MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
அஹமதைக் ﷺ காண்பேனா......?
*********************************************
அழகுக் கெல்லாம் அழகு இலக்கணமாய்
அவனியில் அனையோர்க்கும் அருட்பிழம்பாய்
மேன்மை என்பதன் அகராதிப் பொருளாய்
வாய்மை என்பதன் உவமையாய்
தூய்மை என்பதன் நிரந்தரச் சொந்தமாய்
வற்றிய பாலையில் வளம்நிறைச் சோலையாய்
வந்துதித்த வள்ளல் எங்கள் நபிகள் பெருமான்
தங்கள் முக ஒளிவெள்ளத்தில் எம் அகம் குளிப்ப தெந்நாள்..?
அகிலம் போற்றும் அருமை நபிகள் நாயகம் ﷺ
*****************************************************************
அகிலத்தோர்க்கு அருட்கொடையாய்
அவனியில் வந்துதித்து
ஆதமின் மக்களனைவரிடமும்
ஆட்கொண்டிருந்த அறியாமைக் கறைகளனைத்தும்
இல்லாதொழித்து அவர்தம்
இம்மையும் மறுமையும்
ஈகைநிறை இறைவன் முன்னில்
ஈட்டுத்தரும் வெற்றிகளாய்
உறுதிப் பிரமாணம் தந்து அவரின்
உள்ளமதை ஒளிவாக்கி- இஸ்லாத்தின்
ஊன்றிப் பிடிக்கும் வேர்களாய்
ஊக்கம்நிறை தீரர்களாய் உருவாக்கி-அவர்தம்
எண்ணவியலா தியாகங்களனைத்தும்
என்றும் தீனுல் இஸ்லாத்திற்காய்
ஏகத்துவம் தரணியில் படர்வதற்காய்
ஏற்று மனமுடன் ஈந்தச் செய்து
ஐயமற்ற அரும் வாழ்க்கை நெறியை
ஐந்து கடமைகளில் இனிதே மொழிந்து-மேதினியில்
ஒப்பிலா ஓரிறைக் கொள்கை ஊன்றி
ஒப்பற்ற மனிதப் புனிதராய் வாழ்ந்து
ஓய்வின்றி உம்மத்திற்காய் தன் உழைப்பை ஈந்து
ஓங்குபுகழ் குர்ஆனை உலகப் பொதுமறை ஆக்கி
ஒளடதமாய் இம்மையில் நம் உள்ளப் பிணிகள் நீக்கி-மேலும்
ஒளடதமாய் நம்மின் மறுமைத் துயரங்களும் நீக்கவிருக்கும்
அருமை நபி நாதர் எங்கள் மஹ்மூதாம்
முத்து முஹம்மது அவர்கள் மீது
மொத்தமாய்ப் பொழியட்டும் என்றென்றும்
இறையோனின் இனிய சலாம்கள்...!
மாநபியே எங்கள் ஸலாம் !ﷺ
*****************************************
மண்ணகமும் போற்றுதே! ....தங்களை
விண்ணகமும் போற்றுதே!
கண்மணி ஆமினா ஈன்றெடுத்த கனியமுதே
கவிஞர்கள் பாடிடும் கறையில்லா மஹ்மூதே....
புண்ணியம் செய்ததால் உங்கள் உம்மத்தானோம்....இருந்தும் தங்களை
கண்ணியம் செய்வதில் ஏன் ஊமைகளானோம்.....?
எம்மை மன்னியுங்கள் மாமன்னரே!
எங்கள் உயிர்கள் அனைத்தும் தங்களுக்கே அர்ப்பணம்
ஏற்றிடுவீர் எமது சலாமனைத்தும் தங்களுக்கே சமர்ப்பணம்....
யா நபி ஸலாம் அலைக்கும்...!
யா ரசூல் ஸலாம் அலைக்கும்...!
யா ஹபிப் ஸலாம் அலைக்கும்...!
ஸலவாத் துல்லா அலைக்கும்..!
நபி புகழ் பாடுவோம். நன்மைகளைத் தேடுவோம் ﷺ
**********************************************************************
கண்மணியாம் எங்கள் ரசூல் நாயகமே...!
காசு பணம் நீங்கள் சேர்க்கவில்லை மேதினி வாழ்வினிலே ...
கிழிந்த ஓலை விரிப்புதான் தங்கள் படுக்கை
கீறல் நிறை மண் குடிலே தங்கள் மாளிகை -இவ்வாறான
குவலயம் போற்றிடும் தங்கள் எளிமை வாழ்க்கை .
கூறிச் சென்றீர்கள் குர்ஆனும் தங்கள் வழிமுறையும் இனிதாய் -எனினும்
கெட்ட எமதுள்ளங்களில் அவை நிறைந்திடவில்லை முழுதாய் -அதனாலே
கேள்விகள் பல எழுப்புகிறோம் இன்று தங்கள் நடைமுறை மீது
கைகழுவி விட்டோம் தங்கள் மேலான கோட்பாடுகளை
கொள்கைகள் பலவும் கொண்டோம் சொந்தமாய் -ஆனாலும்
கோடிகள் எமதாக்கிக் கொண்டோம் தங்கள் மூலமாய் -போலி
கௌரவம் கண்ட இறுமாப்பில் தங்களை மறந்தோமே அண்ணலே ....!
போதுமே நபி போதம் மறந்த நமது போதனைப் புலம்பல்கள்...
