MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
கல்பு (உள்ளம் - இருதயம்) என்றால் என்ன?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாத்தின் பார்வையில் கல்பு எனும் (உள்ளம் - இருதயம்) என்றால் என்ன?
♣ கல்பு என்றால் என்ன?
அரபியில் “கல்பு” என்று குர்ஆனில் பல இடங்களில் இருக்கிறது. அதை இடத்திற்கு ஏற்றவாறு இரண்டு பதத்தில் தமிழில் சூபியாக்களால் அறிஞர்களால் மொழி பெயர்க்கப்படுகின்றது.
முதலாவது: நெஞ்சுக்குள் இடது பக்கத்தில் இருக்கும் மாங்காய் வடிவிலான மாமிசத் துண்டமாகிய இருதயம், அதன் நடுவில் சிறிது வெற்றிடமும் அதில் கருநிற இரத்தமும் காணப்படும் இந்த இதயம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இறந்து விட்ட மைய்யித்துகளுக்கும் கூட உண்டு. ஆனால் முஃமினுடைய கல்பு அல்லாஹ்வினுடைய அர்ஷ் என்ற அளவிற்கு ஹதீஸில் குறிக்கப்படுகின்றது.
இரண்டாவது: ஜோதி மயமாகிய ஓர் ஆத்மீக தத்துவ நுட்பமாகிய உள்ளம். இந்த இரண்டுக்கும் ஒருவித காந்த சம்பந்தமுண்டு. ஆத்மீக கல்பாகிய இரண்டாவது கல்பையே அகம்- உள்ளம் என்றழைக்கிறோம். இந்த அகம்தான் பகுத்தறிவுள்ள மனிதனின் உண்மை ரகசிய நுட்பமாய் இருக்கிறது. திருக்குர்ஆனில் கல்பு என்று சொல்லப்பட்டு இருப்பதெல்லாம் இந்த அகம் என்ற ஹகீகதே இன்சானாகிய நுட்பத்தைக் குறிப்பதே. இந்த அகம்தான் மனிதனில் பார்ப்பதும், கேட்பதும், பேசுவதும், வஸ்துக்களின் உண்மையை விளக்கி அறிவதுமாகும்.
அந்த அடிப்படையில் முஃம்னிடைய கல்பு அல்லாஹ்வுனுடைய அர்ஷ் என்பதன் விளக்கத்தின் சுருக்கம் என்னவென்றால் முஃமினுடைய இதயத்தை இயங்கச் செய்கின்ற ரூஹானது அல்லாஹ்வின் ஆதிக்கம் நடைபெறுகிற இடமாகும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் ஆதிக்கம் இடம் பெற்றவர்கள் சம்பூர்ண முஃமின்களாக இருப்பார்கள்.
அவர்கள் நின்றாலும், அமர்ந்தாலும், குனிந்தாலும், நிமிர்ந்தாலும், உண்டாலும், பருகினாலும், உறங்கினாலும், விழித்திருந்தாலும் அவர்களின் இதயம் சார்ந்த சிந்தனை ஓட்டம் அல்லாஹ்வை பற்றியதாகவே இருக்கும். அவர்களின் பார்வை, கேள்வி, பேச்சு, நடை, செயல் அனைத்துமே அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்தும் என்பதை புரிந்து கொண்டால் தான் மேலே கூறப்பட்ட ஹதீஸின் கருத்து புலனாகும்.
♦ ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 8:24)
♣ மனித உள்ளத்தில் ஏழு பாகங்கள் உள்ளது
1) தபக்கஹூத்துஸ் தூர்
2) தபக்கத்துல் கல்பி
3) தபக்கத்துஷ் ஷிகாப்
4) தபக்கத்துல் ஃபுஆத்
5) தபக்கத்து ஹூப்பத்துல் கல்லி
6) இல்முல்லதுன்னி
7) தபக்கத்த
♣ உயிரோட்டமுடைய கல்பும் உயிரற்ற கல்பும்
மனிதனுடைய உடல் சம்பந்தமாக என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றதோ, அவைகள் கல்புக்கும் இதயத்துக்கும் உரியதாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். உடலைப் பேணுவது போன்று உள்ளத்தைப் பேண வேண்டும். உடல் கெட்டால் பெரிய நஷ்டம் வருவதில்லை. உள்ளம் கெட்டால் மிகப்பெரிய நஷ்டத்திற்குள்ளாவோம்.
