MAIL OF ISLAM

Knowledge & Wisdom




ஸஹாபாக்கள்


ஸஹாபாக்கள் என்றால் யார்?


அரபி மொழியில் ஸஹாபா என்பது நண்பர்கள், தோழர்கள் என பொருள்படும். இது பன்மை வடிவமாகும். இதன் ஒருமை வடிவம் ஸஹாபி (தோழர்) என்று சொல்லப்படும்.


இஸ்லாத்தில் ஸஹாபாக்கள் என்பது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் தோழர்களை குறிக்கும்.


ஒருவர் ஸஹாபா என அழைக்கப்பட பின்வரும் தகுதிகள் வரையறை செய்யப்படுகிறது:


நபிகள் நாயகம் ﷺ அவர்களின் காலத்தில் வாழ்ந்து அன்னவர்களை நேரடியாக தமது கண்களினால் பார்த்து அன்னவர்களை விசுவாசம் கொண்டு கடைசி வரை முஸ்லிமாகவே வாழ்ந்து மரணித்தவர்களையே ஸஹாபாக்கள் என்று சொல்கிறோம்.



ஸஹாபாக்களின் அந்தஸ்து

இஸ்லாத்தில் ஸஹாபாக்கள் நபிமார்களுக்கு அடுத்தப்படியான மிக உயர்ந்த அந்தஸ்தில் வைத்து நோக்கப்படுகின்றனர். அவர்களிலும் சில ஸஹாபாக்கள் சிலரை விட உயர்ந்த அந்தஸ்தில் கணிக்கப்படுகின்றனர்.


ஸஹாபக்களிலேயே பிரதம அந்தஸ்தில் வைத்து கருதப்படுவர்களாக அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, தல்ஹா, சுபைர், அப்துல் ரஹ்மான் இப்ன் அவ்ப், ஸஃத் பின் அபீ வக்காஸ், ஸைத், அபூ உபைதா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களால் சுவர்க்கவாதிகள் என்று இந்த பூமியில் வைத்தே சுபசோபனம் சொல்லப்பட்ட பத்து ஸஹாபாக்கள் கருதப்படுகின்றனர். அவர்களுக்கு பின் பத்ர் யுத்தத்தில் பங்கேற்ற ஏனைய பத்ர் ஸஹாபாக்கள் சிறப்பானவர்களாகவும் கருதப்படுகின்றனர்.



ஸஹாபாக்களின் இஸ்லாமிய சேவை

ஸஹாபாக்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் இஸ்லாம் முழு உலகிலும் பரவுவதற்கும் செய்த தொண்டு சொல்லி முடிக்க முடியாது.


அது மட்டுமல்ல, இறைவேதமாகிய அல் குர்ஆனையும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் புனித வார்த்தைகளான அல் ஹதீஸையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு வந்து கொடுத்தவர்கள் ஸஹாபாக்களே.


எப்படி எனில், அல் குர்ஆன் நூல் வடிவில் அச்சிடப்பட்டு யாவரும் வாசிக்க கூடிய விதத்தில் தொகுக்கப்பட்டது ஸஹாபாக்களாலேதான். அதே போன்று நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பொன் மொழிகளை பாதுகாத்து அவற்றை அடுத்த சந்ததிக்கு கற்று கொடுத்து இன்று வரை அல் ஹதீஸ்கள் படிக்கவும் பின்பற்றப்படவும் மூல காரணகர்த்தாக்கள் ஸஹாபாக்களாலேதான்.



ஸஹாபாக்களின் சிறப்பு

ஸஹாபாக்களின் சிறப்புகளை சொல்ல நிறைய அல் குர்ஆன் வசனங்களும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஹதீஸுகளும் உள்ளன.


அவற்றில் சில:


* கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:


என் தோழர்களை திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை (இறைவழியில்) செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த ஒரு கைக்குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தருமம் எட்ட முடியாது.


அறிவிப்பவர் - அபூசையீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)

நூற்கள் - ஸஹிஹுல் புகாரி - 3673, ஹிஹுல் முஸ்லிம் - 2541, மிஷ்காத் - 6007



* கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:


எனது தோழர்களை விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனது தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனக்குப்பின் அவர்களை உங்களது பேச்சுக்கு ஆளாக்கிக்கொள்ளாதீர்கள். எவர் அவர்களை நேசிக்கின்றனரோ அவர் என்னை விரும்புவதாலேயே அவர்களை நேசம் கொண்டார். இன்னும் அவர்களை கோபிப்பவர்கள் என்னைக் கோபிப்பதாலேயே அவர்களைக் கோபித்தார். அவர்களுக்கு நோவினை செய்வோர் என்னையே நோவினை செய்கின்றனர். எவன் என்னை நோவினை செய்வானோ, அவன் அல்லாஹ்வை நோவினை செய்தவனாகும். அல்லாஹ்வை நோவினை செய்பவன் சமீபத்தில் வேதனை அளிக்கப்படுவான்.


அறிவிப்பவர் - அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலியல்லாஹு அன்ஹு)

நூற்கள் - திர்மிதி, மிஷ்காத்



ஸஹாபக்களை பின்பற்றலாமா?

ஆம், தாராளாமாக பின்பற்றலாம்.


அல்லாஹ் அல்குர்ஆனில் அவர்களை பின்பற்றுமாறு இப்படி சொல்கிறான்.


*இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், இன்னும் அவர்களைப் பின்பற்றியவர்கள் (ஆகிய) அவர்களைக்கொண்டு அல்லாஹ் பொருந்திக்கொண்டான். அவர்களும் அவனை பொருந்திக்கொண்டார்கள். அவர்களுக்காக சொர்க்கங்களையும், அவன் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் எப்பொழுதும் அவர்கள் நிறந்தரமாக இருப்பார்கள். இது மகத்தான வெற்றியாகும்.


(அல் குர்ஆன் 9:100)



கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:


* எனது தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். எனவே அவர்களில் நீங்கள் யாரை பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள்.


நூற்கள் - மிஷ்காத் 6018



* கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:


"மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய்ப்பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.


நூற்கள் - திர்மிதி 2676, இப்னு மாஜா 42, அபூதாவுத் 4607, முஸ்னத் அஹ்மத் 4 - 126, மிஷ்காத் 165



ஸஹாபக்களை குறை சொல்பவரின் நிலை

இஸ்லாத்தில் ஸஹாபக்களை குறை சொல்வது, அவர்களை ஏசுவது, அவர்களை பின்பற்றுவது கூடாது என்று சொல்வது போன்றன மிக பெரும் பாவங்களாக கருதப்படுகிறது. அது அல்லாஹ்வினதும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களினதும் கோபத்தையும் சாபத்தையும் உண்டாக்கும்.


* கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:


எனது தோழர்களை எவரேனும் ஏசப்பேசக் கண்டால் (அல்லது கேட்டால்) இந்தக்கெடுதிக்காக அல்லாஹ்வின் சாபம் அவர்கள்மீது உண்டாகட்டும் எனச் சொல்லுங்கள்.


அறிவிப்பவர் - இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

நூற்கள் - திர்மிதி, மிஷ்காத்




ஸஹாபாக்கள் வரலாறு


ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் உமர் fபாரூக் ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் உஸ்மான் கனி ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் அலி அல் ஹைதர் ரலியல்லாஹு அன்ஹு




ஸஹாபா பெண்மணிகள் வரலாறு


அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா



உம்மஹாத்துல் முஃமினீன் -

நபிகள் நாயகத்தின் ﷺ மனைவிமார்கள்


அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை ஸவ்தா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா

அன்னை உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹா

அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா