MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
தமிழ் பகுதி - இஸ்லாமிய மருத்துவம்
மருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்:
அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை"
ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : ஹதீஸ் எண் 582
♣ பேரிச்சம்பழம்
♦ விஷம் சூனியத்தில் இருந்து பாதுகாப்பு பெற
ஸஅத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எவரொருவர் தினமும் காலை அஜ்வா பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு வருகிறாரோ அன்றைய இரவு வரை அவரை எந்த விதமான விஷமோ, சூனியமோ பாதிக்காது"
(இன்னொரு அறிவிப்பாளர் ஏழு பழங்கள் என்று கூறியுள்ளார்.).
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 663
♦ பிரசவ வேதனை குறைய (கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்தது)
ஹஸ்ரத் மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பிரசவ வேதனையால் அவதிப்பட்டபோது அவர்களுக்கு கூறிய மருத்துவ ஆலோசனையை பற்றி அல்லாஹ் அல் குர்ஆனில் கூறும்போது :
"இப்பேரீச்ச மரத்தின் கிளையை, நீங்கள் உங்கள் பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குங்கள். அது பழுத்த பழங்களை உங்கள் மீது சொரியும்.
(அப்பழங்களை) நீங்கள் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) நீங்கள் (உங்கள்) கண் குளிர்ந்திருங்கள்!"
(அல் குர்ஆன் 19:25,26)
♦ விஷத்திலிருந்து நிவாரணம்
அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"அஜ்வா பேரிச்சம்பழம் சுவர்க்கத்து பழமாகும். அதில் விஷத்திற்கு நோய் நிவாரணம் உண்டு"
நூல் - திர்மிதி - பாகம் 4 : அத்தியாயம் 2 : எண் 2066
♦ பேரிச்சம் மரத்தின் சிறப்பு
இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"மரங்களில் ஒரு மரம் உண்டு. அது முஸ்லிமைப் போன்று (வளமுள்ளது) ஆகும். அதுதான் பேரீச்ச மரமாகும்."
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 65 : எண் 359
♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் உணவு:
♠ அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்ச செங்காய்களை உண்பதை பார்த்திருக்கிறேன்"
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 65 : எண் 358
♠ ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் தர்பூசணி பழத்துடன் சேர்த்து பேரிச்சம் செங்காய்களை உண்டார்கள்"
நூல் - ஷமாயில் திர்மிதி - அத்தியாயம் 29 எண் 189
♠ அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் முலாம் பழத்துடன் பேரிச்சம் பழங்களை சேர்த்து உண்பதை நான் பார்த்திருக்கிறேன்"
நூல் - ஷமாயில் திர்மிதி - அத்தியாயம் 29 எண் 190
♦ வறுமை ஏற்படாதிருக்க
♠ ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எந்த குடும்பத்தில் பேரிச்சம்பழங்கள் இல்லையோ (அந்த குடும்பம்) பசியால் வாடும்"
நூல் - அபூதாவூத் - அத்தியாயம் 27 : எண் 3822
♠ ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எந்த வீட்டில் பேரிச்சம்பழங்கள் இல்லையோ அந்த வீட்டில் உள்ளோர் பசியால் வாடுவர்"
நூல் - இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 29 : எண் 3327
♦ உடல் கொழுக்க
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"என்னை நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக எனது தாயார் என்னை கொழுக்க வைக்க நாடினார்கள். ஆனால் அவர்கள் விரும்பியது எதுவும் பலனளிக்கவில்லை, எதுவரை எனில் வெள்ளரிக்காயை பேரிச்சம்பழத்துடன் சேர்த்து எனக்கு உண்ண தரும் வரையில். அதன் பின்னர் என் உடல் பருமனடைந்தது (என் தாயார் நாடியது போல) "
நூல் - அபூதாவூத் - அத்தியாயம் 28 : எண் 3894
♦ நோன்பு திறக்கும்போது சிறந்த ஆரோக்கியமான உணவு
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரேனும் நோன்பு திறக்கும்போது, அவர் பேரிச்சம்பழங்களை கொண்டு நோன்பு திறக்கட்டும். பேரிச்சம்பழங்கள் கிடைக்கவில்லையெனில், தண்ணீரை கொண்டு நோன்பு திறக்கட்டும். அது பரிசுத்தமானதாகும்"
நூல் - இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 7 : எண் 1699
♦ இதய நோய்க்கு மருந்து
