MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நாயகம் ஒரு காவியம்
இறைவனிடம் ஒரு விவாதம்
ஏழைதான் நான்
இருந்தாலும் இறைவா உன்
செல்வ மாளிகையில்
சிறுபூவாய் மலரேனோ?
குளிக்கத் தெரியாத
குழந்தையொன்று தன் தாயைக்
குளிப்பாட்டி அழகு செய்யக்
குதித்துவரின் குற்றமுண்டோ?
தூயவனை என்னைத்
துலக்க வழி தெரியாமல்
தூயவனே உன்னிடத்தில்
தொலைக்க வழி தேடுகிறேன்
தண்ணீரில் போகாத
தடித்த கரைகளுண்டு
கண்ணீரில் கழுவினால்
கரையாத கரையுண்டோ?
முகம் பார்க்கும் கண்ணாடி இங்குண்டு
எனக்கு ஒரு அகம் பார்க்கும் கண்ணாடி
அளிப்பதற்கு மறுப்பாயோ?
எல்லையில்லா உன் புகழை
எடுத்துரைக்க வந்த சிறு
பிள்ளைதான் நான்.... எனது
பிஞ்சுமொழி கேளாயோ?
குவலயமே நன்கொடையாய்க்
கொடுத்தவன் நீ... என்னுடைய
கவலையெல்லாம் தீர இன்று
கவிதை தர மாட்டாயோ...?
என்னுடைய தகுதியினை
எண்ணி நான் பாடவில்லை....
உன்னுடைய தகுதியினை
உணர்ந்ததால் பாடுகிறேன்!
உன்னிடத்தைத் தேடி
ஓடிவர இயலேன் நான்
என்னிடத்தைத் தேடி உன்
இறையருளும் வாராதோ?
உன்னிடத்தில் என்னை
ஒப்புவித்த பின்னே
என்னுடைய குறையெல்லாம்
எனதென்ப தெவ்வாறோ?
வள்ளல் நபி கதையை
வரைகின்றேன் – காவியத்தின்
உள்ளே நீ நிறைந்து
ஒளியேற்ற மாட்டாயோ...?
தெரியாமல் நான் இந்த
தீன் நெருப்பை தொட்டுவிட்டேன்
கருகாமல் சுடர் வீசக்
கருணையினைக் காட்டாயா?
எனக்காக இல்லை எனினும்
இறைதூதர் ஏந்தல் நபி
தனக்காக இங் கெனக்குத்
தமிழெடுத்து நீட்டாயா?
நாயகம் ஒரு காவியம்
காவிய நாயகர்
முழு நிலவே! வள்ளல் முகமதே!
உங்களை நான் பிறைநிலாச்சொற்களால்
பேசுகிறேன்.....
மனிதர்களில் இவர் ஒரு மாதிரி...
அழகிய முன்மாதிரி!
உலக அதிசயங்களில் இது ஓர் ஒப்பற்ற அதிசயம்......
காலடியில் மகுடங்கள் காத்துக் கிடந்தன.......
இவரோ ஓர் ஏழையாகவே இறுதிவரை வாழ்ந்தார்!
உலக அதிசயங்களில் இது ஓர் ஒப்பற்ற அதிசயம்
எல்லாரும் வாயிட் கதவுகளைத்
தட்டிக்கொண்டிருந்தார்கள்.
இறுதி நபியாய் எழுந்தருளிய இவர்தான்
தாழிட்ட மனக்கதவைத் தட்டினார்.
அகதியாய் இதயங்கள் அலைந்து கொண்டிருந்தபோது இவருடைய
தோள்களே மானுடத்தைத் தூக்கிக் கொண்டன.
கை கொடுத்த இவருடைய “கை” - தொழுகை
எழுத படிக்கத் தெரியாதவர்தான்....
ஆனால் இவர்தான் பூமியின் புத்தகம்!
சிம்மாசனங்களில் இவர் வீற்றிருந்ததில்லை
அண்ணலார் அமர்ந்த இடமெல்லாம்
அரியனையானது!
கிரீடங்களை இவர் சூட்டிக்கொண்டதில்லை
பெருமானார் தலையில் தரித்ததெல்லாம்
“மணிமகுடம்” என்றே மகத்துவம் பெற்றது!
மக்கத்து மண்ணை இவர் போர் தொடுத்து வென்றார் அகில உலகத்தையும்
போர் தொடுக்காமலே வெற்றி பெற்றார்!
