MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ரூஹ் (உயிர்) என்றால் என்ன?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
♣ ரூஹ் என்றால் என்ன?
அரபியில் “ரூஹ்” என்று குர்ஆனில் பல இடங்களில் இருக்கிறது. அதை இடத்திற்கு ஏற்றவாறு (உயிர் என்றோ அல்லது ஆவி என்றோ அல்லது ஆத்மா) என்று தமிழில் சூபியாக்களால் அறிஞர்களால் மொழி பெயர்க்கப்படுகின்றது.
அந்த அடிப்படையில் உயிர் என்பது உடல் வாழ்வதற்காக உருவாக்கப்பட்டது, உடலின் வளர்ச்சிக்காக இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட நுட்பமான ஒரு சக்தி வாய்ந்த வஸ்துவாக காணப்படுகிறது.
இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ரூஹ் என்பது விளக்கு அதன் ஒளி உயிர் ஆகும்.
மனித வாழ்க்கையில் ரூஹ் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல. உலகில் உள்ள அனைத்து படைப்பினங்களையும் விட மனிதன் உயர்ந்தவனாக இருப்பதன் காரணம் அவனில் ஊதப்பட்டிருக்கின்ற பரிசுத்த ரூஹ்தான். இவ்வுலகில் மனிதன் உடல், ரூஹ், நப்ஸ், கல்பு, அக்ல் என்ற ஜந்து வகையான அம்ஷங்களால் ஆனவன்.. உடலைப் பொறுத்தவரை அதனை எமக்கு இலகுவாக விளங்கிக்கொள்ள முடிந்தாலும் அல்லாஹ்வின் இரகசியமாக பரிசுத்த ரூஹ் என்பதனை விளங்கிக்கொள்ள சற்று சிக்கலானவையாகும்.
மேலும் ரூஹ் என்பது பரிசுத்த ஆவியாகும். நாம் கூட ரூஹும் நப்ஸும் ஒன்று என்றுதான் நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் ரூஹ் என்பதும் நப்ஸ் என்பதும் சிறிதளவு வேறுபடுகிறது. அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆதாரங்களோடு பரிசுத்த ஆவி எனும் ரூஹ் பற்றி சூபியாக்கள் காமிலான ஷெய்குமார்கள் எமக்கு அளித்துள்ள சிறு விளக்கத்தோடு சற்று சிந்தித்துப் பார்த்தாலே போதும் ரூஹும் நப்ஸும் சிறிதளவில் வேறுபட்ட இரண்டு அம்ஷங்கள் என்பதை அறிய முடியும். அந்த அடிப்படையில் “ரூஹ் (உயிர்) என்றால் என்ன?” என்ற கேள்வி இன்று மட்டுமல்ல நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது காலத்திலும் இருந்துள்ளது.
♦ ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ”ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்” என்றார். அவர்களின் இன்னொருவர் ”அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள், உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை” என்றார். அவர்களில் மற்றொருவரோ, ”(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்” என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, ”அபுல் காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார்.
உடனே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மௌனமானார்கள். ”அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது” என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலம்) அவர்கள் தெளிவடைந்தபோது ”(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப்படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!” (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்”
நூல்: புகாரி 125
மேலும் அல்லாஹுத் தஆலா நபி ஆதம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களைப் படைத்து சொன்னான்: 'பனபக்து பீஹி மின்ரூஹி' ஆதமுடைய உடலில் என்னுடைய பரிசுத்த ரூஹை ஊதி விட்டேன் என்று கூறப்பட்ட ஆயத்தில் இருந்து ஊதப்பட்ட ரூஹு ஒன்றும், ஊதப்படாத ரூஹு ஒன்றும் இருக்கிறது என்று தெரிய வருகிறது. ஊதப்படாத ரூஹாகிறது நுட்பமான ஆவி என்னும் ரூஹுல் ஹைவானியாயிருக்கும். இந்த ரூஹாகிறது எல்லா உயிர் பிராணிகளுக்கும் பொதுவாயுள்ளது. ஊதப்பட்ட ரூஹாகிறது நுட்பமான பரிசுத்த ஆவியென்னும் ரூஹுல் இன்ஸானியாயிருக்கும். இந்த ரூஹு இன்ஸானுக்கே சொந்தமாகும்.