போதுமே அவர் புகழ் மறைத்த நமது இரைச்சல்கள் ....இனியேனும்
நிறுத்துவோம் இவையனைத்தையும் உண்மை நபிநேசம் கொண்டு
செலுத்துவோம் நம் சிந்தனையை இறைத்தூதர் வழிமுறை கண்டு
புண்ணிய வேந்தராம் புகழ்நிறை அஹமதாம்
மண்ணிலே வந்துதித்த மாந்தர்க்கெல்லாம் மன்னராம்
கண்மணி எமதருமை நாயகப் பொன்மணியின்
கண்ணியம் போற்றிடுவோம் வாருங்கள் தோழர்களே....!
ஸலவாத்துகளைச் சமர்ப்பிப்போம்
************************************************
சத்திய சன்மார்க்கப் போதனை செய்தே - சரித்திரச்
சாதனை நிகழ்த்திட்ட சாந்த நபி இவர்........!
சிறப்பாய் சீராய் வாழ்ந்திட்ட புண்ணிய சீலரிவர்….!
சீக்குகள் நிறைந்திருந்த மாந்தர்தம் உள்ளங்களை
சுத்தக் குர்ஆனின் சுகந்தம் கொண்டு நலமாக்கியவர்.....!
சூழ்ந்திட்ட துன்பங்கள் பகைகள் அனைத்தையும்
செறிந்த வீரத்தால் விவேகத்தால் வென்றவர்..!
சேதாரம் ஏதுமின்றி செழுமையுடன் இஸ்லாம் வளர்த்தவர்..!
சொல் செயல் எண்ணத்தை தூய்மையாய் வைத்துக்
கொண்டவர்..!
சோக அனுபவங்களையும் சுகமான வரலாறுகளாய் மாற்றியவர்...!
செளஜன்யமும் சமாதானமும் வாழ்வு நெறியாகக் கண்டவர்..! _
இம்மையின்
சஃக்ராத்து வேளையிலும் உம்மத்தாம் நம் கவலை
கொண்டவர்...!
எங்கள் நபி நாதர்…….ஏந்தல் முஹம்மது அவர்கள்..!
சாந்தியும் கருணையும் தம் மீது இறையோனால்
என்றும் மழையாக இறைக்கப் பெறும் சீமானாம்
மதீனாவில் வாழுகின்ற மாண்புயர் கோமானாம்
பாராளும் மன்னரெங்கள் அஹமதின் பாதங்கள் மீது
பாசத்துடன் சமர்ப்பிப்போம் பணிவான நமது
ஸலவாத்துகளை...!
கனிவுடன் மொழிந்திடுவோம் நம் ஸலவாத்தும் ஸலாமும்
*****************************************************************
தரணி முழுமைக்கும் அருள்விளக்காக வந்தவரே -பெற்ற
தாயினும் மேலான பாசம் எம் மீது கொண்டவரே
திருமறையாம் அருள்மறைக் குர்ஆனைத் தந்தவரே
தீனோர்க்குக் காவலராய் என்றும் திகழ்பவரே
துணையில்லா துய்யோன் ஏகன் அல்லாஹ்வின்
தூதராக வந்த தூய்மைநிறை வாய்மையாளரே
தெளிந்த நீரோடையாய் வாழ்ந்து சிறந்தவரே
தேய்மானம் இல்லாத தீன் ஞானம் தந்தவரே
தைரியம் வீரம் விவேகம் செறிந்த மாமன்னரே
தொல்லைகள் தந்திடும் ஷைத்தானையும் எளிதாய்
தோல்வியுற்று புறமுதுகிடச் செய்த மாவீரரே
தெளஹீத் எனும் தீபம் தரணியில் பரவச் செய்த தீரரே
தஃதீர் எனும் தலைவிதியையும் தன் துஆவினால் மாற்ற வல்லவரே
தன்னிகரில்லா தங்க நபியே….! தகைமை நிறை தாஹா ரஸூலே...!
நல்லவர்க்கெல்லாம் நல்லவராம்
நற்குணங்களின் நாயகராம் எங்கள்
கருணை நபிப் பெருமான் முஹம்மதின் மீது
கனிவுடன் மொழிந்திடுவோம் நம் ஸலவாத்தும் ஸலாமும்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!
பரிசுத்த நபி ﷺ மீது பாசம் கொள்வோம்..!
***********************************************
பகை கொண்டு சொல்லொணாத் துன்பங்கள் பல தந்திட்ட
பாவிகளையும் மன்னித்தருளிய கருணைக் கடலே…!- அடிமை
பிலால் மீது அளவிலாப் பிரியம் கொண்டு - மாந்தரிடம்
பீடித்திருந்த உயர் குலக் கர்வம் கொன்றவரே....!
புண்ணியம் பெற்ற ஸஹாபாத் தோழர்களை
பூமியோர்க்கு வழிகாட்டும் விண்மீன்களாக ஆக்கிச் சென்றவரே..!.
பெருமையுடன் எளிமையாய் வாழ்ந்திட்ட பெருமானே...!
பேரோங்கும் மிஹ்ராஜ் துவக்கத்தில் - நபிமாரனையோர்க்கும்
பைத்துல் முகத்தஸில் இமாமாகி இறையை வணங்கிய இனியவரே...!
பொற்குணங்களின் தாயகமென்றும் வள்ளலென்றும்- குவலயம்
போற்றிடும் புகழுடன் என்றும் திகழ்பவரே…!
பெளர்ணமி நிலாவையும் மிஞ்சும் ஒளிகொண்டவரே...!
பஃக்தாத் முஹையத்தீன் உள்ளிட்ட இறைநேசர்களின்
பாசத்திற்கும் பிரியத்திற்கும் உரித்தான பண்பாளரே...!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!
