MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
(தாஜுல் ஸலவாத் என்று ஆன்றோர்களால் சிறப்பித்து ஓதப்பட்டு வரும் ஸலவாத்துக்களின் கிரீடமாய் விளங்கும் சிறப்பான ஸலவாத்தின் மொழி ஆக்கமாக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது)
விதி மாறும்
அல்லாஹ் ! எங்கள் அருளாளா !
அருமைத் தலைவர் நபிமீது
நல்லார் ஓதும் சலவாத்தை
நாளும் பொழிந்தே அருளாயோ ?
எங்கள் நபிகள் நாயகம்தான்
எழில் மெய்ஞான மணிமகுடம் !
திங்கள் நபிகள் கைகளிலே
திகழும் கொடியே புகழாகும் !
வானப் பறவை புராக்கினையும்
வசமாய் ஏற்றுக் கொண்டவராம் !
வானம் ஏறி மி- ராஜில்
வள்ளல் உன்னைக் கண்டவராம் !
நோய்கள்சிரமம் நொம்பலங்கள்
நொடியில் தீர்க்கும் மருந்தவராம் !
ஆய்வில் அவரின் திருநாமம்
அனைத்து வேதங் களிலுண்டாம் !
தலைவிதி எழுதிய பட்டோலை
தன்னிலும் அவர்கள் பெயருண்டாம் !
தலைவா ! உந்தன் கைஎழுதும்
தமிழ் - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள் - P. M. கமால் கவிதைகள்
சிந்தாமல் அருள்புரிவாய்
ஒப்புமை இல்லாத ஓரிறை யே!யெனது
உள்ளத்தில் வந் தமர்வாய் !
உப்புநீர்க் கடலிந்த உலகத்தில் மீனாக
உருவாக எனக் கருள்வாய் !
தப்பிநான் சாத்தானின் சதிவலை வீழாமல்
தயவுடன் எனக் கருள்வாய் !
அப்பிடும் இருளழுக் கைவெளுத் துளத்தினில்
அருளொளி விளக்கருள்வாய் !
மாசிலா எண்ணமும் மருவிலாச் செயலுமென்
மனத்தினில் தந்தருள்வாய் !
தூசிஇவ் வுலகமென் றெண்ணிடும் பக்குவம்
துய்யனே எனக்கருள்வாய் !
ஆசிகள் தந்தெனை ஆதரித் திடும்நபி
ஆதர வெனக் கருள்வாய் !
பாலையில் விதைத்திடும் பாவிநான் என்வயல்
பாசனத் திற்கருள்வாய் !
ஆலையில் கரும்புநான் அகப்படும் வேளையில்
ஆதரித் தேயருள்வாய் !
சிறையென இம்மையை நிறைவுடன் பழகிடும்
சிந்தையை எனக்கருள்வாய் !
விரை தரும் சந்தனக் கட்டையாய் வாழ்வினை
விரும்பிடக் கருள்புரிவாய் !
மூச்செனும் கயிற்றினில் மூலவ னேயுனை
மணியெனக் கோர்த் தருள்வாய் !
பேச்செலாம் உன்புகழ் பேசிட நாவினில்
மொழியாக வந்தருள்வாய் !
கூச்சலும் குழப்பமும் கொண்டஇவ் வுலகினில்
மௌனமாம் மொழியருள்வாய் !
மேய்ச்சலில் ஆடுநான் மேய்ப்பவன் நீ;பசும்
புல்வெளி தந்தருள்வாய் !
பாசிகள் பாவமாய் நிறைந்த இப்பூமியில்
பாதங்கள் காத்தருள்வாய் !
ஆசிகள் தந்தெனக் கருள்புரி வாய்நிதம்
அகக்கண் திறந்தருள்வாய் !
நட்பினைப் பகையினை நான்பிரித் தறிந்திட
நல்லுளம் எனக் கருள்வாய் !
மட்குடம் நீர்க்குமிழ் மனிதவாழ்க் கையிது
மகத்துவம் பெற வருள்வாய் !
