இரக்க உள்ளம் உங்களது என் நாயகமே…..!
தயவுடன் எனை கூர்ந்து இந்த பேதை ஆசையை தீர்த்து விடுங்கள் என் நாயகமே…..!
தங்கள் இனிய அன்பு பார்வை பெற பேதை தவிக்கின்றேன் என் நாயகமே…..!
இந்த பாவையின் பாவம் மன்னித்து தங்கள் புனித காலடியில் இடம் தந்தருள வேண்டும் என் நாயகமே…..!
தங்கள் கஸ்தூரி மணம் கமிழும் காலடியில் இடம் தந்தால் புனித சுவர்க்கம் இழக்க தயார் என் நாயகமே…..!
இனிய சுவர்க்கம் வேண்டாம், தங்கள் கருணை முகமும் புனித காலடியும் எனக்கு போதும் என் நாயகமே…..!
பாரினில் பிறந்த இந்த பாவிக்கு இந்த வரம் போதும் என் நாயகமே…..!
தங்களையன்றி உதவிட இந்த வையகத்தில் எவருமில்லை என் நாயகமே…..!
என் இறுதி மூச்சை தங்கள் ரவ்லாவிலே விட என் உள்ளம துடிக்கின்றது என் நாயகமே…..!
நன்நீதரே தங்களையன்றி சேர்த்தனைப்பார் எனக்கு வேறு யாருமில்லை என் நாயகமே…..!
என் உள்ளத்தில் உதிர்த்த மலர்களை தங்கள் பாதம் சமர்ப்பித்தேன் என் நாயகமே…..!
இந்த பாவையின் ஏக்கம் தீருவது என் நாளோ என் கண்மணியே என் நாயகமே…..!
என் இனிய உயிர் நபியே............!
என் உடலில் உயிர் இணைந்திருக்கும் காலமெல்லாம் இனிய நபி மீது புகழ் பாடும்
என் வழக்கம் நிலைத்திடுமே..............!
அருள் நபி மேல் நான் கொண்டிருக்கும் காதல்
என்னை அர்ஷுடைய நாயனின்
பால் நலமாய் சேர்த்திடுமே.........!
கருணை நபியின் குடும்பத்தின் மீது நான் கொண்ட ஈமான் என்னை சுவர்க்கம்
கொண்டு சென்றிடுமே.........!
அண்ணல் நபியின் திருமுகத்தை
வாழ்வில் ஒரு தடவை காண கிடைத்தால்
என் பாவங்கள் தொலைந்திடுமே..........!
ஜோதி நபியின் திருநாமம் நான் சொக்கி கூற
என் உள்ளம் ஜோதியாய் ஆகிடுமே...........!
சங்கை நபியின் புனித ரவ்லாவை
நான் தரிசித்தால் என் உள்ளம்
மதீனாவாக மாறிடுமே..........!
நாவினாலே ஸலவாத் ஓத
உள்ளத்தால் ஸலாமும் கூற
மாநபியின் ஷஃபாஅத்து கிடைத்திடுமே..........!
எண்ணிக்கை, எல்லைகள் எதுவுமின்றி
பெருகி வரும் என் கண்ணிய ஸலாமும்
நற் ஸலவாத்தும் புண்ணிய நபி மீது எந்நாளும் பொழிந்திடுமே.............!
என் கண்மணியே யா ரஸுலல்லாஹ்..............!
என் ஆருயிரே பெருமானே.............!
என் உயிரிலும் மேலாக தங்களை நேசித்தேன் எம்மானே........!
தங்கள் அன்பு எனக்கு உயிரிலும் மேலானது பூமானே.........!
தங்கள் உறவு எனக்கு கற்பிலும் சிறந்தது பெருமானே.......!
தங்கள் சிறப்பு நான் சொல்ல வார்த்தையுண்டோ எம்மானே......!
தங்களுக்காகவே இந்த உலகம் என்று இறைவன் கூற பெரும் சிறப்பல்லோ பூமானே...!