சிந்தனை செய் மனமே….! சீர்மிகும் நபிகளைப் புகழ்ந்திடு தினமே..!
**************************************************************
மனிதனெனும் படைப்பு
உடலுயிர் இவற்றின் பிணைப்பு !
உடலென்பது சுதேசியாம்
உயிரென்பது விதேசியாம் !
உடலூட்டம் மண்ணகத்து உணவுகளினாலெனில்
உயிரூட்டம் நபியொளி,திருமறையெனும்
விண்ணகத்து உணவுகளினாலாம்.!
உடல் வளர்த்தல் உலக வாழ்க்கைப் பயனெனில்
உயிர் வளர்த்தல் இகபர வாழ்க்கைப் பயனாம்.!
படைத்தவனின் நெருக்கம் வேண்டுமெனில்
பண்புயர் நபியை உயிரினுமேலாய் நேசியுங்கள்…!
அதிபதியின் சுவனபதிப் பேற்றை அடைந்திட
மதிநபியின் மொழியமுதம் நாளும் வாசியுங்கள்…!
இறை தந்த அருட்கொடையாம்
திருமறையை இனிதே நமக்கீந்து
அருள்மறையாகவே முற்றிலும்
அவனியில் வாழ்ந்து காட்டிய
அண்ணலின் ஸுன்னத்தை
உயிர்வளியாய் சுவாசியுங்கள்..!
அஹமதைப் புறந்தள்ளி
ஆண்டவனை நெருங்கிடலாமென்று
இகமதில் நிகழாச் சொப்பனம் காணாதீர்..!
முஹம்மதிய அருட்கோலம் களைந்து- இழிந்த
முஷ்ரிக்கெனும் இருட்கோலம் பூணாதீர்..!
பொய்ஜாலங்களில் உலகைக் கவர்ந்தது போதும் ! -இனியேனும்
மெய்வழி நடக்க கைப்பிடிப்போம் மன்னர் நபி போதம்..!
முன்பின் இலா மூத்தோனும் புகழ்கின்ற
முத்து முஹம்மதைப் புகழ்ந்திடுவோம் அனுதினமும்…!
மன்னவனும்,விண்ணவரும் மாசற்ற நபி மீது
மகிழ்ந்து மொழிந்திடும் மகிமைநிறை ஸலவாத்தை
மனதுடனே நாமும் மொழிகின்ற எந்நாளும்
மண்ணகத்தில் நமக்குப் பொன்னாளாம்…திருநாளாம்..!
ஸல்லல்லாஹு..அலா…முஹம்மத்
ஸல்லல்லாஹு…அலைஹி…வஸல்லம்..!
ஸல்லல்லாஹு…அலா…..முஹம்மத்
ஸல்லல்லாஹு…அலைஹி….வஸல்லம்..!
ஸல்லல்லாஹு…அலா….முஹம்மத்
யா ரப்பி ஸல்லி அலைஹிவஸல்லம்..!
என்னவென்று சொல்வதம்மா...?
*******************************************
என்னவென்று சொல்வதம்மா அண்ணல் நபிப் பேரழகை...!
சொல்ல மொழி இல்லையம்மா மன்னர் நபி நூரழகை...!
அந்த வெள்ளி முகத்தவரை எம் உள்ளம் நிறைந்தவரை
நான் என்னென்று சொல்வேனோ... அதை எப்படி சொல்வேனோ..?
அவர் தாம் முஹம்மதெங்கள் நபி நாதராம்...!
ஆதி இறையோனின் அன்புநிறைத் தூதராம்...!
என்னவென்று .....
பொன்னான மேனியின் கஸ்தூரி வாசமே
பூலோகம் மீதினில் பூமாரி வீசுமே...!
முகவொளி வெள்ளம் பார்த்து வெட்கிப் போகும் வான்மதி
தகைநிறை உள்ளம் பார்த்து வற்றிப் போகும் நைல்நதி...!
ஏந்தல் நபிநேசம் அதுவே எங்கள் சுவாஸம்
அவர் தாம் எங்கள் பாவக் கறைகள் நீக்குவார்
அடியோரெம்மை சொர்க்கக் கரையில் சேர்க்குவார்...!
என்னவென்று .....
மதீனாவில் வாழ்ந்த்திடும் மன்பதையின் காவலர்
நம்நாவில் மொழிந்திடும் ஸலவாத்தின் நாயகர்..!
புர்கானை உலகத்தோர்க்கு மறையாகத் தந்தவர்
புவிவந்த தூதர்க்கெல்லாம் தலையாகி நின்றவர்...!
அருமை நபி இதயம் ஆன்மீக ஒளியின் உதயம்
அவர் பிறந்த இடம் அரேபியாவின் மக்காவாம்
அவர் தாம் எங்கள் அன்புநிறைத் தாஹாவாம்.....!
என்னவென்று சொல்வதம்மா அண்ணல் நபிப் பேரழகை...!
சொல்ல மொழி இல்லையம்மா மன்னர் நபி நூரழகை...!
அந்த வெள்ளி முகத்தவரை எம் உள்ளம் நிறைந்தவரை
நான் என்னென்று சொல்வேனோ... அதை எப்படி சொல்வேனோ..?
அவர் தாம் முஹம்மதெங்கள் நபி நாதராம்...!
ஆதி இறையோனின் அன்புநிறைத் தூதராம்...!
அருளென்ற மழையிலே....!
************************************
அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே....!
அருளாளன் இறைவனின் அன்புநிறைத் தூதராய் அகமதுவும்
தோன்றினாரே....!
அனலான பாலையில் புனலொன்று தோன்றுமோ அழகுநபி தோன்றினாரே....!