தேர்வினை இலகுவாய் ஆக்கிஎன் மண்ணறைத்
திசை யொளி பெற யருள்வாய் !
நேர்வினை எதிர்வினை யாவும் உன் கைகளில்
நோவினை தீர்த் தருள்வாய் !
சத்திரம் இங்குநான் தங்கிடும் வேளையில்
சதுர்மறை உணவளிப்பாய் !
பத்திர மாகவுன் பக்கம் நான்வருகையில்
பரவிடும் சுகமளிப்பாய் !
இரத்தநா ளங்களைக் கைகளாய் ஆக்கி உன்
இரட்சிப்பை வேண்டுகின்றேன் !
சிரத்தையுன் காலடி சேர்த்துனை வேண்டினேன்
சிந்தாம லருள் புரிவாய் !
மதுவும் அதிலொன்று
மது -
மனிதனைக் குடிக்கின்ற
தற்கொலைத் திரவம் !
அரசுக்கு
அள்ளித் தருகின்ற
அமுத சுரபி !
விலையில்லா அரிசியும்
வீட்டு உபயோகப் பொருளும்
இந்த
விஷ நீர்ப் பாசனத்தில்
விளைந்த அறுவடைகள் !
மது-
இன்று
காந்தி மகானின்
கல்லறைத் தீர்த்தங்கள் !
துப்பாக்கி வெடிகுண்டு
துளைத்துவிடும் பீரங்கி
கொத்துக் குண்டுகள்
கொடிய விஷவாயு
அணுகுண்டு போர்
ஆயுதங்கள் இல்லாமல்
மனிதனை மண்ணுக்குள்
அனுப்புகின்ற
திரவ ஆயுதம் !
குடலைப் புண்ணாக்கி
உடலைச் சீரழித்து
உயிர் த்திரவம் குடிக்கின்ற
விஷத் திரவம் !
பருவ விடலைகளை
உருவ நிறம்மாற்றி
பஞ்சை பராரிகளாய்
ஆக்குகின்ற
ஆலகால விஷம் !
இந்த நெருப்பு
குடிப்பவன் தலையில்
அரசே வைக்கும்
கொள்ளிக் கட்டை !
மது உள்ளே போனால்
மதி வெளியே போகும் !
குடிப்பழக்கமுள்ள
ஆறறிவு மனிதனுக்கு
ஓரறிவு குறைகிறது
ஆயுளும் அதனோடு
கைகோர்க்கின்றது !
மது
இதைக் குடிப்பவன் மட்டுமல்ல
அவன்
வாழ்க்கையுமல்லவா
தள்ளாடுகிறது ?
மது-
இந்தக்
கண்ணாடியை அணிபவனுக்கு
தாய்க்கும் தாரத்திற்கும்
வேறுபாடு தெரிவதில்லை !
டாஸ்மாக் வெளிச்சத்தில்
இந்தக் குடிகார விட்டில்கள்
இறகுகளை மட்டுமல்ல
உயிர்களையும் இழக்கின்றன !
குடும்பக் கட்டுப்பாடு
பிரச்சாரத் தோல்வி
மதுக்கடைகளில்
மகோன்னத வெற்றி !
மதுவால்
செத்துமடியும்
குடிகாரர்களுக்காக
கண்ணீர் சிந்தாதீர்கள் !
உங்கள் கண்ணீர்த் துளிகள்
அவர்களின்
காய்ந்துபோன கல்லறைகளை
ஈரப்படுத்தி விடலாம் !
மது
வாழ்க்கையை மட்டுமல்ல
நாட்டையும் கூட
நிர்வாண மாக்கிவிடும் !
அரசுக்கு வேண்டியது
வருமானம் !
மக்களே !
உங்களுக்கு
எங்கே போனது தன்மானம் ?
தன்மானமில்லாத
அரசியல்வாதிகள்
வருமானத்திற்காக
"எதுவும்" செய்வார்கள் !
மதுவும் அதிலொன்று !
பள்ளிவாசல்
பள்ளிவாசல்-
பக்திவிவ சாயிகளின்
பாசன பூமியிது !
தொழுவது அங்கே
உழுவது ஆகும் !
