MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
சாடியும் சட்டியும்
ஒரு நாள் ஒரு குயவன் தன்னிடம் இருந்த சால், பானை, சட்டி, தோண்டி, குடம்,சாடி, தொட்டி முதலிய அநேக மட்பாண்டப் பொருட்களை விற்பதற்காக கடைதெருவிற்கு கொண்டுவந்து வைத்திருந்தான். அவைகளில் சாடியானது, மற்ற பாத்திரங்களை பார்க்கிலும் அழகாயும், மினுமினுப்பாயும் இருந்தது.
அதனால் அது ஏனைய பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் தனித் தனியே பார்த்து "நீ ! ஒரு தாழ்ந்த சாதிப் பயல், நீ! மிகவும் கேவலமானவன், ஏழை எளியவர் வீட்டிலேயே வசிப்பாய், அவர்கள் உன்னை கௌரவமாகப் போற்றி வாழாமல் இழிவாகவும், அலட்சியமாகவும் உபயோகிப்பார்கள்." ஆனால் "நானோ! அப்படியல்ல... உயர்ந்த சாதி உடையவன், பிரபுகள் வீட்டிலேயே வசிப்பேன், என்மேல் மல்லிகை-முல்லை-ரோஜா முதலிய பரிமள புஷ்பங்கள், உயர்ந்த பொருட்களையும் வைப்பார்கள். நான் உயர்ந்த ஸ்தானத்தில் பொன்னே போல் போற்றப்படுவேன். ஆகையால் உனக்கு நான் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவன்" என்று இகழ்ந்தது.
அதற்கு பக்கத்தில் இருந்த சட்டியானது மனம் வருந்தி பின்வருமாறு சொல்லிற்று.
"அடே! மூடா? நாம் இருவரும் ஒரே குழியில் இருந்து எடுத்த மண் தான், ஒரே குயவனுடைய கை வேலை தான். ஒருநாள் இல்லாவிட்டால் இன்னொருநாள் நாம் இருவரும், நம் இனத்தார்களும் உடைந்து போவது நிச்சயம். அப்போது நம்மை வெளியில் எறிந்து விடுவார்கள் அப்போ பல பேர் காலில் மிதிபட்டு, மண்ணோடு மண்ணாகி புதைந்து கிடப்போம். குயவனுக்கு இஷ்டம் இருந்து இருக்குமேயானால் என்னை உன்னைப்போலவும், உன்னை என்னைப்போலவும் தயாரித்திருக்கக் கூடும். அப்போது நீ ஒரு சட்டி ஆகவும், நான் ஒரு சாடி ஆகவும் இருந்திருப்பேன். ஆகையால் ஆராய்ந்து பாராமல் பெருமை பேச உனக்கு எப்படி வாய் வந்தது என்று கூறிற்று. சாடியோ பதில்கூற முடியாமல் அடங்கிற்று.
அதுபோல, இறைவன் எல்லோரையும் ஒரே அவயவதோடு படைத்திருக்க... விவேக சூனியர்கள் 'தன்' பெருமை சொல்லியே தன்னைப் புகழ்ந்தவர் என்பது போல உயர்ந்த சாதி என்றும் , தாழ்ந்த சாதி என்றும் பேசிக்கொள்வது எவ்வளவு மூடத்தனம்...
ஒருவனுடைய உயர்வுக்கு அவனுடைய மதமும் , குலமும் துணையிருப்பதில்லை. அறிவிற் சிறந்தவர்கள் யாவராய் இருப்பினும் அவர்கள் உயர்ந்த சாதியே!. அறிவற்றவர்கள் எத்தகைய உயர்குலத்தில் இருப்பினும் தாழ்ந்தவர்களேயாம்.