மக்காவின் மீதினில் மாண்புயர் மன்னராய் மஹ்மூதர் தோன்றினாரே...!
அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே...!
இருளான மாந்தர்தம் இதயங்கள் ஒளிரவே இனியநபி தோன்றினாரே...!
(இனியநபி தோன்றினாரே...! )
சூரியனும் சந்திரனும் ஒன்றாகித் தோன்றுமோ ஒளிநபிகள் தோன்றினாரே...!
தூய்மையும் வாய்மையும் ஒன்றான தன்மையாய் தாய்நபிகள் தோன்றினாரே..!
கஷ்டங்கள் போக்கிடும் சலவாத்தின் காரணராய் கவின் நபிகள் தோன்றினாரே...!
நஷ்டங்கள் இன்றியே நம்மைக் கரைசேர்த்திட நாதர்நபி தோன்றினாரே...!
அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே....!
அருளாளன் இறைவனின் அன்புநிறைத் தூதராய் அகமதுவும்
தோன்றினாரே....!
அனலான பாலையில் புனலொன்று தோன்றுமோ அழகுநபி தோன்றினாரே....!
மக்காவின் மீதினில் மாண்புயர் மன்னராய் மஹ்மூதர் தோன்றினாரே...!
தரமாய்ப் புகழ்ந்திடுவோம் தாஹா நபிகளையே...!
*******************************************************************
ஒப்பிலா ஓரிறையை நமக்கெல்லாம் காட்டித் தந்தவர்
தப்பிலா இறைமறையைத் தன்னகத்தே தாங்கி வந்தவர்
முப்பொழுதும் புகழென்றே முழுதாய்ப் பொருள்படும்
அப்பழுக்கில்லா அஹமதெனும் அழகிய பெயர் கொண்டவர்
எப்பழுதும் இல்லா ஏகன் தூதரில் தலையானவர் - மறுமையிலும்
ரப்பிடம் நமக்காகப் பணிந்து மன்றாடியே
கப்பலாய் நம்மைக் கரை சேர்ப்பவர்
ஒப்புவமையில்லா நற்குணங்களின் இருப்பிடமும் அவர்தான்
இப்புவி கண்ட வரலாற்று நாயகர்களில் முதலிடமும் இவர்க்குத்தான்
தப்பெண்ணம் தயக்கம் ஏதுமின்றி தரமாய்ப் புகழ்ந்திடுவோம்
எப்பொழுதும் எம்முயிரினுமேலான முத்து முஹம்மதையே....!
மதீனாவிற்குச் செல்லும் வரம் வேண்டும்...
*********************************************************
மக்காவில் வந்துதித்த மாணிக்கக் கோமானே….!
மதீனாவில் உறைகின்ற மாண்புநிறைச் சீமானே…!
தக்காரும் மிக்காரும் இல்லா தகையாளரே..எம்மானே…!
திக்கனைத்தும் தீனுல் இஸ்லாம் பரவச் செய்த எம் பெருமானே….!
திகட்டாத தமிழ்கொண்டு தங்களைப் பாடுகிறேன் அடியேன் நானே…!
மிகைத்திட்ட ஆவலில் தங்களைக் காண விழைகின்றேனே….!
எம் காதல்பிணி தீர மதீனாவிற்கெமை அழைத்திடுவீர் அண்ணலே….!
தங்கள் திருமுகம் தினமும் காணும் வரம் தருவீர் மாமன்னரே…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!
மாநபியே எங்கள் ஸலாம் !
************************************
மண்ணகமும் போற்றுதே! ....தங்களை
விண்ணகமும் போற்றுதே!
கண்மணி ஆமினா ஈன்றெடுத்த கனியமுதே
கவிஞர்கள் பாடிடும் கறையில்லா மஹ்மூதே....
புண்ணியம் செய்ததால் உங்கள் உம்மத்தானோம்....இருந்தும் தங்களை
கண்ணியம் செய்வதில் ஏன் ஊமைகளானோம்.....?
எம்மை மன்னியுங்கள் மாமன்னரே!
எங்கள் உயிர்கள் அனைத்தும் தங்களுக்கே அர்ப்பணம்
ஏற்றிடுவீர் எமது சலாமனைத்தும் தங்களுக்கே சமர்ப்பணம்....
யா நபி ஸலாம் அலைக்கும்...!
யா ரசூல் ஸலாம் அலைக்கும்...!
யா ஹபிப் ஸலாம் அலைக்கும்...!
சலவாத் துல்லா அலைக்கும்..!
அஹமது எனும் எம் தாய்...!
************************************
ஆதி இறையோனின்
அன்பார்ந்த தூதாய்.....
இகமதில் வந்துதித்தார்
புகழ்நிறை அஹமதாய்...!
விளங்குகிறார் இறையோனின்
விருப்பம் நிறை ரஹ்மத்தாய்...!
திகழ்கிறார் அவனியில்
தீனோரனைவரும் உரிமை
கொண்டாடிடும் பொதுச்சொத்தாய்...!
மலர்ந்தாரே தீனுல் இஸ்லாமெனும்
மாபெரும் விருட்சத்தின் ஏக வித்தாய்....!
ஒளிர்ந்தாரே அஹதின் நூராக
ஆன்மீக ஆழியுறை அழகு முத்தாய்....!
ஆக்கிச் சென்றாரே நம் அனையோரையும்
அரும்பேறு பெற்ற தம் உம்மத்தாய்...!
காட்டிச் சென்றாரே கண்ணாடியைப் போல்
வாழும் நெறி முழுதும்
வழிந்தொழுகும் சுன்னத்தாய்....!
நிலவைப் பிழந்தது போல்
பல அற்புதங்களை நிகழ்த்தி
கண்டோர் வியந்திடப்
பறிமாறினார் காட்சி விருந்தாய்..!
இம்மையிலும் குணம் தந்தாரே இனிதாக
நம் உளப் பிணிகளனைத்தும் நீக்கி மருந்தாய்...!
மறுமையிலும் தவறாது பொழிவாரே
கருணை மழை நம் மீது ஷஃபாஅத்தாய்...!
அகிலத்தின் அருட்கொடையாம்
அண்ணலின் அறிவுரைச் சொல்
இனித்திடுமே திகட்டாத அமிழ்தாய்...!
பொற்குணங்களின் தாயக
நபி நாயகத்தை புகழ்ந்துருகிப்
புண்ணியம் பெற்றிடவே
மொழியானாளோ நம் தமிழ்த்தாய்....?
மன்னர் முஹம்மதின்
அரும் சிறப்புகளனைத்தும்
ஐயமின்றிப்
புரிந்திட்டோம் நாம் எளிதாய்....!
இருப்பினும்....
நம்மில் அற்ப மானிடர் சிலர்
அஹமது நபிகளின்
அற்புதங்களை
நம்ப மறுக்கின்றனர் முழுதாய் ...!
சற்குண நபிகளின்
சரித்திரப் புகழ்தனை சற்றும்
உணராதிருக்கின்றனர் பேதை மனதாய்...!
முப்பொழுதும் பொருந்தும்
காரணப்பெயர் கொண்டிலங்கும்
முஹம்மதின் புகழ்
பாடுதலை வெறுக்கின்றனர் பழுதாய்...!
தலையும் விலையும்
இல்லா தறுதலைகள்
சிலரிங்கு ஆக்கிக் கொண்டனர்
தம் மானம் புறத்தாய்...!
தங்கநபிப் புகழ் மறைக்கத்
துணிந்த காரணத்தினால்
தரணியில் அவர்
உழல்வர் தீராத பித்தாய்...!
அர்ரஹ்மானின் நேசரே
தங்களின் அருமைப்
பண்புணர்ந்தோம் நாங்கள் இனிதாய்...!
தன்னிகரில்லா தாஹா
ரசூலே தாங்கள் தான் -என்றும் எமைத்
தகைமையுடன் நேர்வழி நடத்தும் எம் தாய்....!
மிஹ்ராஜ் எனும் அதிசயம்.!
************************************
புனிதப் பயணங்களில்
தலையான பயணமிது....!
மனிதருள் புனிதரும் அவர்தம்
மன்னவனும் சந்தித்துக் கொண்ட
முத்தான நிகழ்வு முகிழ்ந்த பயணமிது....!
முன்பின் இலா மூத்தோனும் அவனின்
அன்பின் உருவான நம் அண்ணலும்
தத்தம் பரஸ்பர நேசம் வெளிப்படுத்தியமை கண்டு
விண்ணோரும் மண்ணோரும்
வியந்து மகிழ்ந்த பயணமிது.....!
பொறுமைக் கடலாம்
நம் பூமான் நபிகளின்
இப்புனிதப்பயணம் இன்றுவரை
பூலோக விஞ்ஞானத்தால்
புரிந்து கொள்ளவியலாத புதிர்ப்பயணம்...!
புண்ணிய நபிகளின்
இவ்விண்ணேற்றப் பயணம்
ஆண்டவனை அறிந்திடும்
ஆன்மிக அகமியமெனும்
முன்னேற்றத்திற்கான பயணப் பாதையில்
முதல் மைல் கல்லானது....!
மிஹ்ராஜ் இரவுப் பொழுது.....
ஹபீபும் அவர்தம் மஹ்பூபும்
ஹுப்பில் இணைந்த இனிய பொழுது...!
அஹதும் அஹமதும்
அண்மிக் களிப்புற்ற ஆனந்த வேளை...!
இப்பயணம் நிகழ்ந்தது ஓர்
இருள் நிறைந்த இரவில்தான்...
எனினும் அது....
ஒளியுறை அருளாளனும் அவன்
ஒளிநிறை அருளானவரும்
கூடிக் கதைத்த ஒளிப்பிரவாகத்தால்
அருளொளிவெள்ளம் நிரம்பி
வழிந்த வண்ண இரவானது.....!
மிஹ்ராஜ் இரவுப் பொழுது.....
பைத்துல் முகத்தஸில்
நபிமார்க்கெல்லாம் நாயகமாக்கி
அழகு பார்த்த ஆண்டவன் நம்
அண்ணலின் அழகு முகம் காண
அழைத்து அகமகிழ்ந்த பொழுது இது..!
அல்லாஹ்வையும்,
சுவர்க்க நரகங்களையும்
நேரில் கண்ட சாட்சியாளராய்
நம் அன்பு நபிகளை
ஆக்கித் தந்த அரிய பொழுது இது....!
காருண்ய நபிகளின்
மிஹ்ராஜெனும் இப்பயணம்
காலம்,திசை,இடம் என்ற
உலகியல் எல்லைகளுக்குள்ளும்
காற்று,கிரகங்களெனும்
வானியல் எல்லைகளுக்குள்ளும்
அடங்காத அற்புதப் பயணம்....!
மன்னவனைக் கண்டு
மண்ணகம் மீண்ட எம்பெருமானும்
மறுமையில் விசாரணை நாளில்
மீஸானில் கனமாக்கும்
தொழுகையெனும் பரிசிலைப்
மாந்தர்க்காய்ப் பெற்று வந்த
மேலான பயணமே மிஹ்ராஜாம்.....!