கண்ணீர் சிந்தி
தண்ணீர் பாய்ச்சி
கல்பையே விதையாய்
கருத்துடன் ஊன்றி
விவசாயத்தை
இங்கேதான்
விருத்தி செய்கிறோம் !
இம்மையில் செய்யும்
விவசாயத்திற்கு
மறுமையில் தான்
மகசூல் கிடைக்கும் !
பொறுமையுடனே
விவசா யத்தை
பொறுப்புடன் செய்தால்
மறுமையில் அறுவடை
ஆதாயத்தை
அள்ளிக் கொள்ளலாம் !
பள்ளிவாசல்-
பரமனுக்குப் பக்தன்
எழுதுகின்ற
காதல் கடிதம்
இந்த
அஞ்சலகத்தில் தான்
முத்திரை இடப்படுகிறது !
நெற்றியில் விரலால்
தொட்டுப் பார்த்தால்
முத்திரை யின்முக
வரிகள் தெரியும் !
இது
பள்ளிவாசல் மட்டுமல்ல !
பயிலும் பள்ளிக்
கூடமும் இதுதான் !
தலைவனுக்குத்
தலை பணிந்தொழுகும்
தத்துவம் இங்கே
போதிக்கப் படுகிறது !
ஞானம் வேண்டுமென்றால்
போதிமரம் நோக்கிப்
போகவேண்டாம்; இந்தப்
பள்ளி வாசலே
பக்தியை ஊட்டும் !
பக்தியும் புத்தியும்
இந்தப்
பட்டறையில் தான்
கூர்தீட்டப் படுகிறது !
வெறுமை மனது
ஒருமை அடைந்து
பெருமை அடைவது
இந்தப்
பள்ளிகளில் தான் !
ஆதியின் ஜோதியை
அடையாளம் காண்பதற்கு
பள்ளி வாசல்கள்
பயன்படு கின்றன !
பள்ளிவாசல்-
மூமின்களுக்கு
ஐவேளை புகுந்து
வெளிவருகின்ற
அற்புத "ஹிரா"க் குகை !
அங்கசுத்தி எனபது
இங்கே
அகத்தூய்மை; தொழுகை
ஆன்மா குளிக்கும்
அற்புதத் தடாகம் !
குப்பா என்பது
தொப்பி யானால்
மினாராக்கள் இங்கே
அஹதென் றுயரும்
அத்தஹயாத் விரல்கள் !
பள்ளிவாசல்-
சமத்துவம் இங்கே
சமச்சீர் கல்வி !
சகோ தரத்துவம்
சங்கமிக்கும் அருட்கடல் !
பள்ளிவாசல்-
சாத்தான் எரிந்து
சாம்பல் ஆகும்
நெருப்புக் குண்டம் !
நமக்கோ-
சுவனத்துப் பூந்தென்றல்
சுற்றிவரும் பூந்தோட்டம் !
செல்வப் பெருமை
சேரும் கர்வம்
எல்லாம்
இங்கே நாம்
காலெடுத்து வைத்தவுடன்
காலொடிந்து போய்விடும் !
ஆன்ம இருட்டுச்
சுவர்களுக் கிங்கே
வெளிச்ச வெள்ளை
அடிக்கப் படுகிறது !
சமுதாயப் பந்தியில்
பரிமாறப் படுவதற்கு
சகோதரத்துவ விருந்து
இங்கேதான்
சமைக்கப் படுகிறது !
தொழுகை இங்கே
தூங்கா திருக்க
பாங்கின் ஒலிதான்
தாலாட்டா ?
பள்ளி வாசல்தான்
தொட்டிலா ?
ஆன்மக் கன்னிக்கு
ஐவேளை புத்தாடை
அணிவிக்கப் படுவது
இந்த அரங்கில்தான் !
அண்ணல் நபி காலத்தில்
அரசாங்கம் இங்கேதான்
அரங்கேற்றம் ஆனது !
இப்போதோ
அறம் பேணுமிடத்தில்
புறம் பேசப்படுகிறது !
முதுமை
முதுமை-
இள "மை" வற்றிய
எழுதுகோல் !