♣ ரூஹ் எனும் உயிரின் வகைகள்
1) ரூஹுல் ஜிமாத் - ஜடப்பொருள்
ஜடப் பொருட்களின் உயிர் ரூஹில்ஜிமாத்து என்று அழைக்கப்படுகிறது. ஜடப் பொருட்களுக்கு உயிர் உண்டு. ஆனால் வளர்ச்சி கிடையாது. இடப்பெயர்ச்சித் தன்மையும் இல்லை. இங்கே பூமியின் ஈர்ப்பு விசை உயிர்த்தன்மை சார்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
2) ரூஹுல் நபாத்து - தாவர உயிர்
தாவர இனங்களின் உயிர் ரூஹில் நபாத்து என்பதாகும். விதையிலிருந்து, முளைகள், கிளைகள், செடிகள், கொடிகள், மரங்களாக வளர்கிறது. உயிர்த்தன்மை இருப்பதாலேயே செடி கொடிகள் வளர்கிறது. ஆனால் இவ்வுயிருக்கு ஓரிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து இன்னொரு இடத்தில் நிலைகொள்ளும் நகரும் தன்மை கிடையாது. மாறாக இவற்றின் வேர்கள் மட்டுமே பூமிக்குள்ளே நகர்ந்து செல்கிறது.
3) ரூஹுல் ஹைவான் - பிராணி உயிர்
ரூஹில் ஹைவானி என்பது விலங்-கினங்களின் உயிர்குறித்த சொல்லாக்கமாகும். இதற்கென சில தனித்த பண்புத்தன்மைகள் உண்டு. இவ்வுயிர்களுக்கு வளர்ச்சி உண்டு. ஓரிடம் விட்டு வேறொரிடம் நகர்வதற்கான ஆற்றல் உண்டு. ஆனால் உழைப்பின் மூலமாக பொருளுற்பத்தி செய்யும் படைப்புத்திறன் கிடையாது.
4) ரூஹுல் இன்சான் - மனித உயிர்
மனித உயிரை குறிப்பதற்கு ரூஹில் இன்சானி சொல்லாக்கம் பயன்படுத்தப்படுகிறது. இடம்பெயர்தல், வளர்ச்சி, சிந்தனை, உழைப்பு, உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கிய கருத்தாக்கமாக இது விளங்குகிறது.
♣ ரூஹ்ஹின் ஆரம்ப நிலையும் இறுதி நிலையும்
அல்லாஹ் ஆதம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை மண்ணால் படைத்துவிட்டு தனது ரூஹில் இருந்து முதலில் அவரது உடலுக்கு ஊதுகின்றான். பின்னர் அல்லாஹ் ஆதம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை கண்ணியப்படுத்தி அவருக்கு ஸஜுத் செய்யுமாறு மலக்குகளைப் பணிக்கின்றான். இது பற்றி திருமறை இவ்வாறு பகர்கின்றது.
♦ (நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய, அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ரூஹிலிருந்து ஊதியதும் "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள். (அல்குர்ஆன் 15:30, 38:71, 32:09)
♦ “உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "ஆம். நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக.” (அல்குர்ஆன் 7:172)
அந்த அடிப்படையில் அல்லாஹ் தனது ரூஹிலிருந்து ஊதி ஆதம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை எழுப்பியதும் அடுத்த எமது ஆத்மாக்களின் பிறப்பு நிகழ்கின்றது. இதுவரை இவ்வுலகில் வாழ்ந்த அனைவரினதும், வாழ்ந்து கொண்டிருப்போர்களும் இனி இவ்வுலகம் அழியும்வரை எத்தனை எத்தனை கோடிக் கணக்கான மனிதர்கள் வாழப்போகிறார்களோ அவர்கள் அத்தனை பேரினதும் ரூஹ்களை அல்லாஹ் ஆதம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிலிருந்து வெளிப்படுத்தி ஆலமுல் அர்வாஹ் (ரூஹ்களின் உலகம்) எனும் இடத்தில் வாழச்செய்கிறான். இதுவே எமது ரூஹ்களின் முதல் பிறப்பும், முதல் வீடுமாகும். இங்குதான் நாம் அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக்கொள்வதென சான்று பகர்ந்துள்ளோம்.