மிஹ்ராஜின் சிறப்பெலாம்
மேன்மக்களே படித்தறிந்தீர்..!..இனியேனும்
மிஹ்ராஜால் மேன்மையுற்ற
சிராஜும் முனீராம் எம்
நாயகத் திருமேனியவர்கள்
நம்மைப் போன்ற மனிதரில்லை
நானிலத்தோரே நன்குணர்வீரே....!
அண்ணலே எம் பெருமானே......!
************************************
அவனியும் அண்ட சராசரங்களும் அகமகிழ்ந்தனவே தங்கள் பிறப்பினால்
அனைத்து நற்குணங்களும் ஒன்றாய் அடிபணிந்தனவே தங்கள் சிறப்பினால்
அகிலத்திற்கே அருட்கொடையாய் வந்த சீமானல்லவா தாங்கள்
அற்ப மானிடர்கள் அறியா ஆன்மீகப் புதையலல்லவா தாங்கள்
நிகரற்ற இறையோனும் பாசம் கொண்டான்- தங்கள் மேல்
நிரப்பமாய் ஸலாம் எனும் நிரந்தர மழை பொழிகின்றான்
விருப்பமாய் விண்ணோரும் ஸலாம் கூறுகின்றனர் - இதை
விண்ணிருந்து வந்த திருமறையும் பறை சாற்றுகின்றது
மாசில்லா மாந்தருள் மாணிக்கமே எங்கள்
மஹ்மூது நபி வள்ளலே எங்கள் ஸலாம் ...!
யா நபி ஸலாம் அலைக்கும்...!
யா ரசூல் ஸலாம் அலைக்கும்...!
யா ஹபிப் ஸலாம் அலைக்கும்...!
ஸலவாதுல்லா அலைக்கும்...!
காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
************************************************
காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கல்பு பரிசுத்தம்நிறை
காத்தமுன் நபிகளின்
கனிவான தரிசனம்
கனவினில் கண்டிடவே...!
காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காரணப் பெயர்கொண்ட
காவிய முஹம்மதெனும்
கருணை வள்ளலின்
கவின்முகம் கண்டிடவே...!
காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கஷ்டங்கள் நீக்கிடும்
காரண சலவாத்தின்
கருவியாம் அஹமதின்
காதலைப் பெற்றிடவே...!
காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கணக்குகள் தீர்க்கப்படும்
கடுமைநிறை மறுமையில் -கைவிடாதெமைக்
கரைசேர்த்திடும் மஹ்மூதரின்
கனிந்த பரிவினை இகத்திலும் பெற்றிடவே...!
காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காலமுள்ள காலமெல்லாம்
கண்ணியமாய்ப் புகழப்படும்
காருண்ய நபிகளின் கரம்பற்றி முத்தி
கண்களில் ஒற்றிடவே....!
காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காப்போனின் காதலரை
காசினியின் நாயகரை
கண்குளிரக் கண்டு
களிப்பேருவகை கொண்டிடவே...!
காணாப் பிணி கொண்டு
கவிபாடும் இவ்வெளியவன் மீது
கழிவிரக்கம் கொண்டு
கல்பு குளிர்ந்திடக் கனவினில் வருவீரே
கண்கொள்ளாக் காட்சி தருவீரே...!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!
பாவத்தின் பரிதாப ஓலம்...!
************************************
கற்பனைகள் என்னுள்
பற்பலவாய் கனிந்தாலும்
கவிதையாய் அவை
கருக்கொள்ள மறுக்கின்றன.
சிந்தனைகள் பலவும் எனைச்
செதுக்கிடத்தான் வந்தாலும்
நிந்தனைகளாகவே எனக்கவை
நித்தமும் தோன்றுகின்றன.
ஏனிந்த இயலாமை..?
எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன்
விளங்கியது விந்தை இன்று...
மனம் போன போக்கில் நடக்கின்றேன்.....ஆம்
மனோ இச்சையின் பிடியில் இருக்கின்றேன்...
மனிதம் மறந்தும் மரத்தும் போய்விட்ட
மாக்களின் உலகில்
நானும் ஓர் அங்கமாகிவிட்டேனே...என்செய்வேன்?
சொன்னார்கள் நபிநாதர் அன்றே
எண்ணம் சொல் செயல் தூய்மையே
மனிதனைப் புனிதனாக்குமென்றே.....!
செருக்கால் அதை விடுத்து
சுகபோக வாழ்வில் லயித்து
சீர் கெட்டுப் போய்விட்டேன்.....அந்தோ!
மருந்தென்ன இந்நோய்க்கு?.......
மாநபியின் வழிநடந்து
நப்செனும் இச்சையை
நசுக்கிக் கொன்று....
அன்பெனும் உரமிட்டு
பேதமெனும் களை நீக்கி
மனித நேயமெனும் நீர் வார்த்து........அதனால்
செழித்தோங்கும் மனிதமெனும்
விருட்சம் வளர்ப்போம்
வாருங்கள் தோழர்களே....!
வேர்களை மறந்த விழுதுகள்...!
*****************************************
விட்டில்கள் அநேகம் ஒன்று கூடி
விளக்குகளின் ஒளி அணைத்திட நினைத்ததாம்
மீன்களனைத்தும் ஒன்று கூடி
நீர்நிலைகளைப் புறக்கணிக்க நினைத்ததாம்
மேகங்களனைத்தும் ஒன்றிணைந்து
வானத்தை விலக்கிவைக்க நினைத்ததாம்
இவைபோலல்லவா உள்ளன நம்மில் சிலரின்
நபிகளை,நல்லோர்களை மறந்த சிந்தனைகள்
இவைபோலல்லவா உள்ளன நம்மில் சிலரின்
நபி புகழ்,நாதாக்கள் புகழ் மறைத்த போதனைகள்
மேற்கண்ட முயற்சிகள்தாம் கைகூடுமோ...?
