MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
தமிழ் பகுதி - இமாம்கள் வரலாறு - மாலிக் ரலியல்லாஹு அன்ஹு
இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு
இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அடுத்த சந்ததியாகிய தாபிஈன்களில் ஒருவரும் பிரசித்தி பெற்ற “ராவி” யுமான அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மகன் ஆவார்கள்.
அபூ அப்துல்லாஹ் எனும் புனைப் பெயர் பூண்டவர்கள். ‘இமாமுல் மதீனா’ (மதீனாவின் தலைவர்) எனும் சிறப்புப் பெயர் ஒன்றும் இவர்களுக்குண்டு. இவர்களின் மூதாதையர் யேமன் தேசத்தைச் சேர்ந்தவர்கள். மூன்றாம் கலீபாவாகிய உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) காலத்தில் மதீனாவில் அவர்கள் குடியேறினார்கள். ஹிஜாஸ், மேற்கு ஆபிரிக்கா, எகிப்து ஆகிய தேசங்களிலுள்ள முஸ்லிம்களில் அதிகப்பற்றானோர் இவர்களின் மத்ஹபாகிய மாலிக் மத்ஹபைப் பின்பற்றுபவர்களாவர்.
அவர்கள் வலீத் எனும் உமய்யா அரசன் காலத்தில் ஹிஜ்ரி 93 இல் ஜனனமானார்கள்.
அக்காலக் கல்விச் சபைகள் பல மதீனாவின் நானாப்பக்கங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வீடுகளிலும் கல்விக்
கழகங்கள் திகழ்ந்து கொண்டிருந்தன. இமாமவர்கள் எழுநூற்றுவரிடம் கல்வி பெற்றார்கள்.
முதலில் ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே கற்றார்கள். பின்னர் மதீனாவில் பற்பல இடங்களிற் சென்று இமாம் ஸுஹ்ரி, இமாம் முஹம்மத் பின் முன்கதிர், இமாம் நாபியீ போன்ற மேதாவிகளிடம் அல்குர்ஆன், அல்ஹதீஸ், ஃபிக்ஹு போன்ற கலைகளை கற்று வல்லுனரானார்கள்.
ஹஜ்ஜின் பொருட்டன்றி மதீனாவை விட்டு ஒருப்போதும் இவர்கள் வெளிச் சென்றதில்லை. ஹஜ் யாத்திரையின்போதும் இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடமாடிக்கொண்டிருந்த அப்பரிசுத்த பூமியின் மணலைக் காலால் மிதிக்க மனம் கூசிக் கையை ஊன்றிப் பின்புறத்தால் நகர்ந்து சென்றார்கள் என்றால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது அன்பும் பற்றும் பக்தியும் எவ்வளவு இருந்திருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஒவ்வொரு இரவிலும் கனவில் காண்பார்கள்.
இமாம் ஷாபியீ முதலிய ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் இவர்களிடம் கல்வி பெற்றார்கள். முஸ்லிம் கலீபரசருள் எழுவர் இவர்களிடம் பயின்றார்கள். அறிவுச் சுடராகவும், ஞான தீபமாகவும், அருஞ் சட்ட நிபுணராகவும், மதிபுற்ற நூலாசிரியராகவும், அவர்கள் திகழ்ந்தார்கள். இவர்கள் ஞாபகசக்தி மிகவும் விசேஷம் பெற்று விளங்கியது. ஒரு முறை கேட்ட ஒன்றை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். மதீனாவிலிருந்து கொண்டே சுமார் 70 வருடக் காலங்களாக அகிலமெங்கும் கல்வி பெறச் செய்தார்கள். மதீனாவின் பள்ளியிலும் இவர்களின் கல்விச் சபை புகழ்பெற்று விளங்கியது. தங்களின் 16வது வயதில் இருந்து 86 வயதுவரை இத்தகைய சேவையிலும், சட்டங்கள் கண்டுபிடித்தல், மார்க்கத் தீர்ப்பளித்தல் முதலான புண்ணிய சேவைகளிலும், இறைவணக்கத்திலும், பிறர்க்குதவி புரிதலிலும் இவை போன்ற அனேக நட்கிரியைகளிலும் தங்கள் வாணாளைக் கழித்தனர். வினாக்களுக்கு விடையளிக்கும்போது தக்க ஆதாரமின்றிச் செய்யமாட்டார்கள். கொஞ்சமேனும் ஐயப்பாடு தோன்றின் தனக்குத் தெரியாது என்று கூறச் சிறிதும் பின்வாங்கமாட்டார்கள். சுமார் 12 கிரந்தங்கள் இவர்களால் இயற்றப்பட்டன.