திக்ர் எந்தளவுக்கு உயிரோட்டத்துடன் செயல்படுகிறதோ அதற்குத்தக்க உயிர்ப்புடன் நிலையுள்ள கல்பாக மாறிவிடும், மூமீன்களிடம் (ஸஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள், சூபியாக்கள்) இறந்த கல்பு இருக்கக்கூடாது. இருக்க முடியாது.
இயங்கும் உயிரோட்டச் சக்தி சிலருக்கு அதிகமாகவும் பலருக்கு குறைவாகவும் வேறுபட்டிருக்கலாம். அல்லாஹ்வுடைய திக்ர் சார்ந்து இயங்கும் உயிரோட்டமுடைய கல்பு, உயிரற்ற கல்பு. திக்ர் ஏற்கப்பட்டு நிரம்பியிருத்தல், குறைவாக விருத்தல் செயல்பாடுகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
உடலுக்கு நோய், சுகம் இரண்டும் உண்டு. அது போன்ற நிலைதான் கல்புக்கும் . மனக்கலக்கமற்று தெளிவான நிலையில் கல்பு இருந்தால் அது நோயற்ற கல்பு. கோபம், தாபம், தீமை, கேடு, தீயகுணம் கல்பில் குடி கொண்டிருந்தால் நோய்வாய்ப்பட்ட கல்பு.
அதற்கு மருந்து, அல்லாஹ் எதைச் சொன்னானே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், வலிமார்கள் சூபியாக்கள், காமிலான ஷெகுமார்கள் எதைச் செய்யச் சொன்னார்களோ அதை கடைப்பிடிக்கப்பட்டால் கல்பு நோய் நீங்கும். உடல் விழிப்புடன் இயங்குவது போல் கல்பு விழிப்புக்கு மருந்து தஸ்கியதுன் நப்ஸ் எனும் உள்ளத்தை தூய்மைப்படுத்துவது தான்.
மேலும் அகச் சுத்தியுடைய முஃமீன்களின் கல்பு அழிவதில்லை. அவர்களின் ஞான ஜோதி சிறிதும் குன்றாமல் மரணத்திற்குப் பின்னும் அவர்களுடன் நிலைத்திருக்கும். இதுவே நித்திய வாழ்வு என்று சொல்லப்படுகிறது. இறைவனை முடுகுதல், அவனை அறிதல், அவன் கோட்பாடுகளின்படி செயலாற்றுதல் முதலிய அனுஷ்டானங்கள் யாவும் அகத்தின் செயல்கள்தாம். மற்ற உறுப்புகள் அதற்கு கீழ்படிந்து செயல்படும் தொண்டர்களே.
ஏவல், விலக்கல் என்னும் கட்டளைகளைக் கொண்டு ஏவப்பட்டதானது இந்த அகம்- உள்ளம் தான். அல்லாஹ் அல்லாத்ததை விட்டும் காக்கப்பட்ட அகமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். அல்லாஹ் அல்லாத்ததின் பக்கம் கொழுகுதல் உள்ள அகத்துக்கு இறைவனை விட்டும் திரை போடப்படும். இந்த திரை போடப்பட்ட அகத்துக்கே (மறுமையில்) கேள்வி கணக்குகள் உண்டு.
♣ மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் காரணம் என்ன?
மனிதன் உயர்வதற்கும் அவன் தாழ்வதற்கும் உள்ளம்தான் காரணம்.நேர்மையான உள்ளம் கொண்டவன் நேரிய வழியில் செல்கின்றான், நற்பண்புகளையும் உயர்ந்த குணங்களையும் தன்னுல் உண்டாக்கி கொள்கின்றான், நல்ல காரியங்களை விரும்பிச் செய்கின்றான். தீய உள்ளம் கொண்டவன் நேர் எதிரானவன், அவனிடம் உயர் குணங்களையும் நற்பண்புளையும் எதிர்பார்க்க முடியாது, நேரிய வழியும் அதன் உயர்வும் அவனுக்கு தெரியாது.
ஆனால் வலிமார்கள், சூபியாக்கள், காமிலான ஷெகுமார்கள், அறிஞர்கள் நற்குணம் பெற்றிருந்தார்கள். திருத்தூதர்கள் அனைவரும் உயர்ந்த பண்புடையவர்களே. அவர்களின் உள்ளங்கள் நீரேடையை விடத் தெளிவானவை. அவற்றில் அழுக்குக்கு இடமில்லை. இத்தகைய குணங்களுக்கெள்ளலாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிலைக்களனாக விளங்கினார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களைப் பின்பற்றி நடந்த மேதைகள்,சட்ட நிபுணர்கள், உத்தமர்கள் அனைவருமே குணத்தின் குன்றுகளாகத் திகழ்ந்தனர். பன்பின் சிகரங்களாக விளங்கினார்கள். ஒரு மனிதனை உயர்த்துவதும் தாழ்த்துவதும் அவனுடைய உள்ளத்தில் ஏற்படும் பண்புதான்.
