MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் வரலாறு


பிறப்பு

இவர்கள் நூஹ் நபியடைய காலத்திற்கு 1263 ஆண்டுக்கு பின் நூஹ் நபியின் குமாரர் ஸாமின் 5ம் தலைமுறையில் ஹவ்ரான் எனும் ஊரில் பிறந்தார்கள். அவர்கள் தகப்பன் பெயர் தாறஃ. தாயார் பெயர் லயூதா.



குணாதிசயங்கள்

விருந்தாளியின்றி உண்ணாதவரும், முதன் முதலில் 80வது வயதில் கத்னா செய்யப்பட்டவரும், லுங்கி உடுத்தியவரும், ஹஜ் உடைய கிரிகைகளை நிறைவேற்றியவரும், குர்பானி கொடுத்தவரும், மரணித்தவர்களை ஹயாத்தாக்கும் வல்லமை பெற்றவரும், மறுமைநாளில் வெள்ளாடை அணிந்து வருபவரும், மீசையை வெட்டி நகத்தை அறுத்தவரும், மிஸ்வாக் செய்வதிலும் தலைவாரி வாய்கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்துவதிலும் முந்தியவர்கள் இவர்கள் தான்.



ஏகத்துவ பிரச்சாரம்

இவர்கள் வாழ்ந்த காலத்தில் நம்ரூத் என்ற பெயருடன் மிகவும் சக்தி மிகுந்த கொடுங்கோலன் வாழ்ந்து வந்தான். இபுராஹீம் நபி மூலம் தனக்கும் தன் ஆட்சிக்கும் கேடுவரும் என்பதை அறிந்த நம்ரூத் பலசூழச்சிகளை செய்து அவர்களை அழிக்க முயற்சித்தான். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை.


பலமுறை இபுராஹீம் நபியவர்கள் “சிலை வணக்கத்தை விட்டுவிடுங்கள். இறைவன் என்பவன் ஒருவனே” என்று வலியுறுத்தியும் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் வாழ்ந்த அவ்வூர் மக்கள் ஒரு நாள் திருவிழாவிற்கு சென்றார்கள். அத்தருவாயில் நம் நபியவர்கள் அனைத்து சிறுசிலைகளை உடைத்துவிட்டு பெரிய சிலையை மட்டும் விட்டுவைத்தார்கள். இதனால் கடும் சினம் கொண்ட நம்ரூத் நெருப்புக்குண்டத்தில் இப்ராஹீம் நபியவர்களை போட்டான். ஆனாலும் “நெருப்பே! இப்ராஹீமுக்குச் சுகந்தரக்கூடிய விதத்தில் நீ குளிர்ந்து விடு என்று நாம் கூறினோம்” என்ற திருமறையின் வசனப்படி அல்லாஹ் அந்த நெருப்புக் குண்டத்தை பூஞ்சோலையாக மாற்றினான்.



திருமணம்

ஹஜ்ரத் ஸாரா அம்மையாரை மணந்து தங்களது 120 வயதில் இஸ்ஹாக் நபியவர்களையும் ஹஜ்ரத் ஹாஜா அம்மையாரை மணந்து தங்களது 99 ஆம் வயதில் ஹஜ்ரத் இஜ்மாயீல் நபியவர்கள் பிறந்தார்கள்.



தியாகம்

ஏகத்துவ ஏந்தல் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி மருந்துக்கு கூட மனிதர்கள் இல்லாத பாலைநிலத்தில் அன்பு மனைவியையும் அருமைப் பாலகனையும் விட்டு விடுமாறு இறை கட்டளை வருகின்றது. தளர்ந்து விடவில்லை தனிப்பெருந்தலைவர் அவர்கள்.


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அன்பு மனைவியையும் குழந்தையையும் அங்கேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்தொடர்ந்து வந்து, “இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்” என்று கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரை திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டானா? என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான் என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக் குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்த போது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி திருப்பி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள்.


‘எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்தி விட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள்” என்று இறைஞ்சினார்கள். (அல்குர்ஆன் 14-37)



கலீலுல்லாஹ் என்ற பட்டம்

இறைத்தூதர் அவர்கள் இறையின் கட்டளைக்கு அடிபணிந்து தங்களது பிரிய மகன் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை பலியிட துணிந்ததை பாராட்டி “கலீலுல்லாஹ்” (இறை நேசர்) என்று புகழாரம் சூட்டினான் வல்லோன்.



குர்ஆனில் அவர்களின் சிறப்பு

"(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை." (அல்குர்ஆன் 16:123)


"தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்." (அல்குர்ஆன் 04:125)


"இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். ”உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்" என்று அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்" (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது" என்று அவன் கூறினான்" (அல்குர்ஆன் 02:124)



மறைவு

வயோதிக பருவத்தை அடைந்த இப்ராஹீம் நபியவர்கள் தங்களின் 195 ம் வயதில் ஸிரியாவில் காலமாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப் பட்டார்கள். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்”.