இவர்களைப்பற்றி இமாம் அபூஹனிபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வினவப்பட்டபோது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல்களை அறிந்தவர்களுள் அவர்களை விட யார் உண்டு என்றார்கள். முவத்தஃ எனும் ஹதீஸ் கிரந்தம் அவர்களின் கிரந்தங்களுள் மிகப் பிரபல்யம் வாய்ந்தது. இது ஹிஜ்ரி 131 முதல் 140 வரையுள்ள காலத்தில் இயற்றப்பட்டது. இது எல்லா அறிஞராலும் புகழப்படும் ஒரு ஹதீஸ் கிரந்தம். ஆறு பரிசுத்த ஹதீஸ் கிரந்தங்களில் ஸுனனு இப்னு மாஜாவை ஆறாவது கிரந்தமாய்க் கணக்கெடுக்காது முவத்தஃவையே ஆறாவதாய் மதிப்போருமுளர். ஹதீஸ் கிரந்தங்களில் இதுவே முதன்முதலாய் எழுதப்பட்டதாகும்.
இவர்கள் சன்மார்க்க கல்வியை அதிகம் கௌரவிக்கிறவர்களாயும் கல்விமான்களைக் மரியாதை செய்கின்றவர்களாகவும் இருந்தனர். இதனால்தான் ஒரு முறை ஹாருன் ரஷீத் என்ற அரசர் மதீனா சென்றிருந்த போது இமாம் அவர்களிடம் சில தூதர்களை அனுப்பி அவர்களின் முவத்தஃ எனும் கிரந்தத்தைத் தன் மனையில் வந்து வாசித்துக் காட்டுமாறு கேட்க, இமாம் அவர்கள் ‘கல்வியைத் தேடி மனிதர் வர வேண்டுமேயன்றிக் கல்வி மனிதனை தேடிச் செல்வதில்லை’ எனக் கூறி அனுப்பினார்கள். மற்றொரு முறை அவ்வரசர் மதீனா வந்தபொழுது பஃதாதுக்குத் தன்னுடன் வருமாறு இமாம் அவர்களை வேண்டினார். அதற்கு இமாம் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பட்டணமாகிய மதீனாவைப் பிரிந்து செல்ல மனம் சகிக்குதில்லையென்று கூறி மறுத்துவிட்டார்கள். பின்னர் மன்ஸூர் அரசனின் காலத்தில் மதீனாவுக்கு அதிகாரியாயிருந்த ஜஃபர் என்பவர், தனது கட்டளையை மீறினார் என இமாம் அவர்களைக் கசையால் அடிக்குமாறு ஏவினர். இதைக் கேள்வியுற்ற அரசர் ஜஃபரைப் பதவி நீக்கம் செய்து கழுதையிலேற்றி பஃதாதுக்குச் செல்ல ஏற்பாடு செய்தார். ஒருக்கால் இவர்கள் தங்கள் ஜீவனோபாயத்துக்காகக் கஷ்டப்பட வேண்டியிருந்தது. இவர்களின் கீர்த்தி பகிரங்கமான பின்னர் அராபிய தேச நாடுகள் எகிப்து, ஸிரியா முதலான தேசங்களிலிருந்தேல்லாம் வெகுமதியாகச் செல்வங்கள் ஏராளமாய் வந்து குவிந்த வண்ணமிருந்தன. அவற்றைத் தன் சிஷ்யகோடிகளுக்கும் பிறக்கும் அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார்கள். மக்காவில் ஷாபியீ இமாம் இருந்தபொழுது ஒவ்வொரு வருடமும் தங்கள் குருவாகிய மாலிக் இமாம் அவர்களுக்கு 16 ஆயிரம் தீனார் (தங்க நாணயங்கள்) களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
இவர்கள் தங்கள் 86 வது வயதில் ஹிஜ்ரி 179 இல் ரபியுல் அவ்வல் 10 ஆம் தேதி இறையடி எய்தினார்கள். ‘ஜன்னத்துல் பகீஃ’ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக.