MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸஹாபாக்கள் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத்
♣ நான் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை, என் உள்ளே இருக்கிற விஷயத்தை நான் வெளியிடுவேனானால், ஆழமான கிணற்றில் விடப்பட்ட கயிறு துடிப்பதை போன்று நீங்களும் துடிப்பீர்கள்.
ஸெய்யதுனா இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு
♣ அல்லாஹ், தன்னையே வணங்குவோனும், வணங்கப்படுவோனும் ஆவான்.
ஹழ்ரத் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு
♣ நான் இறைவனை முப்பதாண்டுகளாக தேடினேன். ஆனால் ஆழ்ந்து கவனிக்கும் பொழுது அவனே தேடுபவனாகவும் நான் தேடப்படும் பொருளாகவும் இருந்ததை உணர்தேன்.
இமாம் அபூ யஸீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு
♣ அகப் பார்வையுடைய ஞானக் கண்ணானது ஒளி பெற்றதாக இருந்தால், அது எந்தத் திசையை நோக்கினாலும் அவனது தோற்றத்தையே காணும்.
ஹழ்ரத் காஜா மீர்தர்த் ரலியல்லாஹு அன்ஹு
♣ ஒரு தடவை ஜுனைதுல் பக்தாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பனா நிலையில் பேசுகின்றவனும் நானே, கேட்கின்றவனும் நானே, ஈருலகிலும் வேறு யார் உள்ளார்? என்று தம்மையறியாமல் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர்களை காபிர் என்று மார்க்க அறிஞர்கள் கூறவும், அவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாகவும் நேரிட்டது.
நூல்: வலிமார்களின் வரலாறு பாகம் - 2
♣ எல்லாம் அவனுடைய ஒளிதான், எல்லாம் அவனே, அவன் அல்லாததற்கு எந்த ஒரு எதார்த்தமும் இல்லை.
இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத்துல் அன்வார், பக்கம் 60
♣ ஏகத்துவம் எதுவென இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு அதற்கு அவர்கள் கூறினார்கள் அனைத்தையும் ஒன்றாக்க வேண்டும். ஒன்றென்றே நோக்க வேண்டும். ஒன்றென்றே அறிய வேண்டும். தமக்கோர் உள்ளமையும், அல்லாஹ்வுக்கோர் உள்ளமையும் உன்றென்று கற்பனை கூட செய்ய கூடாது. அப்படி எண்ணுவது வழிகேடாகும். ஆரிஃப் ரப்பை பார்க்கலாம். பார்க்காமலும் இருக்கலாம் என்ற பாகுபாட்டை கடக்கும் போதுதான் அவருக்கு சர்வமும் சித்தியாகும்.
நூல்: காஜா முஹினுத்தீன் சிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு
♣ யா அல்லாஹ்! வஹ்ததுல் வுஜூத் என்ற கடலில் எங்களை மூழ்கடித்துவிடு.
.
இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு
♣ உள்ளமையில் அல்லாஹுதஆலாவையும் அவனுடைய செயலையும் தவிர வேறொன்றுமில்லை.
இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
இஹ்யா உலூமுத்தீன் 3வது பாகம் 15வது பக்கம்
♣ நிச்சயமாக அவனே எல்லாம். உள்ளமையில் அவனுக்கு வேறான எதுவுமில்லை.
இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
இஹ்யா உலூமுத்தீன் 4வது பாகம் 328வது பக்கம்
♣ அவன்தான் நன்றிசொல்பவனும் நன்றி சொல்லப்பட்டவனும். அன்பு வைத்தவனும் அன்பு வைக்கப்பட்டவனும் அவன்தான். அவனுக்கு வேறானது வுஜூதிலே ஒன்றுமில்லை.
இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
இஹ்யா உலூமுத்தீன் 4வது பாகம் 86வது பக்கம்
♣ஸூபிய்யாக்கள், ஆரிபீன்கள் ஒரே முடிவை எடுத்திருக்கிறார்கள். அது உள்ளமையில் அல்லாஹ்வை அன்றி வேறு எதனையும் காணவில்லை.
இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத்துல் அன்வார், பக்கம் 57
♣ மெய்ஞ்ஞானிகளுக்கு அகக்கண் திறந்ததும் வெளிக்கண் பார்வை இழந்து விடுகிறது. எனவே அவர்களுடைய கண்களுக்கு இறைவனை தவிரவுள்ள வேறு யாதொன்றும் தென்படுவதில்லை.
