MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
இரு கண்களை மூடிக் கொள்
மறு கண்ணால் நீ பார்த்திட !
கரங்களை விரித்திடு
கைகளைக் குலுக்க வரும் போது !
இந்த வட்டத்தில் நீ வந்து உட்கார் !
ஓநாய் போல் நடிப்பதைத் தவிர்த்திடு !
ஆட்டிடையன் பரிவு உள்ளத்தில் நிரம்புவதை உணர்ந்திடு !
இரவு வேளையில் உன்னருங் காதலி
திரிகிறாள் உன்னைத் தேடி !
ஆறுதல் அளிக்க வருவோரை
ஏற்றுக் கொள்ளாதே !
வாயை மூடிக் கொள்
வாயிற்குள் உண்டியைத் திணித்த பிறகு !
உன் காதலி வாயை
உன் வாயால் சுவைத்திடு !
"என்னை விட்டுப் போனாள் அவள்"
"என்னை விட்டுப் போனான் அவன்,"
என்று முணுமுணுத்து நொந்தால்
இருபது பேர் உன்னை நெருங்குவார் !
கவலை படுவதைக் காலி செய் !
மனக்கவலை உனக்குத் தருபவன்
யாரென நினைத்திடு !
சிறைக் குள்ளே நீ ஏன்
தங்கியுள்ளாய்
அறைக் கதவு முழுவதும்
திறந்துள்ள போது ?
முக்கோணப் பயத்தில்
முடங்காது நீ வெளிச் செல் !
சிந்தித்து மௌனமாய் வாழ்ந்திடு !
வாழ்வு வட்டத்தை விரிவாக்கித்
தாழ்ந்து பணிவாய் எப்போதும் !
விரைந்து செல் தணிவாய் !
எந்தன் தலையில் கொந்தளிக்கும்
விந்தை பறவைகள் பயணம் பற்றி !
ஒவ்வோர் அணுவும் தனக்குள் சுழலும் !
எனது மனத்தின் காதல் அவைதான் !
காவல் துறை அதிகாரியைக்
கண்டு அஞ்சுவார் குடிகாரர் !
ஆனால் காவல் துறை
அதிகாரியும் குடிக்கின்றார் !
இங்குள்ள மக்கள்
நேசிப்பர் மது மண்டும்
இருவரையும் மாறு பட்ட
சதுரங்கக் காய்கள் போல் !
என்னைத் தவிர நீ வேறு
எல்லோருடனும் இருப்பாயானால்
எவரோடும் நீ இருக்க வில்லை !
என்னைத் தவிர நீ வேறு
எல்லோரிடம் இல்லா விட்டால்
ஒவ்வொருவர் உடனும் நீ இருக்கிறாய் !
ஒவ்வொரு வருக்கும்
உரிமையாய் இருப்பதற்குப் பதிலாக
எல்லாரும் போல் இருப்பாய் !
பலரைப் போல் நீ இருந்தால்
நீ எவனு மில்லை ! பூஜியம் !
உயிராய்ப் பூமியில் தோன்றிய தருணமே..
ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது! ஏறிவருவாய் என!
மண்ணிலிருந்து தாவரமானாய்!
தாவர நிலையே மிருகமும் ஆனது.
அதன்பின் மனிதனுமானாய்.
அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும் கூடவே வந்தது உனக்காக.
மண்ணில் பிறந்த உடலைப்பார்!
எப்படி முழுமையாய் ஆனதென்று!
மரணம் குறித்தேன் பயம் கொள்ள வேண்டும்?
மரணம் உன்னைக் குறுக்கியதா?
உடல்நிலை கடந்தே போகும்போது தேவதை ஆவாய் ஐயமில்லை!
தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை
அங்கேயே தேங்கிவிடாதே
தேவர்களுக்கும் மூப்புண்டு
தேவநிலையைக் கடந்து
மறுபடியும் விழிப்பின் பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய்
சிறுதுளியாய் நீ!
விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!
சிறுதுளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!
பெருங்கடல் கூட, சிறுதுளியாய் ஆனதைப்பார்!
மனமானது பாராட்டுகளைப் பெற்று ஃபிர்அவ்ன் ஆகிவிட்டது.
அதாவது ஆணவம் கொண்டுவிட்டது.
நீ எளிமையை ஏற்று தாழ்ந்தவனாகிவிடு.
தலைமையை வேண்டாதே.
முடிந்தவரை நீ அடியானாக இருக்க முயற்சி செய்.
அரசனாக முயலாதே.
உன்னிடம் கருணை புரியும் தன்னையும் அழகிய முறையில் பழகுவதாலும் இல்லாமல் போனால் உனது நண்பர்களின் மனம் சோர்ந்து போகும்.
உன்னைவிட்டு அவர்கள் பிரிந்து விடுவார்கள்.
துறவிகளின் விவகாரம் உன் அறிவுக்கு அப்பாற்பட்டது.
ஏளனமான பார்வையோடு அவர்களைப் பார்ப்பதை நீ விட்டுவிடு.
துறவுகோலம் என்பது உலகியல் விவகாரத்தை விட தனிப்பட்டதாகும்.
அவர்கள் ஒவ்வொரு வினாடியும் இறைவனிடமிருந்து வெகுமதி பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
துறவிகள் எனப்படுவோர் பொருளும் பதவியும் மட்டுமின்றி இறைவனிடமிருந்து ஒரு மிகைத்த உணவைப் பெறுபவர்களாய் இருக்கின்றனர்.
அலியைப் போல நீ வெறுமையாகி விடுவாயானால் இந்தப் பாதையிலே தனித்த ஈடு இணையற்ற ஒரு மனிதனாக மாறிவிடுவாய்.
அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளை தவிர்த்து விட முயற்சிசெய்.
இந்தப் பாழடைந்துபோகும் உலகத்தை விட்டு மனதை விளக்கிக் கொள்.
காதல்
நான் காதல் என்னும்
மார்க்கத்தை நாடுபவன்.
காதல்தான் என்னுடைய மார்க்கமாகும்
காதல்தான் என்னுடைய நம்பிக்கையாகும்
என் தாய் என் காதல்
என் தந்தை என் காதல்
என் நபி என் காதல்
என் இறைவன் என் காதல்
நான் காதலின் குழந்தை ஆவேன்
நான் வந்ததே காதலை பற்றி பேசவே
அன்பு
அன்பினால்: இருள் வெளிச்சம் ஆகும்
அன்பினால்: கசப்பு இனிமை ஆகும்
அன்பினால்: வேதனை சுகமாகும்
அன்பினால்: மரித்தது உயிர் பெரும்
அன்பு பெருங்கடலையும் குவளைக்குள் அடக்கும்
அன்பு பெரும் மலையையும் மணல் ஆக்கும்
அன்பு ஆகாயத்திலும் நூறு துளைகளை இடும்
அன்பு நிலத்தையும் ஆட்டி படைக்கும்
தமிழ் - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள் - மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி கவிதைகள்