MAIL OF ISLAM

Knowledge & Wisdom



கடலிலும் திடலிலும் ஆட்சி


ஒரு நாள் இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கடற்கரையில் அமர்ந்து தனது கிழிந்த ஆடைகளை தைத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வழியே வந்த பல்க் நாட்டு அமைச்சர் ஒருவர் தனது அரசராக இருந்த இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இன்றைய நிலையை பார்த்து மனதுக்குள் அரச போகத்தை விட்டு விட்டு இப்படியொரு ஏழ்மையை எந்த புத்திசாலியாவது விரும்புவானா? என்று அங்கலாய்த்தார்.


இதை உள்ளுணர்வு மூலம் அறிந்த இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் கையிலுள்ள ஊசியை அந்த அமைச்சர் பார்க்கும் வகையில் கடலில் வீசிவிட்டு "கடல்வாழ் மீன்களே என் ஊசியை எடுத்து வாருங்கள்" என்று குரல் கொடுத்தார்கள். இவர்களின் குரலை கேட்ட லெட்சக்கணக்கான மீன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தங்க ஊசியை வாயில் கவ்விக்கொண்டு கடலின் கரைக்கே வந்து "இதோ ஊசியை கொண்டுவந்தோம்" என்று கூறின.


இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், "யா அல்லாஹ்! நான் கடலில் வீசிய எனது ஊசித்தான் எனக்கு வேண்டும்" என்று கேட்டார்கள். உடனே ஒரு மீன் அவர்கள் வீசிய அதே ஊசியை எடுத்து கொணர்ந்து ஆஜர்படுத்தியது.


அப்பொழுது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அந்த அமைச்சரை பார்த்து, "மன அரசாட்சி மேலானதா? இல்லை கேவலம் மண் அரசாட்சி மேலானதா?" என்று கேட்டார்கள். இதனை கண்ணுற்ற அமைச்சர் கடல் மீன்கள் கூட இறை நேசரை அடையாளம் கண்டுபிடித்து விடுகிறது. அவைகளோ சாதாரண உயிரினம்.


நாம் மனிதனாக இருந்தும் கூட இக்காலத்து இரைநேச தலைவரை தெரிந்து கொள்ளவில்லையே என்று மனம் வருந்தியவராக ஸலாம் கூறி திரும்பி சென்றுவிட்டார்.