ஆதியிலே ஒளியாக்கி முழு உலகுக்கும் அருளாக்கி தங்கள் அந்தஸ்த்தை படைத்தவனே உயர்வாக்கியது பெரும் சிறப்பல்லோ பெருமானே.....!
வான் அழைத்து தன் பேரொளியை பெரும் விருந்தாக தங்களுக்கு இறை அளித்தது பெரும் மாண்பல்லோ எம்மானே......!
உலகின் படைப்பில் உயர்ந்தவர் நீங்கள் என்று படைத்தவன் பகர்ந்தது பெரும் உயர்வல்லோ எம்மானே........!
தங்களை பெற்ற தாயின் கருவறை என்ன பாக்கியம் செய்ததோ தங்களை சுமந்ததால் பூமானே.......!
தங்கள் தன்னடக்கம், பணிவு, பொறுமை, எளிமை இவைகளை கற்க தனி உலகமே வேண்டுமே பெருமானே.....!
இரு உலகிலும் நட்புக்கு இலக்கணம் நீங்களும், அபூபக்கர் ஸித்தீக்கும் தானல்லோ எம்மானே.....!
தங்கள் காதலில் நான் மாய்ந்து ஆஷிகே ரசூலாக நான் மடிந்தால் அது என் பாக்கியமல்லோ பூமானே! .....!
வாழ்வில் ஒரு தடவை தங்கள் திருமுகம் நான் காணின் அது என் வாழ்வின் பேறல்லோ பெருமானே.....!
மக்கத்து மலராகி, சொர்க்கத்துக்கு வழித் தந்த மதீனத்து மன்னரின் பொற்பாதத்தில் என் உயிர் போனால் அது ஜெயமல்லோ எம்மானே.....!
ஹவ்ளுல் கௌஸரில் தங்களுடன் நானிருக்கும் பாக்கியம் பெரும் பேறல்லோ பூமானே.....!
அருளான ஸலாமும், உயர்வான ஸலவாத்தும் நான் மொழிய தங்கள் ஷபாஅத் கிடைக்குமல்லோ பெருமானே.....!
மகத்துவத்தின் மாமணியே, மன்றாடும் மாநபியே தங்கள் ஷபாஅத் நான் ஈடேற நல் வழியல்லோ எம்மானே.....!
கண்மூட முன்னர் காணனும் என் கண்மணியை!
என் உயிருக்குள் உயிராகி என் உணர்வுக்குள் உணர்வாகிய என் நாயகமே..!
என் உயிரோவியத்தின் சுவாச மூச்சே..!
என் நாடி நரம்புகளின் புத்துணர்ச்சியே..!
என் ஈமானின் இனிய சுவாசமே..!
என் உயிராய் அமைந்து விட்ட என் ஆருயிரே..!
எம்மானே! இரசூரே! என்னவென்று உரைப்பேன் உங்கள் புகழை..!
எப்படி வர்ணிப்பேன் தங்கள் பேரழகை..!
வர்ணிக்க தெரியவில்லை நாயகமே..!
என்றாலும் கோடி ஆசைகள் என் இதயமேனும் வீட்டில் என் உயிரே..!
மண்ணறையில் தங்கள் தரிசனம் கிடைக்க எனக்கோர் வரம் வேண்டும் கண்மணியே!
என் இறுதி மூச்சை தங்கள் காலடியில் விட எனக்கோர் வரம் வேண்டும் கண்மணியே!
சுவனமெனும் சோபன வீட்டில் தங்களுடன் நான் இருக்க எனக்கோர் வரம் வேண்டும் கண்மணியே..!
தங்கள் தளிர் கரங்களால் என்னை அள்ளி கப்ரில் வைத்திட எனக்கோர் வரம் வேண்டும் கண்மணியே..!
என் உயிர் பிரியும் வரை என் நாவு தங்களை புகழ்ந்துக்கொண்டே இருக்க எனக்கோர்
வரம் வேண்டும் கண்மணியே..!
இப்படியே கோடான கோடி ஆசைகள் இந்த பாவிக்கு கண்மணியே..!