காலம் மென்று
துப்பிய குப்பை !
வாழ்க்கைத் தொழுகையின்
"அத்தஹயாத்" இருப்பு !
அன்று-
குடும்பத் தேர்தலின்
தலைமைத் தேர்தல்
அதிகாரி !
இன்று-
வீட்டுத் தேர்தலில்
செல்லாத ஓட்டு !
முதுமை-
இயலாமை புகுந்த
இருட்டு வீடு !
நரைதான் அங்கே
நூலாம்படையோ ?
முதுமை-
வாழ்க்கை ஒளியில்
சிறகிழந்த ஈசல் !
மழை நின்ற பிறகு
கிளை விடும் தூவானம் !
முதுமை-
ஞானம் பிறக்கும்
கருவறை !
ஆரோக்கியத்தின்
கல்லறையும் அது தான் !
இந்த-
அனுபவ மரத்தில்தான்
"பழ" மொழிகள்
கனிகின்றன !
முதுமை-
கடந்த காலப்
பழைய திரைப்படம்
முகம் காட்டும்
திரையரங்கம் !
ஆசைகளின்
சிறையரங்கமும்
இது தான் !
முதுமை-
காலன் எழுதும்
கையெழுத்து !
சுற்றித் தேய்ந்த
நிமிட முள் !
கற்களைக் கடித்துத்
துப்பிய பற்கள்
பஞ்சுமிட்டாய் கடிக்கப்
பலம் இழந்து போனது !
வாழ்க்கைப் பயணத்தில்
தீ மிதித்த கால்களுக்கு
"சில" பிள்ளைகள்
செருப்பாகிறார்கள் -
பலரோ
நெருப்பாகிறார்கள் !
துள்ளாட்டம் போட்ட
இளமை
தள்ளாட்டம் போடும்போது
காலன் அங்கே
கைகொட்டிச் சிரிக்கிறான் !
உயிரின் பல்லக்கில்
உட்கார்ந்து இருக்கின்ற
மரணம்
முதுமையைக் கண்டு
முகம் மலர்கின்றது !
ஆயுளைக் களவாட
ஆயத்த தருணம்
இதுவென்று !
தேகத்து அணையில்
தேக்கிவைத்த உயிர்நீர்
வயது மதகு
வழியாக ஓடி
இதோ-
வற்றிக் கொண்டிருக்கிறது !
உடலை வரவேற்க
மண்கடல் கைநீட்டிக்
காத்திருக் கின்றது !
முதுமை-
செப்பனிட முடியாத
சிறுவீடு ; உடற்சுவற்றில்
ஒப்பனைகள் செய்தாலும்
உதிரநீர் வற்றியதால்
காரை பெயர்ந்து
காட்டிக் கொடுத்துவிடும் !
முதுமை-
யாருமே விரும்பாத
இறைவனின் அருட்கொடை !
முதுமை-
இறுதித் தேர்வு
எழுதும் நேரம் !
வாழ்க்கையின்
மாலைப் பொழுது !
இரவு எப்போது வரும் ?
இறைவனுக்கு மட்டுமே
தெரிந்த
"பரம(ன்) இரகசியம் !
முஅத்தின்கள்
ஊருக்கு இளைத்த
உழைப்பாளி இனம்நாங்கள் !
பாருக்குள் வீசுகின்ற
பசுந்தென்ற லைநாங்கள்
பாங்கின் ஒலியால்
பரிசுத்தப் படுத்துகின்றோம் !
நாங்கள்-
எல்லாப் பள்ளிகளிலும்
எடுப்பார் கைப் பிள்ளைகள் !
கந்தலைக் கசக்கி
உடுத்தினாலும் நாங்கள்
ஆகாய நிர்வாணத்திற்கு
ஆடை நெய்கிறோம் -
ஆமாம் !
பாங்கொலிப் பட்டாடையை
குரல்வளைத் தறியில்
நெய்கின்ற நெசவாளி நாங்கள் !
பிலாலின் வாரிசுகள்
என்பதாலோ நாங்கள்
அடிமைகளாகவே
ஆக்கப்பட்டுவிட்டோம் !