♦ “உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?"என்று கேட்டதற்கு அவர்கள் "ஆம். நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக.” (அல்குர்ஆன் 7:172)
♦ ஆலமுல் அர்வாஹில் ரூஹ்கள் இருந்த விதம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள். “ரூஹ்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. அங்கு சேர்ந்திருந்தவை இங்கும் சேர்ந்திருக்கும். அங்கு பிரிந்திருந்தவை இங்கும் விலகி இருக்கும்” என்றார்கள்.
நூல்: முஸ்லிம்
மேலும் ஆலமுல் அர்வாஹில் இருந்த எமது ரூஹை அல்லாஹ் தாயின் கருவறைக்கு நகர்த்துகின்றான். ஒரு தாயின் வயிற்றில் கரு வளர்ச்சியடைந்து 42 நாட்களாகும் போது வானவர் ஒருவர் ஒரு ரூஹை எடுத்து வந்து அத்தாயின் வயிற்றில் உள்ள கருவில் ஊதிவிடுகின்றார்.
♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “முளையத்தில் 42 இரவுகள் கடந்ததன் பின்னர் அதனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் அதனை வடிவமைக்கின்றார். மேலும் காதுகள், கண்கள், தோல், தசைகள்,என்புகள் ஆகியவற்றையும் உருவமைக்கின்றார். பின்பு என் இரட்சகனே! இது ஆணா அல்லது பெண்ணா? என்று வினவுகின்றார். பின் உங்கள் இரட்சகன், தான் விரும்பியதைத் தீர்மானிக்கின்றான். வானவர் அதனைப் பதிவு செய்கின்றார்.”
நூல்: முஸ்லிம்
அந்த அடிப்படையில் தாயின் கருவறையில் இருந்த நாம் இவ்வுலகை வந்தடைகின்றோம். மனிதன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றோம். அதன் பிறகு சில நிமிடங்கள் அல்லது சில நாட்கள், சில மாதங்கள், சில வருடங்கள் வாழும் எமது ரூஹை மலகுல் மௌத் எனும் வானவர் கைப்பற்றி ஆலமும் பர்ஸக் எனும் இடத்திற்கு கொண்டவந்து சேர்க்கின்றார். இப்பிரபஞ்சம் அழிந்து மஹ்ஷர் வெளியை உருவாக்கும் வரை எமது ரூஹ்கள் இங்குதான் வாழப்போகின்றன. இதுவரை மரணித்த அனைவரினது ரூஹ்களும் இங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
இப்பிரபஞ்சம் அழிந்து மஹ்ஷர் வெளி உருவான பின்னர் எமது ரூஹ்கள் மீண்டும் அங்கு வரவழைக்கப்படுகின்றன. அதுவும் அங்கு அந்த ரூஹ்களுக்கு புதிய இவ்வுலகில் இருந்ததை ஒத்த அதே உடல் போர்த்தப்படுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்: “ஆன்மாக்கள் (அவற்றின் உடல்களோடு) ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும் போது.” (அல்குர்ஆன் 81:07) தற்போது எமது கைவிரல் ரேகைகள் எவ்வாறு இருக்கின்றனவோ அதே வடிவில் எந்த மாற்றமுமின்றிய உடல்களுடன் எமது ரூஹ்களையும் சேர்த்துவிடுவான். (அல்குர்ஆன் 75:4)
மேலும் மஹ்ஷரிலே ஒவ்வொரு ரூஹிற்குமான விசாரணைகள் தனித்தனியே நடைபெற்று அவை சம்பாதித்துக் கொண்டவற்றுக்கு ஏற்ப சுவனத்திற்கோ அல்லது நரகிற்கோ அவை அனுப்பப்படுகின்றன. இதுதான் இறுதிக்கட்டம். இனி இங்குதான் ரூஹ்கள் நீடூளி காலம் வாழப்போகின்றன. இனி இறப்போ, பிறப்போ இல்லை. சுனத்தில் நுழைந்த ரூஹ்கள் இன்பத்தை அனுபவிக்கும். நரகில் நுழைந்த ரூஹ்கள் கடுமையான வேதனையை அனுபித்துக்கொண்டே இருக்கும்.