என் இதயமென்னும் இல்லத்தில் ஒரு தவம் பல நாளாய் காத்து கிடக்கிறது….
ஆம்! அது என்ன தெரியுமா கண்மணியே..?
கண்மூட முன்னர் கண்மணியே தங்களை கனவிலேனும் காண எனக்கோர் பாக்கியம் வேண்டும்..!
தங்கள் பொன்னான மேனியை கண்ணார நான் கண்டு கறை படிந்த என் பாவம் கழுவிட எனக்கோர் பாக்கியம் வேண்டும்..!
என் உயிர் என்னை விட்டு பிரியும் முன் ஒரே ஒரு வினாடியேனும் தங்கள் பேரழகை என் கண்களால் பருக எனக்கோர் பாக்கியம் வேண்டும்..!
கருணை வடிவே! காருண்ய திலகமே..!
உங்கள் அடிமையின் துயர் துடைக்க அருட்கண் கொண்டு பாருங்கள்..!
உங்கள் ஆதரவை தாருங்கள்..! யா ரசூலே..! யா ஹபீபே..!
நாயகத்தின் திருநாமம்
நாயகமே, உங்கள் திருநாமம் உச்சரித்'தேன்'.
அது என் நாவுக்கு இனிமை 'தேன்'.
அதை நன்றாக சுவைத்'தேன்'
அப்பப்பா இது போல சுவையும் மணமும்
என்றும் எனக்கு இனித்ததில்லை.
மணம் வீசும் மதீனா...
மணம் வீசும் மதீனாவின் என் மனம் கவரும் நாயகமே!
அந்த மணம் வீசும் மண்ணிலே என் மரணம் வர வேண்டுமே!
புனித மண்ணின் காற்றை சுவாசிக்க எனை அழைப்பீர்கள் நாயகமே!
இந்த எளியவளை அங்கு அழைக்க என் இந்த தாமதமோ!
புனித நபியால் புனிதம் பெற்ற மண்ணிலே என் வாழ்நாள் அழியாதோ!
மன்னர்களின் மன்னரான மன்னவரை கண்டு என் உள்ளம்தான் லயிக்காதோ!
என் இனிய நபியே.. (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்)
என் உடலில் உயிர் இணைந்திருக்கும் காலமெல்லாம் இனிய நபி மீது புகழ் பாடும் என் வழக்கம் நிலைத்திடுமே!
அருள் நபி மேல் நான் கொண்டிருக்கும் காதல் என்னை அர்ஷுடைய நாயனின் பால் நலமாய் சேர்த்திடுமே!
எண்ணிக்கை, எல்லைகள் எதுவுமின்றி பெருகி வரும் என் கண்ணிய ஸலாமும், நற்ஸலவாத்தும் புண்ணிய நபி மீது என் நாளும் பொழிந்திடுமே!
வருக வருக வசந்தமே!
வருக வருக வசந்தமே வருக!
புண்ணியம் பூத்து குலுங்கும் புனித மாதமே வருக!
முமீன்களின் உள்ளத்தின் சந்தோசமே வருக!
படைப்புகளின் மேலான படைப்பை சுமந்து வரும் மாதமே வருக!
மக்கத்து மாமன்னரின் உதயதினமே வருக!
அருள் மணக்கும் நன் நபியின் புகழ் மணக்கும் தினமே வருக!
ஒப்பற்ற உத்தமரின் புகழ் கொழிக்கும் மாதமே வருக!
சிந்தையில் பரவசம் ஜொலிக்கும் ஜோதி நபியின் நன்னாளே வருக!
தன்னிகரில்லா தனி பெரும் சிறப்புகளை கொண்ட சிறந்தவரின் மாதமே வருக!
அல்லாஹ்வின் அருளை புகழ்ந்திடுவோம் ..
அல்லாஹ்வின் அருளாக அவனியிலே அவதரித்த அருட்கொடையை புகழ்திடுவோம் நாம்.
இறையோனை இதயத்தில் ஏந்திய ஞானத்தை நெஞ்சார புகழ்திடுவோம் நாம்.