இன்னும் சொல்வதானால் நற்பண்புகளைப் பெற்றிருப்பது மார்க்கத்தில் மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறலாம். இந்த நற்பண்புகளை உண்டாக்கி கொள்வதற்குத்தான் இறையசச்ம் கொண்டவர்கள் அல்லும் பகலும் இறைவணக்கம் புறிந்தார்கள்.இறையன்பு கொண்டவர்கள் மனப்பயிற்சியில் மூழ்கினார்கள். ஆம் மனப்பயிற்சியின் உதவியால் உள்ளத்தில் நற்குயங்களையும் உயர் பண்புகளையும் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்று அவர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்தார்கள் வெற்றி பெற்றார்கள்.
தீய குணம் மனிதனின் விரோதி. உயிரைக் குடிக்கும் கொடிய விஷத்திற்கு அதை ஒப்பிடலாம். தீய பண்புடையவன் அதன் கொடிய நச்சுப் பல்லுக்கு இரையாகியே தீர வேண்டும். தீய குணம் இறைவனின் அருளுக்கு அப்பாற்பட்டது. நற்பண்பு சுவனப்பாதைக்கு வாயிலாக இருப்பது போல் தீய பண்பு நரகப்பாதைக்கு வாயிலாக இருக்கின்றது. தீய குணங்கள் உள்ளத்தில் ஏற்படுவது ஒரு விதமான மனோ வியாதிகள் என்று குறிப்பிடலாம்.ஆனால் சரீர வியாதியை விட கொடியது.ஏனெனில் இந்த வியாதி முற்றிப் போகும் போது நிரந்தரமான மறுமை வாழ்கையே பழாக்கி விடுகின்றது.
எந்த உள்ளமும் முழுக்க முழுக்க வியாதியற்ற நிலையில் இருக்க முடியாது. ஒவ்வொர் உள்ளமும் ஏதாவதொரு வியாதியை தன்னுள் வைத்துக் கொண்டுதான் இருக்கும். அதை அசட்டை செய்யக் கூடாது. நன்கு கவனிக்க வேண்டும். இல்லையேல் மிகவும் சாதாரணமாயிருந்த மனோ வியாதி நாளடைவில் வலுவேறிப் போய் வெளிப்பட ஆரம்பித்து விடும்.
இப்படி அது பகிரங்கமாகும் போது அதற்குரிய காரணங்களையும் அதை அகற்றுவதற்குரிய மார்க்கத்தையும், மார்க் அறிஞர்கள், ஞானிகளான காமிலான ஷெய்குமார்களிடம் சென்று பைஅத் பெற வேண்டிய அவசியம் உண்டாகின்றது, இதற்குப் பிறகு அவர்கள் மூலமாக உள்ளத்தில் ஏற்றப்பட்ட மனோ வியாதிக்குச் சிகிச்சை செய்யப்படும். அந்த அடிப்படையில் உள்ளத்தில் ஏற்படும் மனோ வியாதிகளையும் அவற்றை அகற்வதற்குரிய வழிகளையும், மனோ வியாதியின் போது வெளிப்படும் அடயாளங்கள் முதலியவற்றை சூபியாக்கள், காமிலான ஷெய்குமார்கள், மார்க்கம் படித்த அனுபவமுள்ள மூத்த உலமாக்களிடம் தேடிப்படிப்பது கட்டாயக் கடமையாகும்.
♦ "மேலும் அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தமது இறைவனின் ஒளியில் இருக்கிறார். (ஆனால்) அல்லாஹ்வுடைய நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இத்தகையோர் பகிரங்கமான வழி கேட்டில் இருக்கின்றனர்". (அல்குர்ஆன் 39-22)
♦ மாநபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் "அல்லாஹும்ம யாமுகல்லிபல் குலூப் ஃதப்பித் கல்பீ அலா தீனிக்க இறைவா! உள்ளங்களை புரட்டுபவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீது நிலைப்படுத்துவாயாக என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே உள்ளங்கள் புரளுமா?என்று கேட்டேன். அதற்கு ஆம் அவன் நினைத்தால் அவற்றை நேர்த்தியாக்குவான். அவன் நினைத்தால் அவற்றை பிறழச் செய்து விடுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்: உம்மு சல்மா ரலியல்லாஹு அன்ஹா
நூல்: முஸ்னத் அஹமத், திர்மிதி 2226
♦(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள், மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்ற, அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் : 13:28)
அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் அமைதி பெற்ற உள்ளம் என்பது அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளிலிருந்தும் உள்ளவையாகும். சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் நுழையும் போது அவர்களுக்கு கொடுக்கப்படக் கூடியவையும் ஆகும்.அமைதியான உள்ளமுடையவர்கள் உலகிலேயே நிம்மதியாக வாழ்வார்கள். மறுமையில் அதனை கனீமத்தாக பெற்றுக் கொள்வார்கள் சுவர்கம் நுழைவதற்கு காரணியாகவும் அமையும்.