ஸஅத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் சுகவீனமுற்று இருந்தேன். நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் என்னை நோய் விசாரிக்க வந்தார்கள். அன்னவர்கள் தமது கையை என் இரண்டு மார்புகளுக்கு இடையில் வைத்தார்கள். அப்போது நான் அதன் குளிர்ச்சியை என் உள்ளத்தில் உணர்ந்தேன். அன்னவர்கள் கூறினார்கள்: நீ இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாய். தாகிபின் சகோதரர் அல் ஹாரித் இப்னு கலாதாவிடம் செல். அவர் மருத்துவ சிகிச்சை அளிப்பவர். அவர் மதீனாவின் ஏழு அஜ்வா பேரிச்சம்பழங்களை எடுத்து அவற்றை விதைகளோடு சேர்த்து அரைக்கவேண்டும். பின்னர் அதனை உங்கள் வாயினுள் ஊற்றவேண்டும்"
நூல் - அபூதாவூத் - அத்தியாயம் 28 : எண் 3866
♦ வாய்வுதொல்லை நீங்க
இன்று எம்மில் பலர் வாய்வு தொல்லையால் அவதியுறுகின்றனர். அவர்கள் அதிகாலையில் பன், பிஸ்கட், ரொட்டி என்று எதுவும் உண்ணாமல் பதினொரு பேரிச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுதொல்லை நீங்கி நல்ல சுகம் பெறலாம்.
♣ தேன்
♦ தேன் அல் குர்ஆன் பரிந்துரைக்கும் மருந்து
அல்லாஹ் அல்குர்ஆனில் தேனை பற்றி கூறும்போது:
"உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான்.
அன்றி "நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு."
(அல் குர்ஆன் 16 : 68,69)
♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் பிடித்தமான உணவு
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பி வந்தார்கள்."
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 65 : எண் 342
♦ பொதுவான நோய் நிவாரணி
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்'
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 584
♦தேனும் அல்குர்ஆனும் நோய் நிவாரணிகள்
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"நோய் நிவாரணம் தரக்கூடிய இரண்டு விடயங்களை நீங்கள் எடுக்க வேண்டும். தேனும் அல்குர்ஆனும்":
நூல் - இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 31 : எண் 3452
♦ வயிற்றுப்போக்கு குணமாக
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்:
ஒருவர் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று கூறினார். நபி ﷺ அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும் நபி ﷺ அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி ﷺ அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)' என்றார். அப்போது நபி ﷺ அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 588
♦ பேராபத்துகளில் இருந்து பாதுகாப்பு பெற
அபூஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எவரொருவர் ஒவ்வொரு மாதமும் மூன்று காலைகள் தேன் அருந்தி வருகிறாரோ, அவரை எந்தவொரு பாரிய ஆபத்துகளும் அண்டாது"
நூல் - இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 31 : எண் 3450
♦ நல்ல ஜீரண சக்திக்கு
நாம் உண்ணும உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பல சத்துக்களைத் தனித்தனியாக பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரண சத்து குறைந்திருப்பதால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்று விடும். இரைப்பையின் பணி கெட்டு விடுமானால் பின்பு உடம்பு அவ்வளவுதான்.
♦ பலஹீனமே இல்லாதிருக்க
தேனைப்பற்றிய பழைய மருத்துவக் குறிப்பு இது. அதாவது அதிகாலையிலும், இரவில் நித்திரை செய்வதற்கு முன்பாகவும் ஒரு வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சப்பழச்சாறையும், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்
1. உடல் எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்
2. ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் நீங்கிவிடும்.
3. குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி விடும்.
4. குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்து விடும்.
5. இதய பாதிப்புக்கள் நீங்கி இதயம் பலம்பெறும்.
6. புதிய இரத்தம் அதிகமாக உற்பத்தியாகும்.
♣ ஆலிவ் (ஜைத்தூன்)
♦ ஜைத்தூனின் சிறப்பு
அல்லாஹ் அல் குர்ஆனில் இப்படி சத்தியம் செய்கிறான்:
"அத்தியின் மீதும், ஜைத்தூனின் மீதும் சத்தியமாக!"