♣ ரூஹ்ஹூக்கு அழிவு உண்டா?
மரணம் (மவ்த்) என்பது உடலை விட்டும் பரிசுத்த ஆவி எனும் ரூஹ் வெளியேறுவதுதான் மரணமாகும். அப்படியானால் அழிவு உடலுக்கும் நப்ஸூக்குமே தவிர பரிசுத்த ரூஹுக்கு அல்ல ரூஹைப் பற்றிய அறிவையும் ஆராய்ச்சியையும் நம் நலன் கருதி இஸ்லாம் மறைத்து வைத்திருக்கிறது.
♦ (நபியே!) "உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை" எனக் கூறுவீராக. (அல் குர்ஆன் 17:85)
மனித உடலில் இன்ப துன்பங்களை நப்ஸ் எனும் ஆத்மாவின் தூண்டுதலால் அனுபவிப்பது அந்த ரூஹ் தான். உடலில் ரூஹ் இருக்கும் வரை தான் அது பிரிந்து விட்டால் மைய்யித்து தான். ரூஹை பிரிந்த உடல் வெற்றுடலாகிப போகிறது.உடலுக்கும் நப்ஸ் எனும் ஆத்மாவுக்கும் தான் அழிவு உண்டு, ஆனால் ரூஹுக்கு அழிவில்லை.
♦ கப்ரில் உடல் அழியலாம், நரகில் உடல் அழியலாம். ரூஹ் அழியாது. இது பற்றி அல்குர்ஆன் "அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென,அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம்.என்று கூறுகிறது" .(அல் குர்ஆன் 4:57)
தோள்களும் சதைகளும் மாற்றப்படலாம், ரூஹ் மாற்றப்படாது. ஏனென்றால் ரூஹுக்கு அழிவு கிடையாது. அந்த அடிப்படையில் இமாம் சுயூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் "அல்லாஹ்வின் நாட்டம் அன்றி எட்டு பொருட்களுக்கு அழிவு கிடையாது 'அர்ஷ், குர்ஸ், நரகம், சொர்க்கம், முதுகுஎழும்பு, ரூஹ்ஹூகள், விதி ஏடு, கலம்' என்று கூறியுள்ளார்கள்"
நூல்: ஷரஹூஸ் ஸூன்னாஹ்
♦ அல்குர்ஆன் தலைமை விரிவுரையாளர் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு தோழர் ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் குர்ஆனின் 39:42 ஆவது வசனத்திற்கு கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்கள். ‘ஒவ்வொரு மனிதனுக்கும் நஃப்ஸ் (ஆத்மா)-வும், ரூஹ் (உயிர்)-ம் உள்ளன. நஃப்ஸில் உணரும் தன்மையும் அறிவும் உள்ளன. ரூஹில் அசையும் தன்மையும் மூச்சு வாங்கும் தன்மையும் உள்ளன. மனிதன் தூங்கும் போது அல்லாஹ் நஃப்ஸை மட்டுமே கைப்பற்றுகிறான். ரூஹை கைப்பற்றுவதில்லை. (நூல் : குர்துபி)
♦ ஒவ்வோர் (நப்ஸும்) ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும், அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும், எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார், இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் : 3:185)
♦ அபூ தல்ஹா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பத்ர் போரன்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 24 குறைஷித் தலைவர்களின் சடலங்களை நாற்றம் படித்த கிணற்றில் வீசி எறியும்படி கட்டளையிட்டார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போரில் வெற்றி பெற்றால் அந்த இடத்தில் மூன்று நாட்கள் தங்குவது வழக்கம். அவ்வாறே பத்ர் போர் முடிந்த பின் அங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள்.