மேதினியில் வாகைதான் அவை சூடுமோ...?
வறண்ட மனபூமியின் ஆழம் துளைத்துப் பரவி
வளமான மண்பூமிமேல் இஸ்லாமிய மரமாய்
உன்னை நிற்க வைத்தது இறைநேசரெனும் வேரடா...!
வேர்தனை மறைத்து மண்மீதினில்
விருட்சமாய் வளர்ந்த இறுமாப்பில்-அடியோடு
வேரைப் பிடுங்கிட நினைத்தால் வீழ்வாயடா....!
குர்ஆனும் ஹதீதும் நம் வழிகாட்டிகளென்றாய் நீ ..பின் ஏன்
குர்ஆனாகவே வாழ்ந்த எம் ஹபீபினைப் புகழ மறுக்கின்றாய் ...?
சன்மார்க்கக் கடலின் நுரையள்ளிக் குடித்துவிட்டே
சகலமும் அறிந்ததுபோல் ஆர்ப்பரிக்கும் உனக்கு
ஆன்மீகக் கடலின் ஆழ் முத்தெடுத்த
அடக்கப் பணிவுநிறை இறைநேசர்களெனும்
ஆன்றோரின் அறிவுப் புலமைகள்
அகமிய ஞானங்கள் எங்கனம் விளங்கும்....?
திரும்பிடுவீர் திசை மாறிச் சென்ற எம் சகோதரர்களே..!
விரும்பிடுவீர் மேன்மையான நற்செயல்கள் புரிந்திடவே...!
நம் ஈமான்கள் முற்றாய் பாதுகாக்கப் பட்டு
இகபர வாழ்வினில் இனிதாய் வாகை சூடிட
இஸ்லாமியராய் நம்மையெல்லாம் திகழச் செய்த
இறைநேசப் புனிதர்களின் வழி நடப்போம்...!
இவனைக் கண்டு கொள்ள(கொல்ல) அருள் புரிவாய் இறையோனே ...!
*****************************************
இறையோனை முற்றிலும் மறந்து
இறைத் தூதர் கட்டளைகள் துறந்து
இச்சையின் வழிப் போக்கில் பறந்து
இழியூர் தன்னில் நிற்கிறது நம் சமுதாயப் பருந்து
காரணம் ஆயிரம் கண்டது மண்ணும்- எனினும்
கருவியாய் இவன் ஒருவன் இலங்கியது மின்னும்
கல்புகளின் நேரோட்டம் இவனால் தான் பின்னும்
கலங்க வைத்தே தன்வசப்படுத்தும் கலையில்தான் இவன் கண்ணும்
இவன் சுய சரிதை இப்போதுதான் வந்தது வெளிச்சத்தில்
இதை நன்றாய்ப் பதிந்து கொள்வோம் நம் தலைச் சத்தில்
இகமும் பரமும் வெல்வோம் மொத்தத்தில்
இழிகுணங்கள் ஏதுமற்ற உளச் சுத்தத்தில்
இறை முனிவால் மண்ணகம் எட்டிய எத்தன் இவன்
இன்பச் சுவை காட்டி ஆதி பிதாவை வீழ்த்தியவன்
இறைத் தூதர்தம் மனச் சலனம் உண்டாக்கியவன்-எனினும்
இவரிடம் தோற்றுடைந்து பெருங்கூட்டமாய் உண்டாகியவன்
தட்டுப்பாடின்றி கிட்டும் கள்ளப் பணம்
தடுமாறி அலையும் கள்ள மனம்
தவறை மட்டும் உட்கொள்ளும் கபட குணம் -இவையனைத்தும்
தவறாமல் இவன் அமரும் சிம்மாசனம்
இவன் காலமாற்றத்தில் கொண்ட கோலங்கள் பலதாகும்
இணையமும் கணினியும் இவன் தூதர்களில் சிலதாகும்
இல்லம் நிறை தொலைக்காட்சிகள் இவன் படைக்கலன்களாம்
இன்னல் நிறை தொலை,அலைபேசிகள் இவன் அணிகலன்களாம்
பார்வையில் தடுமாறிட ஆபாசப் போர்வை விரிக்கிறான்
பண்புளோர் எண்ண நூற்களில் பொய்க் கயிறு திரிக்கிறான்
பவ்யமாய்ப் பேதைப் பெண்டிரை இவன் வழி கெடுக்கிறான்
பருவக் கிளர்ச்சியில் மயங்கிப் படி தாண்டிட வைக்கிறான்
இன்னும் முடியவில்லை இவன் சுய சரிதைக் கதைகள்
இன்றும் நிற்கவில்லை இழிந்த இவன் லீலைகள்
இப்லீஸ் எனும் பெயருள்ள சைத்தான் தான் இவன்-நம்
இரத்த நாளங்களிலும் உறங்காது ஓடிக் கொண்டிருக்கிறான்
விக்கிடும் இக்கட்டில் இப்பாவியின் பிடி சிக்கியுள்ள நாம்
விடுபடும் வழி இறையோனிடம் இறைஞ்சுவது தாம்
விண்ணோர் மண்ணோர் வணங்கிடும் இறையே !
