MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் வரலாறு


படைப்பு

இறைவன் தன்னுடைய பிரதிநிதியாக இந்த மண்ணில் வாழப்போகும் மனிதனாக முதன் முதலில் படைத்தது நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைத்தான். இவர்கள் மண்ணால் படைக்கப்பட்டவர்கள்.



குணாதிசயங்கள்

முதல் மாமனிதர் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அழகின் திருவுருவாக விளங்கினார்கள். அவர்களின் உயரம் 60 அடியாக இருந்தது. அவர்களின் திருமேனி பளபளவென மின்னியது. தலைமுடி சுருளாக இருந்தது.



துணைவி

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் விலா எலும்பிலிருந்து ஒரு கோணலான எலும்பைக்கொண்டு அவர்களுக்கு துணையாக ஹவ்வா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை இறைவன் படைத்தான். அவர்கள் மிகவும் அழகாகவும், வசீகரமாகவும் இருந்தார்கள்.



திருமணம்

இறைவனே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தான். ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இத்திருமணத்திற்காக ஹவ்வா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு மஹராக மூன்று முறை ஸலவாத்துக் கூறினார்கள். பின் மலக்குமார்கள் சாட்சியாக இறைவன் குத்பா ஓதி திருமணத்தை நடத்தி வைத்தான். இருவரும் சந்தோஷமாக சுவனத்தில் வாழ்ந்தார்கள்.



பூமியில் இறக்கப்படல்

இறைவன் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) ஹவ்வா (அலைஹிஸ்ஸலாம்) இருவரையும் ஒரு மரத்தை நெருங்க வேண்டாம் என்றும், ஒரு கனியை சாப்பிட கூடாது என்றும் தடுத்தான். ஆனாலும் ஷைத்தான் சதி செய்து இவர்கள் இருவரையும் அந்த கனியை புசிக்க வைத்தான். விலக்கப்பட்ட கனியை அவர்கள் உண்டதும் அவர்கள் இருவரும் அணிந்திருந்த சுவனத்து ஆடை அவர்களுடைய உடலை விட்டு அகன்றது. அவர்கள் இருவருக்கும் வெட்கம் ஆட்கொண்டது. இருவரும் ஒவ்வொரு மரமாக சென்று தம்முடைய உடலை மறைக்க இலை தருமாறு வேண்டினார்கள். ஆனால் ஒரு மரமும் இலை தர மறுத்துவிட்டன. அப்பொழுது இறைவன் இருவரையும் பூமியில் இறக்கினான்.



பிரிவு

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ‘சரந்தீப்’ எனும் தீவிலுள்ள ‘நு’ என்னும் மலையிலும் ஹவ்வா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ‘ஜித்தா’ எனும் இடத்திலும் எறியப்பட்டர்கள். இருவரும் 500 வருடங்கள் தம் பிழையை நினைத்து இறைவனிடம் அழுந்து இறைஞினார்கள்.



மனைவியுடன் சேருதல்

பின்னர் இறைவன் இவர்கள் இருவரின் பிழையையும் பொறுத்து இவர்களை ஒன்று சேர்த்து வைத்தான். வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை ஜித்தா எனும் இடத்திற்கு கூட்டி சென்று அங்கு இருந்த ஹவ்வா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடன் சேர்த்து வைத்தார்கள். பின்னர் இருவரும் சரந்தீப் எனும் இடத்திற்கே வந்து வாழ்ந்தார்கள்.



குடும்பம்

ஹவ்வா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கருவுற்று ஒரே சூழலில் ஒரு ஆணும், பெண்ணும் என குழந்தைகளை பெற்றெடுத்தார்கள். இவர்களுக்கு ஏராளமான குழந்தைகள் பிறந்தது. அதில் முதற் சூலிலே பிறந்த ஆண் காஃபில், பெண் அக்லிமியா என்றும். இரண்டாவது சூலிலே பிறந்த ஆண் ஹாஃபில், பெண் லபூதா என்றும் கூறப்படுகிறது.



மறைவு

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சூர்ய கணக்குப்படி 930 ஆண்டுகளும், சந்திர கணக்குப்படி 960 ஆண்டுகளும் வாழ்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இந்த உலகை விட்டு பிரியும் நேரம் வந்தவுடன் தன் பிள்ளைகளை அழைத்து இறுதி உரை வழங்கினார்கள். பின்னர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) வந்து இஸ்ராயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நோக்கி, “இஸ்ராயீலே! ஆதமுடைய ஆவியை அவரின் உடலிலிருந்து மென்மையாக பிரிப்பீராக. இவர் இறைவனின் திருக்கரத்தால் படைக்கப்பட்டவர். இறைவனின் ஆவி ஊதப்பெற்றவர். அடுத்த கணம் அவர்களின் உயிர் மென்மையாக உருவப்பட்டது. அவர்களின் உடல் சுவன நறுமண இலந்தை இலை கலந்த சுவனத்து நீரினால் குளிப்பாட்டி சுவனத்து ஆடையினால் போர்த்தப்பட்டு பின்னர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களால் அபுல் குபைஸ் எனும் மலை அடிவாரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதற்கு பிறகு ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஆன்மா எண்ணற்ற மலக்குமார்களால் வரவேற்கப்பட்டு இறைவனால் நன்மாராயம் நல்கப்பட்டு சுவனப் பூஞ்சோலையில் கொண்டு செல்லப்பட்டது. இது நிகழ்ந்தது ஒரு வெள்ளிக்கிழமையாகும்.