மூன்றாவது நாள் தனது வாகனத்தைத் தயார்செய்துகொண்டு தனது தோழர்களுடன் எதிரிகளின் சடலங்கள் போடப்பட்ட கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அவர்களை அவர்களுடைய தகப்பனாரின் பெரைக் கூறி அழைத்து “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! முன்பே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டிருந்தால் இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாமே!
நிச்சயமாக எமது இறைவன் எமக்கு வாக்களித்ததை நாம் உண்மையாகக் கண்டுகொண்டோம். உங்களது இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் கண்டுகொண்டீரா?” என்று கேட்டார்கள். அப்போது உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே (ரூஹ்ஹூகள்) அற்ற சடலங்களிடம் நீங்கள் என்ன பேசுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். “முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நான் கூறுவதை அவர்களைவிட நீங்கள் அதிகம் கேட்கும் திறன் உள்ளவர்களாக இல்லை” மற்றுமொரு அறிவிப்பில் “அவர்களைவிட நீங்கள் கேட்கும் ஆற்றல் அதிகமுடையவர்களாக இல்லை. ஆனால் அவர்களால் பதில் அளிக்க முடியாது” என்றார்கள்.
நூல்கள்: புகாரி 1370, 3976, முஸ்லிம், மிஷ்காதுல் மஸாபீஹ் 2/345
ஆகவே எமது பரிசுத்த ஆவி எனும் ரூஹிற்கு ஆரம்பம் ஒன்று உண்டு. ஆனால் முடிவோ அழிவோ இறப்போ கிடையாது. ஆனால் உடல், நப்ஸ் என்பது அழியக்கூடியது. அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்ப்பது அவனுக்காக அவனுடைய தீனை வாழச்செய்வதற்காக எமது நப்ஸுடன் ஜிஹாத் எனும் மாபெரும் யுத்தம் செய்து பல தியாகங்களை செய்ய வேண்டும். தியாகங்கள் செய்தால் அதற்குப் பகரமாக அல்லாஹ் எமது பரிசுத்த ஆவி எனும் ரூஹிற்கு சுவனத்தைத் தருவதாக வாக்களித்து விட்டான்.
♦(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான், அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள், (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் : 9:111)
எனவே ஆலமுல் அர்வாஹ் எனும் இடத்தில் எமது பரிசுத்த ஆவி எனும் ரூஹ்கள் முதல் வாழ்க்கையை ஆரம்பித்து, அங்கிருந்து மிக நீண்ட காலங்கள் கடந்து, நீண்டதொரு பாதையில் சுவனம் எனும் எமது தாயகத்தை நோக்கிச் செல்வதற்காக உனக்கு பொருத்தமான முறையில் இவ்வுலகில் வாழ்ந்து கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவிலும் நினைவிலும் கண்டுகளித்து, சக்ராதுல் மவ்த் நேரத்தில் திருக்கலிமாவை கூறி மலகுல் மவ்த் எனும் வானவர் எமது ரூஹை வேதனையில்லாமல் கைப்பற்றி எம்மை மரணிக்கச் செய்வானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
உள்ளத்தை தூய்மைப்படுத்துவது எப்படி?
தஸ்கியதுன் நப்ஸ் எனும் (உள்ளத்தை) பரிசுத்தப்படுத்துவது, தூய்மைப்படுத்துவது எப்படி? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
நமது ஆத்மாவின் தன்மைகளை ஏழாகப் பிரித்துள்ளார்கள். ஆத்மாவை ஏழாகப் பிரித்தாலும் உண்மையில் ஆத்மா ஒன்றுதான். அதைபற்றி அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.
மனித உடலுக்கு பெயர் மெய் என்று சொல்வார்கள்! பொய்யான உடலுக்கு மெய் என்று பெயர் எப்படி வந்தது? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.