விஞ்சி எம்மில் நிறைந்திருப்பதனைத்தும் குறையே
அஞ்சி உன்னிடமே அடைக்கலம் நாடுகிறோம்
அழுது கெஞ்சியே உன் அபயமும் தேடுகிறோம்
விரித்த எமது கரங்களில் உனதருள் நிறைத்திடுவாய்-நிரந்தரமாய்
வீணன் சைத்தானை விலங்குகளில் பிணைத்திடுவாய்
இணையில்லா மறையும்
கறையில்லா கனி நபியும்
இனிதே எமக்களித்த
துணையில்லா தூயோனே
எவர் எமைக் கைவிடினும்
எமக்கு என்றும் நீயே காப்பு....!
தமிழ் - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள் - கடையநல்லூர் முஹம்மத் காஸிம் கவிதைகள்
யா ரஸூலல்லாஹ் ﷺ
*********************************
சத்தியத்தின் உருவே...யா ரஸூலல்லாஹ்...!
சமத்துவத்தின் கருவே...யா ரஸூலல்லாஹ்...!
படைப்புகளின் குருவே...யா ரஸூலல்லாஹ்...!
பண்புயர் அதிசயத் தருவே...யா ரஸூலல்லாஹ்...!
அற்புதங்களின் ஊற்றே...யா ரஸூலல்லாஹ்...!
அருட்கொடையின் காற்றே...யா ரஸூலல்லாஹ்...!
மன்னவனின் ஒளியே..யா ரஸூலல்லாஹ்...!
மதித்தேகும் நல்வழியே...யா ரஸூலல்லாஹ்...!
முஸ்லீம்களின் இதயத் துடிப்பே...யா ரஸூலல்லாஹ்...!
மூமின்களின் நீங்காப் பிடிப்பே...யா ரஸூலல்லாஹ்...!
வியப்பான நற்பிறப்பே...யா ரஸூலல்லாஹ்...!
விழுமிய சிந்தனைத் திறப்பே...யா ரஸூலல்லாஹ்...!
தீமைகள் தீண்டா மனிதமே..யா ரஸூலல்லாஹ்...!
திருமறையாய் வாழ்ந்த புனிதமே...யா ரஸூலல்லாஹ்...!
மதீனாவாழ் நாயகமே...யா ரஸூலல்லாஹ்...!
மன்பதையின் தாயகமே...யா ரஸூலல்லாஹ்...!
மஃஹ்மூதரின் மாண்பினைப் போற்றிடுவோம்
*************************************************************
மக்கத்துச் சோலையில் மாணிக்கமாய் மலர்ந்து
மாந்தர்தம் உள்ளங்களில் மன்னராய் மகுடம் சூடி
மிஹ்ராஜ் இரவினில் மேலோனைக் கண்டு மீண்டு
மீசானில் கனமாக்கும் தொழுகையை நமக்களித்து
முன்னோரின் சிலை வணக்கம் முற்றிலும் ஒழித்து
மூப்பில்லா இறையோனின் ஒருமைப் பண்புணர்த்தி
மென்மை வாய்மை தகைமையுடன் தீனை
மேன்மையாய் மக்கள் உள்ளங்களில் வளரச் செய்து-உலகத்தின்
மையலில் கறை படிந்த இதயங்களையெல்லாம் -தன்
மொழியமுதம் கொண்டு சுத்தப் படுத்தி -இம்மையின்
மோகங்களை விட்டும் மக்களைத் தூரமாக்கி
மெளலாவாய் எம்மை நேர் வழி நடத்தும்- மதீனா வாழ்
மஃஹ்மூதரின் மாண்பினைப் போற்றிடுவோம்.
அல்லாஹீம்ம ஸல்லி அலா முஹம்ம தினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸல்லிம் தஸ்லீமா,,,,!
பள்ளிவாசல்...!
*******************
வாசல்..பள்ளிவாசல்..தொழும் பள்ளிவாசல்.!
ஏக வல்லோன் அவன் இல்லம் அது பள்ளிவாசல்
வணக்கத்தின் சிறப்பிடம் பள்ளிவாசல்-இறைப்
பிணைப்புக்கும் அதுவே தலை வாசல் ..!.
(வாசல்....பள்ளிவாசல்..)
கடமையானது ஐந்து வக்தடா...
மடமை கொண்டு நீ மறந்திடாதடா..!.
நேற்று வரப்போவதில்லை...
நாளை நம் கையில் இல்லை..!.
எல்லாம் அவன் கையில் தானே ...
எதுவும் அசையாது தானே .!...
வாழ்க்கை உண்டிங்கு வல்லோன் அருளாலே...
அவன் துணையில்லாமல் அவனியில் நாமேது ...?
வணங்கப் புறப்படு !....
(வாசல்....பள்ளிவாசல்..)
வணக்கம் என்பது சுவனச் சாவியாம்
பிணக்கம் கொண்டு நீ தொலைத்திடாதடா...!
நம்மைத் தொழ வைக்கும் முன்பே...
நாமும் இறை தொழுதல் மாண்பே ...!
முறையாய்த் தொழுவோர்க்கு எங்கும்
இறையின் அருளூற்று பொங்கும்...!
வல்லான் அருள்பெற்றால் வாழ்வில் பயமேது ...?
வழிபாடு இல்லாமல் வாழ்வில் ஜெயமேது...?
வணங்கப் புறப்படு !....
வாசல்...பள்ளிவாசல்...தொழும் பள்ளிவாசல்..!
ஏக வல்லோன் அவன் இல்லம் அது பள்ளிவாசல்
வணக்கத்தின் சிறப்பிடம் பள்ளிவாசல்-இறைப்
பிணைப்புக்கும் அதுவே தலை வாசல் ..!.