இவ்வையகமே உண்மையாளர் என போற்றிய தங்கத்தை புகழ்திடுவோம் நாம்.
கஸ்தூரி மணம்கொண்ட உத்தமரை உள்ளம்குளிர புகழ்திடுவோம் நாம்.
அல்லாஹ்வின் அர்ஷுக்கு போன ரோஜாவின் பாதத்தை முத்தமிடு வோம் நாம்.
கண்ணிய மேனி கமழ செய்திடும் கஸ்தூரி வாசத்தை நுகர்ந்திடுவோம் நாம்.
என் கண்மணியே! இரசூலே..
என் கண்மணியே! இரசூலே! கவி மழையால் உங்களை புகழ் பாட வந்துள்ளேன்!
எத்தனை கோடி கவிஞர்கள் திரண்டாலும் முடியாத தங்கள் புகழ் பாட இந்த பேதை பேராசைப்பட்டேன்.
இதோ புகழை புகழக் கோல் ஏந்தினேன். என் பேனாவும் வெட்கி தலை குனிந்தது.
முடியாமல் திண்டாடினேன். ஆனாலும் என் ஆருயிரை நினைக்கும் போது அருவியாய் உள்ளத்தில் பொங்கி வரும் பாசத்தை கவி வடிவில் கொட்டினேன்.
கண்ணியத்தின் கோட்டையே! அகிலத்தின் அருட்கொடையே! ஞானத்தின் திறவுகோலே!
ஈமானிய உதிரத்தால் எங்கள் கல்புகளை நிரப்பிய ரசூலே!
உலகத்தின் மாமணியே ஒப்பற்ற கோமானே!
ஏழையின் சிரிப்பில் இறை சந்தோசத்தை கண்ட பெருமானே!
வறுமை எனக்கு பெருமை என்றுரைத்த கோமானே!
பொறுமையின் பொக்கிஷமாய் விளங்கிய பூமானே!
கியாமத்து என்னும் மறுமை நாளிலே ஆதரவாய் அடைக்கலமாய் உம்மத்தை எல்லாம் அரவணைத்து காப்பாற்றும் அன்பு உள்ளமே!
உம்மி நபியா நீங்கள்? தாங்கள் அல்லவா உலக பல்கலைகழகம்!
பலகற்ற மேதைகளும் பயின்று வரும் புத்தகம் அல்லவா நீங்கள்.
மாபெரும் தத்துவங்களை இந்த அகிலத்திற்கு வாரி வழங்கிய தங்களை கல்லாநபி என்று எப்படி உரைப்பது?
நாயகமே! நீங்கள் பிறந்த போது கிஸ்ரா மன்னனின் கோட்டை மட்டுமல்ல இறுகி போன மனகோட்டைகளும் சரிந்தன.
பஸ்ரா மாளிகைகள் மட்டுமல்ல பாவப்பட்ட மனங்களும் இலங்கி நின்றன.
பாரசீகத்தில் பொங்கிய நெருப்பு தங்கள் ஒளிமதி கண்டு சாந்தமானது.
சமாவத் ஓடை தங்கள் வரவால் ஒடுங்கி போனது.
தாங்கள் மண்ணில் மலர்ந்த போது பாலை மண்ணே மணத்தது.
தங்கள் பிறப்பால் முழுமனித வர்க்கமே மாண்புற செய்தீர்கள்.
ஏந்தலே! உங்கள் வரவால்தான் எங்கள் பூட்டப்பட்ட மனக்கதவுகள் திறக்கப்பட்டது.
பெண்வர்கத்தை மண் தோண்டி புதைத்த சமூகத்தின் மனங்களில் அன்பென்னும் விதையை விதைத்தவர் நீங்கள்!
எத்தனை கொடுமைகள், எத்தனை கஷ்டங்கள் அத்தனையும் தாங்கள் தாங்கியதால் தானோ பொறுமை கூட உங்களிடம் பொறுமை கற்றது.