♣ உள்ளத்திலும் நோய்கள் ஏற்படுமா?
மனிதனுக்கு சுவாச உருப்புகள் உள்ளது போன்று உள்ளமும் இருக்கிறது. ஒரு மனிதன் நல்ல உள்ளம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் இறைவன் இருப்பதாகவும் ஒருவன் கெட்ட எண்ணடம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் ஷைத்தான் குடியிருப்பதாகவும் அனைத்து மதத்தவர்களாலும் நம்பப்படுகிறது எது எப்படியோ உள்ளம் என்று ஒன்று இருப்பதாக நாம் நம்ப வேண்டும்.
இஸ்லாம் இந்த உள்ளத்தை பற்றி கூறும் போது அந்த உள்ளத்தில் கூட நோய் உருவாகும் என்றும் இது அப்பாவி மக்களை ஏமாற்றும் மனிதர்களிடம் அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. அதாவது ஒருவனை ஏமாற்ற நினைப்பவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஏமாற்றுவித்தைகளில் மூழ்கி நன்மை தீமைகளை உணரக்கூடிய நிலையை இழந்து தன்னை தானே ஏமாற்றி விடுகிறான்.
♦ அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 2:9,10)
♦ ஏனெனில் எவனுடைய உள்ளத்தில் நோய் இருக்கிறதோ அவன் ஆசை கொள்வான். (அல்அஹ்ஸாப், 33: 32)
ஒரு இறைவிசுவாசிக்கு உள்ளத்தில் இப்படிப்பட்ட நோயின் தாக்கம் ஏற்பட்டால் உடனே அந்த நோயிலிருந்து அவன் சுதாரித்தக் கொள்ள அருள்மறை குர்ஆன் மாபெரும் சாதனமாக விளங்குகிறது. அதாவது பொய் கூற முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், திருட முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், விபச்சாரத்தை நெருங்கும்பொது இஸ்லாம் கடுமையாக கண்டிப்பதை உணரலாம். மேலும் எந்த ஒரு செயலையாவது நாம் செய்ய முற்படும்போது இது கூடுமா? கூடாதா? மார்க்க எல்லைக்கு உட்பட்டதா? மார்க்கத்தில் வரம்பு மீறிய செயலா? என்று யோசிப்போம்.
மனதில் ஆழ்ந்த குழப்பம் ஏற்படும் அந்த நேரத்தில் அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் என்ன கூறுகிறார்கள் என்று அல்குர்ஆனையும் ஹதீஸ்களையும் புரட்டுவோம் அந்த செய்திகளை பொருளுணர்ந்து படிப்போம் ஸுபியாக்கள், காமிலான ஷெய்குமார்களிடம் பைஅத் செய்து அவர்கள் கூறிய அறிவுரைகளையும் அவர் வாழந்து காட்டிய விதத்தையும் அலசிப்பார்ப்போம். பின்னர் நம் உள்ளத்தில் தோன்றிய குழப்பமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் குர்ஆன் குழப்பத்தை தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது என்ற உண்மை நமக்கு வெளிப்படுகிறது.
♣ மறுமை நாளில் இதயமும் சாட்சி கூறும்
இறைவன் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு வேதத்தை இறைக்கி வைத்தான். காரணம் மக்களை நெறிப்படுத்துவதற்காக. அந்த வகையில் இறுதியாக இறைவன் அருளிய வேதம்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைக்கி வைத்த அல்குர்ஆன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை நெறிப்படுத்தினான்.
அன்றைய ஜாஹிலி சமூகத்தினர்களின் உள்ளங்கள் சீர்கெட்டு இருந்த சமூகம் கலாச்சார சீர்கேட்டின் உச்சில் இருந்தது . மற்றவர்களுக்கு மத்தியில் வஞ்சகம் குரோதம், போட்டு வளர்ந்து கொண்டே வந்தது. விபச்சாரம் சாதாரணமாக இருந்தது. வட்டியினால் நிறம்பி இருந்தது. குடி நாகரிகமாக இருந்தது. இப்படி ஜாஹிலிய சமூகம் நடத்தைப் பிறழ்வின் உச்சியில் இருந்தது.