(அல் குர்ஆன் 95:1)
♦ ஜைத்தூன் பரக்கத் (அருள்வளம்) மிக்கது
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"ஜைத்தூன் எண்ணெய்யை (பயன்படுத்தி) சாப்பிடுங்கள். அதன் எண்ணெய்யை தேய்த்துக்கொளுங்கள். நிச்சயமாக அது ஒரு அருள் வளம் பெற்ற மரத்தில் இருந்து உண்டாகிறது"
நூல் - திர்மிதி - பாகம் 3 : அத்தியாயம் 23 : எண் 1852
இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 29 : எண் 3319
♦ குஷ்டரோகம் உட்பட எழுபது வியாதிக்கு மருந்து
அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"ஜைத்தூன் எண்ணெய்யை (பயன்படுத்தி) சாப்பிடுங்கள். அதன் எண்ணெய்யை தேய்த்துக்கொளுங்கள். ஏனெனில், அதில் எழுபது வியாதிகளுக்கு நிவாரணம் உண்டு. அதில் ஒன்று குஷ்டரோகம்"
நூல் - அபூ நையிம்
♦ வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க
இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால் மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும்.
♣ தண்ணீர்
♦ காய்ச்சல் குணமாக
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்."
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 621
♦ ஒழுங்கான ஜீரண சக்திக்கு
♠ உணவில் இடையிலும், உணவு உண்டவுடனும் தண்ணீர் அருந்தினால் அஜீரணகோளாறுகள் ஏற்படும்
♠ பழங்களைத் தின்றவுடன் தண்ணீர் அருந்தக்கூடாது அதனால் மரணம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
♠ குளித்தவுடன் தண்ணீர் குடித்தால் ஜலதோஷம் உண்டாகும்
♠ ஐஸ் நீரை பொதுவாக அருந்தினால் பற்கள் சீக்கிரம் ஆட்டம் கண்டுவிடும், தொண்டைக்கட்டி வலி உண்டாகும், இரைப்பையில் ஊறும் ஜீரணநீர் குறைவாகவே சுரக்கும்.
♠ அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடல் பலஹீனமடைந்து இளைத்து விடும்
♠ பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீரும் கிணற்றில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் கெடுதல் தரக்கூடியவை
♠ கிணற்றுத் தண்ணீரையும், ஆற்றுத் தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல்நலத்தைக் கெடுத்து விடும்
♠ வெந்நீரையும், தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல் நலத்தை பாதிக்கும்
என்று ஜாலீனுஸ், அப்கராத் அபூநயீம் போன்ற மருத்துவ மேதைகள் கூறுகிறார்கள்.
♦ தாகம் தணிய சிறந்த முறை
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வந்தார்கள். மேலும், "இதுவே நன்கு தாகத்தைத் தணிக்கக்கூடியதும் (உடல்நலப்) பாதுகாப்பிற்கு ஏற்றதும் அழகிய முறையில் செரிக்கச் செய்யக்கூடியதும் ஆகும்" என்று கூறினார்கள்.
நூல் - ஸஹிஹ் முஸ்லிம் - அத்தியாயம் 23 : எண் 5030
♣ ஸம் ஸம் தண்ணீர்
♦ நோயிலிருந்து சுகம் கிடைக்க
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"இந்த பூமியின் மேல் ஓடக்கூடிய தண்ணீர்களில் மிகச் சிறந்த தண்ணீர் ஸம்ஸம் தண்ணீர் ஆகும். அது ஒரு வகை உணவாகும். நோய்க்கு மருந்தாகும்"
நூல் - ஸஹிஹ் அல் ஜாமி - எண் 3302, தபரானி
♦ நாடிய நோக்கம் நிறைவேற
ஸஅத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எந்த நோக்கத்திற்காக ஸம்ஸம் தண்ணீர் அருந்தப்படுகிறதோ அது நிறைவேறும்"
நூல் - இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 25 : எண் 3062
♣ ஓதி பார்த்தல் (அல் குர்ஆன், திக்ர், ஸலவாத் ஆகியவைகளை கொண்டு ஓதி பார்த்தல்)
♦ பாம்பு / தேள் கடிக்கு சூரத்துல் பாத்திஹாவை கொண்டு ஒதிப் பார்தல்
நபி ﷺ அவர்களின் தோழர்களில் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அக்குலத்தார் (நபித் தோழர்களிடம் வந்து) 'உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா?' என்று கேட்டனர்.
அதற்கு நபித்தோழர்கள், 'நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன் வரவில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்கமாட்டோம்' என்று கூறினர். உடனே, நபித்தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள்.