வரலாற்றில் எங்களுக்கு
வரவேற்பு இருந்தாலும்
வாழ்க்கை வசதிகளில்
வறுமைபரி சானது !
"வறுமையே எனக்குப்
பெருமை"என் றோதிய
வள்ளல் நபிகளின்
வாரிசுகள் நாங்கள்தான் !
தலைவர் செயலாளர்
தாளாளர் என்று
ஏராளமானோர்
இருந்தாலும் பள்ளியின்
வரவேற்பு எங்கள்கை
வசத்தில் உள்ளது !
நாங்கள்தான் உங்களை
நாயனைத் தொழுவதற்கு
அழைத்து வரவேற்கும்
அலுவலைச் செய்கின்றோம் !
கழிவறையை நாங்கள்
கழுவினாலும் அதனை
இழிதொழிலாக எண்ணுவதில்லை !
எங்கள் கீழ்நிலையை
எடுத்துச் சொல்லிவிட்டால்
சித்திரமும் கூடச்
சிந்தும் கண்ணீரை !
பள்ளிவாசலில் எங்களுக்கு
முத்திரை இடப்பட்ட
முதல் வரிசை; என்றாலும்
பள்ளி நிர்வாகியைப்
பார்க்க நாங்கள் போனால்
பத்துப்பேர் வாசல்
படியில் நின்றாலும்
கடைசி அழைப்புத்தான்
கைகொடுக்கும் எங்களுக்கு !
போதாது சம்பளம்
என்றாலும் எங்களின்
போதாத காலத்தை
பொறுப்போடு எண்ணி
கஷ்டத்துடன்தான்
காலம் கழிக்கின்றோம் !
முஅத்தின்கள் எங்களை
"மோதினார்" என்று
இறந்தகாலச் சொல்லில்
ஏனழைக் கின்றீர்கள் ?
சில நேரம்-
குணக்கேடர் பணக்காரர்
குடிகாரர் சிலரோடு
மோதுவ தால்தான்
"மோதினார்" என்றீர்களோ ?
நாங்கள்
அல்லாஹ்வின் வீட்டு
அழைப்பொலிக் காரர்கள் !
இருந்தாலும் சிலநேரம்
பள்ளி நிர்வாகப்
பணக்காரப் புள்ளிகளின்
வீட்டு வேலைக்
காரர்களும் நாங்கள்தான் !
காற்றைப் பாங்கொலியால்
கழுவித் துடைக்கும் நாங்கள்
பள்ளி வாசலையும்
பக்குவமாய்த் துடைக்கின்றோம் !
வட்டி மூஸாக்கள்
வாரி வழங்காத
கருமிக் கிருமிகள்
கள்ளுண்ணும் பேதைகள்
ஒருநாளும் தொழுகைக்கு
ஓடிவா ராதவர்கள்
இப்படிச் சிலபேர்
இருந்தால் நிர்வாகம்
எப்படிச் சீராகும் ?
எங்கள் நிலை உயரும் ?
நேர்மை தவறாத
நிறைவான மூ மீன்கள்
பள்ளி நிர்வாகப்
புள்ளிகளாய் ஆகிவிட்டால்
எங்களின் நிலைமாறும் !
இறைவா அருள் புரிவாய் !
இறைவா ! எங்களை
ஜக்காத்து சதக்கா
வாங்கும் நிலைமாற்றி
கொடுக்கும் நிலைக்கு
கொண்டுவந்து நிறுத்து !
அப்போதும் எங்கள்பணி
ஆண்டவா !உன்வீட்டு
முற்றத்தில் தொடருதற்கு
முழுதும் உதவிசெய் !
பாங்கு
பாங்கு -
ஆன்மாவை விழிப்பூட்டும்
அற்புதத் தாலாட்டு !
கணந்தோறும் உலகத்தின்
காது திறக்கும் சாவி !
காற்றில் கரைந்து
உயிரில் நிறையும்
இந்த ஒலிதான்
மனித மனக் கதவுகளைத்
தட்டுகின்ற விரல் !