ஹழ்ரத் அபூ சுலைமான் தாரானி ரலியல்லாஹு அன்ஹு
♣முப்பது ஆண்டுகளாக நான் இறைவனோடு உரையாடி கொண்டிருக்கிறேன். ஆனால், மக்கள் நினைக்கிறார்கள், நான் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் என்று.
இமாம் ஜுனைதுல் பக்தாத் ரலியல்லாஹு அன்ஹு
♣ நீங்கள் இறைவனை அறியாவிட்டாலும், இறைவனுடைய அடையாளங்களையாவது அறிந்து கொள்ளுங்கள். நான் தான் மெய்ப்பொருள் (அனல் ஹக்) உண்மையின் மூலமாகிய நானே நிரந்தரமான உண்மையாவேன்.
ஹழ்ரத் மன்ஸுர் ஹல்ஹாஜ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: வலிமார்களின் வரலாறு பாகம் - 2
♣ மக்கள் அபூபக்கர் ஷிப்லி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பைத்தியம், பைத்தியம் என்று அழைத்த பொழுது,
“நான் பைத்தியம் அல்ல. நீங்கள் தான் பைத்தியம். இந்த உண்மை உங்களுக்கு நியாய தீர்ப்பு நாள் அன்று தான் தெரியவரும் என்று கூறினார்கள்.
ஜுனைதுல் பக்தாத் ரலியல்லாஹு அன்ஹு தம் மாணவர்களையும், ஏனையோரையும் நோக்கி கூறினார்கள். நீங்கள் ஒருவர் மற்றொருவரை பார்க்கும் கண்களுடன் அபூபக்கர் ஷிப்லியை பார்க்காதீர்கள். காரணம் அவர் அல்லாஹ்வின் கண்களை கொண்டு பார்க்கிறார்.
♣ அல்லாஹ் “ முந்தினவனும் அவனே பிந்தினவனும் அவனே வெளியானவனும் அவனே உள்ளானவனும் அவனே” என்ற தனது பேச்சு கொண்டு அவனுக்கு வேறானவை அனைத்தையும் அழித்துவிட்டான் என்று இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன போது அவ்வாறாயின் படைப்பு பற்றி என்ன சொல்வீர்கள் படைப்பு உண்டா? இல்லையா? என்று அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு.
படைப்பு உண்டு ஆயினும் அது வீட்டின் கூரையிலுள்ள துவாரத்தின் வழியாக உள்ளே விழும் சூரிய வெளிச்சத்தில் மேலும் கீழுமாக ஏறி இறங்கும் தூசி போன்றது அது உனது கண்ணுக்கு – பார்வைக்கு மட்டும் தான் தெரியுமேயன்றி நீ அதை கைகொண்டு பிடித்தால் பிடிக்க முடியாது. இவ்வாறு தான் படைப்பு என்பது. அது உனது கண்ணுக்கு மட்டும் தான் தெரியுமேயன்றி அதற்கு வுஜூத் – உள்ளமை இல்லை. அது பார்வைக்கு மட்டு உள்ளதே தவிர எதார்த்தத்தில் இல்லாததாகும் என்று பதில் கூறினார்கள்.
இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: அல்யவாகீத் - 01 ம் பாகம் 65ம் பக்கம்
♣ எல்லா பொருள்களிலும் நான் இறைவனையே காண்கிறேன். இறைவனுடைய மகத்துவத்தை நான் வெளிப்படுத்துவேனாயின். மக்கள் என்னை பைத்தியக்காரன் என்று கூறுவார்கள்.
ஹழ்ரத் அபுல் ஹஸன் ஹர்கானி ரலியல்லாஹு அன்ஹு
♣ இறைவன் தனது “ஸிபாத்” தன்மைகளான அறிவைக் கொண்டும் சக்தியைக் கொண்டும்தான் எல்லா இடத்திலும் இருக்கின்றான். தனது வுஜூத் எனும் உள்ளமை கொண்டல்ல என்று வழிகெட்டவர்கள் கூறுவார்கள். இக்கூற்று உண்மைக்கு முரணானதாகும்.
இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: அல் யவாகீத் வல் ஜவாஹீர், பாகம் – 02 பக்கம் – 60 பாடம் – 08
♣ மன்ஸூர் ஹல்ஹாஜ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓராண்டு காலம் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த ஓராண்டு காலமும் அவர்கள் நாளொன்றுக்கு ஆயிரம் ‘ரக்அத்’ கள் வீதம் தொழுது வந்தார்கள்.
அப்போது அவர்களை காண வந்த மக்கள் ‘நீங்கள் தான், தங்களை இறைவன் என்று கூறுகிறீர்களே பின்னர் எவருக்காக இத்தொழுகையை தொழுகின்றீர்கள். என்று வினவியபொழுது,
என்னுடைய மகத்துவத்தை நான் ஒருவனே நன்கு அறிவேன். நேசனும் நானே. நேசிக்கப்படுபவனும் நானே! தொழுபவனும் நானே தொழப்படுபவனும் நானே. "அனல் ஹக்" "அனல் ஹக்" என்று அவர்கள் பதில் கூறினார்கள்.
நூல்: வலிமார்களின் வரலாறு பாகம் - 2
♣ அல்லாஹ்வும் அடியானும் ஒன்று கலந்துவிட்ட நிலைக்குத்தான் (மகாம் ஐனிய்யத்) அன்வயித்தல் என்ற என்று கூறப்படும். சந்திரன் வேறு ஒளி வேறு என்று கற்பிப்பது சரியாகாது.
ஹழ்ரத் காஜா முஹினுத்தீன் சிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு
♣ உலகம் கானல் நீர்போன்றது. அதுயதார்த்தத்தில் அல்லாஹ்தான். இந்த உண்மையை தெரிந்துகொண்டவர் தரீக்காவின் ரகசியத்தை புரிந்துகொண்டவராவார். இந்த உலகம் வெளித் தோற்றத்தில் பல உருவங்களையும் தோற்றங்களையும் உடையதாக இருந்தாலும், யதார்த்தத்தில் சந்தேகமின்றி அது அல்லாஹ்வாகவே இருக்கின்றது. உருவம் என்பது திரை. அத்திரையில் மாட்டினவன் அவ்வுருவத்தில் தோற்றுபவனை புரிந்து கொள்ளமாட்டான்.
ஷெய்குல் அக்பர் இமாம் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு
நூல் : புதூஹாத்துல்மக்கிய்யா, பக்கம் : 201
♣ அன ஹிய (நான் தான் அவன்)
இமாம் இப்னு ஃபாரின் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: வலிமார்களின் வரலாறு பாகம் - 3
♣ என்னுடைய இருக்கை சென்றது. அவனுடைய சிந்தனையே நின்றது. இப்போது நீ பார்க்கின்ற இவன் நானல்ல, ஆனால், அவனே தான்.
அமீர் குஸ்ரூ ரலியல்லாஹு அன்ஹு
♣ “வாஜிபுல்வுஜூத்” என்ற மெய்ப்பொருள் ஒன்றே ஒன்றுதான். அது இரண்டுமில்லை; பலதுமில்லை. ஒன்றை இன்னொன்றுடன் சேர்த்துப் பார்க்கும் போதுதான், இரண்டு, அதிகம் போன்ற எண்ணிக்கை ஏற்படுகின்றது.
மூலப்பொருளான மெய்ப்பொருள் ஒன்றே ஒன்றாக இருந்தாலும்கூட அதன் பாத்திரங்கள் பலதாக உள்ளன. அந்த மெய்ப்பொருள் அதன் உடையைப் பொறுத்து இரண்டாகவும் பலதாகவும் தோற்றுகின்றது. யதார்த்தத்தில் இரண்டுமில்லை பலதுமில்லை. சிருஷ்டிகள் என்பன அந்த மெய்ப்பொருளின் உடைகளேயாகும்.
இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமீ ரழியல்லாஹுஅன்ஹு
நூல் : அல்பதா வல்ஹதீதிய்யா, பக்கம் : 246
♣ மெய்ப்பொருளை அடைந்து கொள்ளுதல் என்பது அல்லாஹ் உமக்களித்த விஷேட அறிவினால் நீ அவன் என்றும், அவன் நீ என்றும் அறிந்து கொள்வதேயாகும். இது “ஹுலூல், இத்திஹாத்” என்ற வழிதவறிய கொள்கையல்ல. அடியான் அடியான் தான். இறைவன் இறைவன் தான். அடியான் இறைவனாக மாறுவதுமில்லை. இறைவன் அடியானாக மாறுவதுமில்லை.