நபித்தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) 'குர்ஆனின் அன்னை' எனப்படும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தை ஓதித் தம் எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டுவந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், 'நபி ﷺ அவர்களிடம் (அனுமதி) கேட்காதவரை இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது' என்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி ﷺ அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி ﷺ அவர்கள் சிரித்துவிட்டு 'அல்ஃபாத்திஹா' ஓதிப்பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்' என்று கூறினார்கள்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 632
♦ கண்ணேறுக்கு ஓதிப் பார்த்தல்
♠ ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இறைத்தூதர் ﷺ அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 634
♠ உம்மு ஸலமா(ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ﷺ அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி ﷺ அவர்கள், 'இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறுபட்டிருக்கிறது' என்று கூறினார்கள்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 635
♦ நோய் சுகமாக ஒதிப்பார்தல்
♠ அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்:
"நானும் ஸாபித் இப்னு அஸ்லம் அல்புனானீ அவர்களும் அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சென்றோம். ஸாபித் (ரழியல்லாஹு அன்ஹு) 'அபூ ஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்' என்று சொல்ல, அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு), 'இறைத்தூதர் ﷺ அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?' என்று கேட்டார்கள். ஸாபித், 'சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)' என்று சொல்ல, அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு), 'அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபா அன்லா யுஃகாதிரு சகமன்' என்று கூறி ஓதிப் பார்த்தார்கள்.
(பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 638
♠ ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இறைத்தூதர் ﷺ அவர்கள் ஓதிப்பார்க்கும்போது 'பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா வரீகத்து பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா' என்று கூறுவார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்... எங்கள் பூமியின் மண்ணும் எங்களில் சிலரின் உமிழ் நீரும் (கலந்தால்) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் உள்ள நோயாளியைக் குணப்படுத்தும்.)
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 642
♦ சூனியத்தில் இருந்து விடுபட
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இறைத்தூதர் ﷺ அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்னிடம் இருந்தபோது அல்லாஹ்விடம் (உதவி கோரிப்) பிரார்தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், 'ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக்கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குக் தெளிவளித்துவிட்டான்' என்று கூறினார்கள். நான், 'என்ன அது, இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டேன்.
அதற்கு இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடைய தலைமாட்டிலும் இன்னொருவர் என்னுடைய கால்மாட்டிலும் அமர்ந்தனர். பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன?' என்று கேட்க, மற்றவர், 'இவருக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், 'இவருக்கு யார் சூனியம் வைத்தார்?' என்று கேட்க, மற்றவர், 'பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் எனும் யூதன்' என்று பதிலளித்தார். முதலாமவர், 'எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது?' என்று கேட்க, அடுத்தவர், 'சீப்பிலும் சிக்குமுடியிலும் ஆண்பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று கூறினார். முதலாமவர், 'அது எங்கே வைக்கப்பட்டுள்ளது?' என்று கேட்க, அடுத்தவர், 'தூஅர்வான் குலத்தாரின் கிணற்றில்' என்று பதிலளித்தார்.
எனவே, நபி ﷺ அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதைக் கூர்ந்து கவனித்தார்கள். சுற்றிலும் பேரீச்ச மரங்கள் இருந்தன. (சூனியப் பொருள் கட்டைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.)
பிறகு ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் வந்து, 'அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்ற (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தானின் தலைகளைப் போன்று இருந்தன' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அந்தக் கட்டைத் தாங்கள் திறந்(து பார்த்)தீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை; எனக்கோ அல்லாஹ் ஆரோக்கியமளித்து குணப்படுத்திவிட்டான். அதைத் திறந்து காட்டினால் மக்கள் குழப்பமடைந்துவிடுவார்களோ என அஞ்சினேன்' என்று கூறினார்கள். பின்னர் நபி ﷺ அவர்களின் ஆணையின் பேரில் அக்கிணறு தூர்க்கப்பட்டது.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 661
இந்த சூழ்நிலையில் தான் அல்லாஹ் சூரா பலக், சூரா நாஸ் ஆகிய இரு அல்குர்ஆன் அத்தியாயங்களை இறக்கி வைத்தான்.