♦ மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் : 47:24)
♦ எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம், நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் : 17:36)
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் உடலில் ஒரு துண்டு சதையுள்ளது. அது நன்றாக இருந்தால் முழு உடலும் நன்றாக இருக்கும் ஆனால், அது வீணாகி விட்டால், உடல் முழுதும் வீணாகி விடும் – அது தான் இதயம் (நூல் புகாரி)
♦ அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. (அல்குர்ஆன் : 83:14)
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஃபிதன் (துன்பங்களும், சோதனைகளும்) பின்னப்பட்ட பாயில் நார்கள் சொருகப்படுவது போல் ஒன்றன்பின் ஒன்றாக இதயத்திற்குள் சொறுகப்படும். எந்த இதயம் ஃபிதனை ஏற்றுக் கொள்கிறதோ அதன் மேல் ஒரு கரும்புள்ளி விழும். ஃபிதனை ஏற்றுக் கொள்ளாத இதயத்தில் ஒரு வெண்புள்ளி வைக்கப்படும். பிறகு இதயங்கள் இரு வகைப்படும்: வெள்ளை – ஒரு வெறுமையான பாறை போல ஆகிவிடும். இதன் பின் வேறெந்த ஃபிதனும், வானமும், பூமியும் இருக்கும் வரை அதனைப் பாதிக்காது. இன்னொரு வகை கருமையானது, ஒரு கவிழ்க்கப்பட்ட கோப்பையைப் போல் அது நன்மையானதை அடையாளம் காணாது, தீயவைகளை விலக்காது. (நூல் முஸ்லிம்)
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடத்தில் மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று வினவப்பட்ட்து, தனது உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவனும், உண்மை பேசுபவனும் ஆவான் என்றார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘உண்மை பேசுபவனை நாம் அறிவோம், உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவன் என்றால் யார்?’ என்று கேட்டார்கள். (அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) ‘உள்ளத்தில் இருப்பதை அகற்றுபவர் என்பது இறையச்சமுள்ள பிறருடைய குறைகளை கூறுவதை விட்டும் தூய்மையாக இருப்பவன் ஆவான். அவனிடம் எந்த பாவமும் கோபமும் குரோதமும் பொறாமையும் இருக்காது.” (நூல் இப்னு மாஜா)
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. ஆனால் உங்களின் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கிறான்' (நூல் முஸ்லிம்)
♦ நீங்கள் கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் (இருதயம்) கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள். ஆகவே அவர்களின் குற்றங்களை நீங்களும் மன்னித்து (இறைவனும்) மன்னிக்கப் பிரார்த்திப்பீராக. அன்றி மற்ற காரியங்களிலும் அவர்களை கலந்தலோசிப்பீராக. (ஆலஇம்ரான் 159:3)
♦ “அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டாது, எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”(அல்குர்ஆன் : 26:88, 89)
ஆகவே உள்ளம்கடினமில்லாமல் அமைதியுற்றிருக்கும் போது அங்கங்களும் ஓய்வு பெற்றுக் கொள்ளும். செயலில் வெளியாகும் ஒவ் வொன்றும் முதலில் உள்ளத்திலேயே உருப்பெறுகின்றது. இதனைத்தான் செயல்கள் அனைத்தும் எண்ணம் சார்ந்தவை என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுருக்கமாகச் சொல்லிக் காட்டியிருக்கிறார்கள்.
உள்ளம் நல்லதானால் உணர்வுகள் நல்லதாகும். உணர்வுகள் நல்லதானால் யெல்கள் நல்லதாகும். செயல்கள் நல்லதானால் உலகம் நல்லதாகும். ஆகவே உள்ளம் பற்றி அதிகமாக அக்கறை கொள்வோமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
உள்ளத்தை தூய்மைப்படுத்துவது எப்படி?
தஸ்கியதுன் நப்ஸ் எனும் (உள்ளத்தை) பரிசுத்தப்படுத்துவது, தூய்மைப்படுத்துவது எப்படி? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
நமது ஆத்மாவின் தன்மைகளை ஏழாகப் பிரித்துள்ளார்கள். ஆத்மாவை ஏழாகப் பிரித்தாலும் உண்மையில் ஆத்மா ஒன்றுதான். அதைபற்றி அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.