இமாம் அப்துல் கரீம் ஜீலி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: அல் இன்ஸானுல் காமில், பக்கம்: 230
♣உலகிலுள்ள சகல ஷிருஷ்டிகளும் அவற்றின் மூலத்தைக் கவனிப்பது கொண்டு, அல்லாஹ்தானாகவே இருக்கின்றன. எனினும் வெளியமைப்பைக் கவனிப்பது கொண்டு மட்டு நோக்கினால், அல்லாஹ் அல்லாதவையாக இருக்கின்றன. யதார்த்தத்தை கவனித்துப் பார்க்கும் பொழுது எல்லாம் அல்லாஹ்தானாகவே இருக்கின்றது.
உதாரணமாக, ஐஸ்கட்டி, அலை என்பன போன்று இவ்விரண்டும் வெளியமைப்பில் எவ்வாறிருந்தாலும், இவ்விரண்டுக்கும் மூலமாயிருப்பது தண்ணீர்தான். இது போன்றுதான் ஷிருஷ்டிகள் அவை எந்த அமைப்பில் இருந்தாலும், அவற்றுக் கெல்லாம் அல்லாஹ்வின் “வுஜூத்” எனும் உள்ளமைதான் மூலமாக இருக்கின்றது.
இமாம் முஹம்மத் இப்னு பழ்லுள்ளாஹ் ரலியல்லாஹு அன்ஹு
நூல் : அத்துஹ்பதுல் முர்ஸலா, பக்கம் : 68
♣ அவனல்லாதது (எங்கும்) பெற்றுக் கொள்ளப்படாத நிலையில் அவன் எங்கே மறைந்திடுவான்?. எனினும், அவன் கடுமையாக வெளியாகி இருப்பது அவனை மறைத்து விட்டது.
நூல்: மகானி - இமாம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி)
♣ ஏகத்துவம் என்பது இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒன்று- தன்ஸீஹ் எனும் அரூபநிலை. மற்றையது- தஸ்பீஹ் எனும் ரூபநிலை. அரூப நிலையில் இறைவன் கண்பார்வையால் காணப்படமாட்டான். அந்நிலையில் அவன் மனதால் அறியப்பட்டவனாயிருப்பான். எனினும், ரூபநிலையில் கண்களால் பார்க்கப்படுபவனாயிருப்பான்.
ஷெய்ஹுல் அக்பர் இமாம் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு
நூல் : புதூஹாத்துல்மக்கிய்யா, பக்கம் : 283
♣ மெய்ப்பொருள் என்று சொல்ல படிகின்ற இறைவனின் வுஜூத் ஒன்றே ஒன்றுதான். அது இரண்டோ பலதோ இல்லை. ஷிருஷ்டிகள் யாவும் ஒரு மரத்தின் கிளைகள் போன்றவை. அக்கிளைகள் மரத்தை விட்டும் பிரியாதது போல், ஷிருஷ்டிகள் மெய்ப்பொருளான வுஜூதை விட்டும் பிரிந்தவைகள் இல்லை.
இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரலியல்லாஹு அன்ஹு
நூல் : அல்யவாகீத் வல்ஜவாஹீர் பாகம் – 01 பக்கம் - 78
இன்னும் ஏராளமான வலிமார்கள் கூறிய வார்த்தைகள் ஏராளம் உண்டு. அகப் பார்வையுள்ளவர்கள் அனைத்திலும் இறைவனை பார்ப்பார்கள். இந்த உண்மைகளை அறிந்தவர்கள் பாக்கியசாலிகள்.
இந்த உண்மைகளை அறியாமல் ஹக்கை எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள்தான் வழி தவறியவர்கள் என்று அல்லாஹ் அல் குர்ஆனில் கூறுகிறான்.
எவர் இதில் (இவ்வுலகில் நேர் வழியை விட்டும் அகக்) குருடராக இருந்தாரோ, அவர் மறுமையிலும் குருடராக இருப்பார். இன்னும் (அவர்) பாதையால் மிகத் தவறியவராவார். அல் குர்ஆன் (17: 72)
குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்குர்ஆன் (13:16 )
சூபிசம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
1. இஹ்யாவு உலூமூத்தீன்
2. பத்ஹுர் ரப்பானி
3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்
4. கல்வத்தின் இரகசியங்கள்
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.