முன்னணி அல் குர்ஆன் தப்ஸீர் விரிவுரை நூலான தப்ஸீர் இப்னு அப்பாஸின் விளக்கம்:
"கடைசி இரு சூராக்களும் லபீத் இப்னு அஃஸம் என்னும் யூதனை பற்றி இறங்கியவையாகும். அவன் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களுக்கு சூனியம் செய்தான். இந்த இரு சூராக்களை நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் அவனின் அந்த சூனிய முடிச்சின் மேல் ஓதும்போது அல்லாஹ் அந்த சூனியத்தில் இருந்து அவர்களை குணப்படுதினான்.
தப்ஸீர் இப்னு அப்பாஸ் - 114 : 06
♣ இரத்தம் வெளியேற்றுதல்
♦ பொதுவான நோய் நிவாரணி
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது), தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 584
Volume 7 : Book 71 : Number 584
♦ ஒற்றை / இரட்டை தலைவலி குணமாக
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் தமக்கேற்பட்ட ஒற்றைத் தலைவலியின் காரணத்தால் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 602
♣ கருஞ்சீரகம்
♦ பொதுவான நோய் நிவாரணி
அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"கருஞ்சீரகத்தில் மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது."
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 592
♦ நோய் சுகமாக
காலித் இப்னு ஸஅத் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்:
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர் (ரழியல்லாஹு அன்ஹு) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக் (ரழியல்லாஹு அன்ஹு) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரழியல்லாஹு அன்ஹா) என்னிடம், 'நபி ﷺ அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 591
♦ நினைவாற்றல் பெருகிட
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.
♦ சர்க்கரை வியாதி நீங்கிட
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி பரிபூரணமாக குணமாகி விடும்.
எச்சரிக்கை : கர்ப்பிணிப் பெண்கள், வாதம் நோய் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது.
♣ வெள்ளரிக்காய்
♦ உடல் கொழுக்க
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"என்னை நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக எனது தாயார் என்னை கொழுக்க வைக்க நாடினார்கள். ஆனால் அவர்கள் விரும்பியது எதுவும் பலனளிக்கவில்லை, எதுவரை எனில் வெள்ளரிக்காயை பேரிச்சம்பழத்துடன் சேர்த்து எனக்கு உண்ண தரும் வரையில். அதன் பின்னர் என் உடல் பருமனடைந்தது (என் தாயார் நாடியது போல) "
நூல் - அபூதாவூத் - அத்தியாயம் 28 : எண் 3894
♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் உணவு:
அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்ச செங்காய்களை உண்பதை பார்த்திருக்கிறேன்"
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 65 : எண் 358
♣ இறைச்சி
♦ இவ்வுலகிலும் மறுமையிலும் சிறந்த உணவு
அபூதர்தா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"இறைச்சி இவ்வுலக மக்களுக்கும் நாளை சொர்க்கவாசிகளுக்கும் சிறந்த உணவாகும்"
நூல் - இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 29 : எண் 3305
♦ மிருகத்தின் முதுகுப்புற இறைச்சி சிறந்தது
அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"சிலர் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களிடம் இறைச்சியை கொண்டு வந்தார்கள். அப்போது நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: இறைச்சியில் சிறந்தது முதுகுப்புற இறைச்சியாகும்"
நூல் - இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 29 : எண் 3308
♦ மாட்டிறைச்சி நோயாகும்
♠ முலைக்கா பின்த் அம்ர் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"மாட்டின் பால் நோய் நிவாரணமாகும், அதன் கொழுப்பு (வெண்ணெய்) மருந்தாகும், அதன் இறைச்சி நோயாகும்"
நூல் - தபரானி, ஸஹீஹ் அல் ஜாமி 1233, அல் பகாவி
♠ இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"மாட்டின் பாலையும் வெண்ணெய்யையும் உபயோகியுங்கள், அதன் இறைச்சியை தவிருங்கள். நிச்சயமாக அதன் பாலும் வெண்ணெய்யும் மருந்தாகும். அதன் இறைச்சி நோயாகும்"
நூல் - முஸ்தத்ரக் அல் ஹாகிம்
♦ உடல் நல்ல நிறமும் மினுமினுப்பும் பெற
ஹஸ்ரத் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:
இறைச்சி உண்ணுங்கள், ஏனெனில், அது மேனியின் நிறத்தை வெண்மையாக்கும். வயிற்றை உறுதியாக்கும், நன்னடத்தையை உண்டாக்கும்.