கருணை நபியே! கவலைகள் உள்ளத்தை தாக்கும் பொழுது, தாங்கள் நினைவுகள் தானே எங்கள் மனகாயங்களை சுகப்படுத்துகின்றது.
எங்கள் ஆன்மாவின் அருமருந்தே!
கண்ணீர் பெருக, நெஞ்சம் விம்ப என் சங்கையான ஸலவாத்தையும், பண்பான ஸலாமையும் உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன் யா ரசூலல்லாஹ்!
கடலுக்குள் மீன் கண்ணீர் சிந்தினால்
கடலுக்குள் மீன் கண்ணீர் சிந்தினால் யாரறிவார் தங்களையன்றி யா ரஸூலல்லாஹ்..!
துன்பம் எனும் சகதிக்குள் துவண்டு போன மீனை அன்பு எனும் தூண்டில் போட்டு அரவணைக்க தூயவர் யாருண்டு தங்களையன்றி யா ரஸூலல்லாஹ்..!
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உள குமுறல்களை உரிமையுடன் எடுத்துரைக்க கருணை கடல் யாருண்டு தங்களையன்றி யா ரஸூலல்லாஹ்..!
எம் போன்ற பாவிகளை கைதூக்கி கரை சேர்க்க இவ்வையகத்தில்
யாருண்டு தங்களையன்றி யா ரஸூலல்லாஹ்..!
கருணை நபி மீது காதல் கொண்டேன்
என் கருணை நபி மீது காதல் கொண்டேன்.
என் பூமான் நபி மீது நேசம் கொண்டேன்.
பெருமான் நபிகள் பிறந்ததினாலே இவ்வையகத்தின் விடிவை கண்டேன்.
நள்ளிரவு கனவிலே நாயகதிருமேனியின் சுந்தர அழகை கண்டேன்.
எம் பெருமானின் அழகில் இணையற்ற பேரொளிவு இலங்க கண்டேன்.
கோமான் நபிகளின் நிறை வாழ்வில் பெரும் அதிசயம் கண்டேன்.
விண்ணேற்றத்தின் போது என் மன்னரின் உயர் மதிப்பை கண்டேன்.
காலையில் உதித்தெழும்பும் கதிரவனின் பிரகாசத்தை சுந்தர நபியில் கண்டேன்.
இரவு பௌர்ணமியின் பேரொளியை ஜோதி நபியில் கண்டேன்.
உயர் ஸலவாத்தால் என்னுடைய உள்ளம் ஒளிர கண்டேன்.
ஞான நபியில் மெய்ஞானம் பொங்கும் அகமியம் கண்டேன்.
அண்ணல் நபியின் கருணையால் என் பாவம் அழியக் கண்டேன்.
புகழ் மணக்கும் இவ்வையகத்தில் அருள் நபியின் பெருமையை கண்டேன்.
அருள் மணக்கும் மதீனாவில் புகழ் மணக்கும் நன் நபியை கண்டேன்.
மறுமையின் திண்டாட்டத்திலே வள்ளல் நபிகளின் பரிவை கண்டேன்.
பரிந்துரை தேடி அலையும் போது என் கண்மணியின் பாசம் கண்டேன்.
என் இறைவனின் அருள் மழை
சோதனை மழையில் தினமும் நனைகின்றேன்.
அந்த மழைநீரில் என் கண்ணீர் மறைந்து போகிறது.
என் கண்ணீர் வெளியே தெரிவதில்லை.
காரணம் அது என் இறைவனின் அருள் மழை என்பதால்....
என் இதயத்தின் ராஜா
ரோஜா மணம் கொண்ட என் இதயத்தின் ராஜாவே!
தாங்கள் வீற்றிருப்பதால் என் இதயம் மணம் கமழுதே!
அதன் பரக்கத்தால் என் நாவும் தங்கள் புகழ் பாடுதே!
யா ரஸுலல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
STOP பட்டனை அழுத்துவதன் மூலம் குறித்த கவிதையை நிறுத்தி வாசிக்கலாம்
தமிழ் - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள் - ஷர்மிளா காதிரி கவிதைகள்