அல்லாஹ் பெரியவன்
அவனே தொழ உரியவன்
அவன்தூதர் முஹம்மதென்று
அறைந்து பாடும் சங்கீதம் !
தோல்விக் குழிகளுக்குள்
துவண்டு கிடப்பவரை
வெற்றியின் பக்கம்
விரைந்தழைக்கும் அழைப்போசை !
இந்த
ஒலிக்கயிறுதான்
மனிதர்களைத்
தடம் மாறிப் போகாமல்
வடம்போட் டிழுக்கிறது !
மரணத்தின் ஒத்திகைத்
தூளியில் கண்மூடி
உறங்கிக் கிடப்பவரை
உயித்தெழச் செய்கின்ற
விழிப்பான தாலாட்டு
விழிப்பூட்டைத் திறக்கின்ற
விந்தையான சாவி இது !
ஆகிரத்தை நோக்கி
ஆன்மா பயணப்பட
இந்த
ஆகாய அழைப்பொலிதான்
வரவேற்புக் கவிதை
வாசிக் கின்றது !
அகப் பையில்
அழுக்காகச் சேர்ந்திருக்கும்
சோம்பல் சாம்பலைச்
சுரண்டி எடுக்கின்ற
அகப்பை இந்த
அ ழைப்பொலி அல்லவா ?
அல்லாஹ்வின் திருப்பெயரை
அவன்தூதர் நபிபுகழை
கல்லாத மனிதர்களின்
காது மடல் இதழ்களில்
செந்தேனாய்ப் பாய்ச்சுகின்ற
சீரொலி இதுவன்றோ ?
பள்ளியைப் படர்வெளியைப்
படுக்கின்ற சத்திரமாய்
எண்ணி உறங்குகின்ற
இபுலீசை விரட்டுகின்ற
இடிமுழக்கம் அல்லவா
இந்தப் பாங்கொலி ?
பாங்கு-
பள்ளிவாசலில் மட்டுமல்ல
பரந்த வெளிகளிலும்
படர்ந்த பாசிகளை -
பாவத் தூசிகளை
துடைத்து எறிகின்ற
ஒட்டடைக் கோல் !
இந்த ஒலி -
உயரத்தில் எழும்பி
உலகத்தில் பரவும்போது
இடியின் நாவுகளிலும்
இஸ்லாத்தின் சுவைமணக்கும் !
மின்னல்களும்கூடத்
தங்கள்
மேனியைக் கூர்தீட்டும் !
மலைகளின் முகடுகளில்
மார்க்கத்தின் மணம்வீசும் !
மழைத் துளிகளிலோ
சுவனம் சொட்டுவிடும் !
பாங்கு-
சகோதரத்துவ
சமத்துவ
சங்கமிப்பின் பேரழைப்பு !
உடல் நதிகள்
ஒருவனின் திருவீட்டு
ஒப்பற்ற பெருங்கடலில்
சங்கமிக்க மதகுடைக்கும்
சங்க நாதம் !
இந்த
ஒலி வெள்ளத்தால்
காற்றும்கூடத் தன்னைக்
கழுவிக் கொள்கிறது !
பாங்கு -
இது
ஒலிக்கத் துவங்கிய
காலம் முதல்
உலகம் முடியும்
காலம்வரை
பூமியை மட்டுமல்ல
வானத்தையும்தன்
வசப்படுத்தி வைத்திருக்கும் !
பிலால்தான் பாங்கின்
பிதாமகன் !அவரின்
குரல் தொழிலைத் தங்களின்
குலத்தொழிலாய்க் கொண்டவர்களை
முஅத்தின் என்று நாம்
முத்திரை குத்துகிறோம் !
பாவம் ! அவர்களைநாம்
பிலாலின் வாரிசுகளாய்ப்
பிரியம் கொள்ளாமல்
பிச்சைக்காரர்களாகவே
பேத ப் படுத்துகிறோம் !
பாங்கின் ஒலியோடு
அதனால் அவரகளின்
பரிதாபக் குரலும்
சேர்ந்தே ஒலிக்கிறது !