கவலைகளால் இதயம் கனக்கும் வேளையில்
பெருமானாரின் நினைவுக்குளத்தில் நான்
நீராடுவேன் –
இதயக்கவலைகள் எடை இழந்து போகும்
நடைபயிலும் கால்கள் எங்கேனும்நாட்காட்டி ஆனதுண்டோ?
மக்காவிலிருந்து மதீனாவுக்கு இவர் நடந்தார் -
ஹிஜ்ரி என்னும் ஆண்டுக்கணக்கு ஆரம்பமானது!
இவர் இறைவனின் துறைமுகம்!
இங்கேதான் திருமறை இறக்குமதியானது!
இவர் இறைவனின் துறைமுகம்!
இங்கிருந்துதான் திருமறை
எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதியானது
நாயகம் ஒரு காவியம்
பிறப்பு
அரபு நாட்டில் மக்கா நகரில்
அப்துல்லா மகனாய் பிறந்த நபி!
அழகில் அறிவில் சிறந்த நபி!
இரவின் இருட்டை விரட்டும் கதிராய்
இறைவன் அனுப்பிய உதய நபி!
இறுதி தூதர் இதய நபி!
அப்துல் முத்தலிபின் பேரக் குழந்தையாய்
அவதரித் திட்ட ஏந்தல் நபி!
அகத்தில் புறத்தில் சாந்த நபி!
ஒப்பில் லாத இறைவன் ஒருவனே
உணர்வீர் என்றே உரைத்த நபி!
உருவ வழிப்பாட்டை மறுத்த நபி!
அன்னை ஆமினா வயிற்றில் வளர்கையில்
அன்புத் தந்தையை இழந்த நபி!
அநாதை யாகவே பிறந்த நபி!
மண்ணுயி ரெல்லாம் தன்னுயி ரென்றே
மானுடம் வாழச் செய்த நபி!
மறைநூல் கொண்டு நெய்த நபி!
நாயகம் ஒரு காவியம்
வளர்ப்பு
மக்கா நகரில் மாபெரும் விருந்து
மண்டபத்துள்ளே பெருங் கூட்டம்!
மலருக்குப் பெயரிடும் கொண்டாட்டம்!
பக்கத்தில் வந்து அப்துல் முத்தலிபு
“முகம்மது” என்றே பெயரிட்டார்!
பேரனைப் பாசத்தில் பயிரிட்டார்!
நாயகம் ஒரு காவியம்
கவிக்குரல்
கல்லாத நபியே! நீங்கள் கற்றதெல்லாம்
அல்லாஹ் என்னும் ஆசானிடத்திலோ?
பள்ளிக்கூடத்தையே பார்க்காத நீங்கள்
பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தீர்களே.....
படைத்தவனை ஐவேளை படிப்பதற்காகவோ?
அறிய அறியத்தான் அறியாமை தெரியுமோ?
அதற்காகத்தான் கல்வியை எங்கள் கடமையாக்கினீர்களோ?
‘எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்குக்
கற்றுக் கொடுத்தால் கைதிக்கு விடுதலை’என்றீர்களே.....
நீங்கள்தான் எழுத்தறிவு இயக்கத்தின் வேரோ? அறிவொளி இயக்கத்தின் ஆணிவேரோ?
உம்மி நபியாய் உலகிற்கு வந்தவரே!
பாரெல்லாம் நடைப்பெறும் உங்கள்
பல்கலைக் கழகத்தில் பாடங்கள் ஐந்தோ?
‘கலிமா’ ‘தொழுகை’ ‘நோன்பு’ ‘ஜக்காத்’
‘ஹஜ்’ என்னும் பாடங்கள் ஐந்தோ?
நாயகம் ஒரு காவியம்
பாலூட்ட வந்த அன்னை
குத்து விளக்காய் வளர்ந்த குழந்தைக்குப்
புத்தமு தூட்டுவதார்? – அந்தப்
புகழினை ஈட்டுவதார்?
உத்தம அலிமா செவிலித் தாய்க்குக்
கிடைத்தது நல வாய்ப்பு – கையில்
கிண்கிணிப் புன்னகைப் பூ.
தந்தையில் லாத அனாதைக் குழந்தைக்குத்
தந்தார் பாலமுது – அலிமா
தாய்க்கோ பொன்மனது!
சந்திரப் பிறையாய் சந்தன மணமாய்
முகமது வளர்கின்றார் – ஆமினா
‘அகமது’ என்கின்றார்!
தமிழ் - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள் - மு.மேத்தா கவிதைகள்