நூல் - திப்புன் நபவி
♦ பார்வை கூர்மையாக
ஹஸ்ரத் முஹம்மத் இப்னு வாஸி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:
"இறைச்சி உண்பது கண்பார்வையை வலுவடையசெய்யும்"
நூல் - திப்புன் நபவி
♣ முட்டை
♦ ஆண்மை சக்தி அதிகரிக்க
ஒருமுறை ஒரு ஸஹாபி "யா ரசூலுல்லாஹ்! என் பலவீனம் பற்றி அல்லாஹ்விடம் முறையிடுகின்றேன் " என்றார்கள். அப்போது நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் "முட்டையை உண்ணுங்கள்" என்றார்கள்.
நூல் - பைஹகி
முட்டைகளில் சிறந்தது
பழைய முட்டையை விட புதிய முட்டை சிறந்தது. மற்ற முட்டைகளை விட கோழி முட்டை சிறந்தது. (திப்புன் நபவி)
♣ உப்பு
♦ மிக சிறந்த சுவையூட்டி
அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"உங்கள் சுவையூட்டிகளில் மிகச்சிறந்தது உப்பு ஆகும்"
நூல் - இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 29 : எண் 3315
♦ எழுபது விதமான வியாதிகளில் இருந்து பாதுகாப்பு பெற
அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:
"எவரொருவர் தமது உணவை உப்பை கொண்டு ஆரம்பிக்கிறாரோ, அல்லாஹ் அவரை விட்டும் எழுபது வகையான் வியாதிகளை நீக்குகிறான்"
நூல் - இமாம் பைஹகியின் ஸுஃபுல் ஈமான், இமாம் கஸ்ஸாலியின் இஹ்யா உலுமுத்தீன், இமாம் இப்னு ஆபிதீன் இன் ரத்அல் முஃதார் அலல் துர்ருல் முக்தார்
♣ அதிமதுரம் ( (இந்திய (கோஷ்ட)க் குச்சி)
♦ தொண்டை அழற்சி, நுரையீரல் அழற்சி குணமாக
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. தொண்டை அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 596
♣ சுர்மா
♦ கண் பார்வை பெருகிடவும் கண் இமைகள் நன்றாக வளரவும்
♠ ஸஅத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறக்கேட்டேன்:
"நீங்கள் தூங்கப்போகும் முன்பு சுர்மா இடுங்கள். அது கண்பார்வையை அதிகரிக்கும். கண் இமைகளை வளரச்செய்யும்."
நூல் - இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 31 : எண் 3496
♦ சுர்மா ஒற்றை எண்ணிக்கையில் இடப்பட வேண்டும்
அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"சுர்மா இடுபவர்கள் அதனை ஒற்றை எண்ணிக்கையில் இட்டுக்கொள்ளட்டும். எவர்கள் அப்படி செய்தார்களோ அவர்கள் நல்லதை செய்தனர். எவர்கள் அப்படி செய்யவில்லையோ அதில் தவறு ஒன்றும் இல்லை"
நூல் - இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 31 : எண் 3498
♣ தரித் (இறைச்சியும் ரொட்டியும் சேர்த்து செய்யப்படும் அரேபிய உணவு )
♦ மற்ற உணவுகளை விட உள்ள சிறப்பு
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு மற்ற எல்லா வகையான உணவுகளையும் விட தரீதுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்"
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 65 : எண் 330
♣ தல்பினா - (வால் கோதுமை, பால், தேன் சேர்த்து செய்யப்படும் உணவு)
♦ உள்ளத்தை பலப்படுத்தவும் கவலைகளை போக்கவும்
நபி ﷺ அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள். அப்போது ஒரு பாத்திரத்தில் 'தல்பீனா' (எனும் பால் பாயசம்) தயாரிக்கும்படி ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு 'தரீத்' தயாரிக்கப்படும். அதில் 'தல்பீனா' ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) 'இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், 'தல்பீனா' (எனும் பாயசம்) நோயாளியின் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என்று இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்' என்று சொல்வார்கள்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 65 : எண் 328
♣ பேரிக்காய்
♦ உடல் திரவியங்களை புதுப்பித்தல்
பேரிக்காய் உண்பதால் உடல் திரவியங்கள் புதுப்பிக்கப்படுகிறது. நுரையீரல் உராய்வூட்டப்படுகிறது.
♦ தாகம் தனித்து உள்ளத்திற்கு அமைதியை கொடுக்கிறது
பேரிக்காய் உண்பதால் தாகம் தணிகிறது. உடல் உஷ்ணத்தையும் அமைதியின்மையையும் நீக்கி இதயத்திற்கு அமைதியை கொடுக்கிறது.
♣ தர்பூசணி பழம்
♦ உடலை குளுமையாக்கும்
அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் தர்பூசணி பழத்துடன் சேர்த்து பேரிச்சம் செங்காய்களை உண்பவர்களாக இருந்தார்கள். மேலும் இதன் (பேரிச்சம்பழத்தின்) சூட்டை மற்றதன் (தர்பூசணி) குளுமை முறித்து விடும். இதன் (தர்பூசணி) குளுமையை மற்றதன் (பேரிச்சம்பழத்தின்) சூடு தனித்து விடும் என்பார்கள்.
நூல் - அபூதாவூத் - அத்தியாயம் 27 : எண் 3827
♦ வயிற்றை சுத்தப்படுத்தும் சிறந்த மருந்து
தர்பூசணி வயிற்றையும் குடலையும் சுத்தப்படுத்தும். சாப்பாட்டுக்கு முன் இதனை சாப்பிடுதல் வேண்டும். இல்லாவிட்டால் இது குமட்டலை (மனம் பிரட்டல்) ஏற்படுத்தும். மருத்துவர்கள் கூறுகிறார்கள்: சாப்பாட்டுக்கு முன் இதனை சாப்பிடுவது வயிற்றை சுத்தமாக்கும், வியாதிகளை நீக்கும். (திப்புன் நபவி)
♣ அத்தி பழம்
♦ அத்தியின் சிறப்பு
அல்லாஹ் அல் குர்ஆனில் இப்படி சத்தியம் செய்கிறான்:
"அத்தியின் மீதும், ஜைத்தூனின் மீதும் சத்தியமாக!"
(அல் குர்ஆன் 95:1)
அல் குர்ஆனில் அத்தி என்ற பெயரில் தனி ஒரு அத்தியாயமே உள்ளது. அத்தியாயம் 95.
♦ உடல் அழகு பெற
உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
♦ உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்த
போசாக்கு நிறைந்தது. கல்லீரல், மண்ணீரல், கபம் ஆகியவற்றை சுத்தப்படுத்தும். (திப்புன் நபவி)
♣ மருதோன்றி இலை (மருதாணி இலை)
♦ வெள்ளை முடிக்கு சாயம் பூச
நபிகள் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"உங்கள் வெள்ளை முடியை மாற்ற மிக சிறந்தது மருதானியும் கதமும் ஆகும்."
நூல் - நஸஈ - பாகம் 6 : அத்தியாயம் 48 : எண் 5010
♦ பெண்கள் விரல்களுக்கு சாயம் இடுதல்
நபிகள் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் விரல்களை மருதாணி இடுவதன் மூலம் வித்தியாசப்படுத்தி காட்டுங்கள்."
(இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
நூல் - அபூதாவூத் - அத்தியாயம் 34 : எண் 4154
♣ இஞ்சி, சுக்கு
♦ இஞ்சியின் சிறப்பு
அல்லாஹ் அல்குர்ஆனில் சுவர்க்கவாதிகளுக்கு வழங்கப்படும் உணவை பற்றி கூறும்போது இஞ்சியை குறிப்பிட்டு இவ்வாறு கூறுகிறான் :
"(இஞ்சி கலந்த) "சன்ஜபீல்" என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்."
(அல் குர்ஆன் - 76 : 17)
♦ ஜலதோஷம் நீங்கிட
கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சமஅளவு கலந்து மூன்று நாட்களுக்கு காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் பறந்து விடும்.
♦ மூலக்குரு நீங்க
சுக்கு, வெள்ளைப்பூண்டு, குறுமிளகு இம்மூன்றையும் சமஅளவு எடுத்து, தட்டி பொடியாக்கி தேனில் குலைத்து சாப்பிட்டு வந்தால் மூலக்குரு நீங்கி விடும். அதன் வேர் அப்படியே அடியோடு அறுந்து விடும்.
♦ விஷம் இறங்க
சுக்கைத் தட்டி பாலில் கலந்து குடிக்க வேண்டும். அதையே மேனியில் தேய்க்கவும் செய்தால் பாம்புக்கடி விஷம் இறங்கி விடும்.
♦ வாந்தி வருவதை நிறுத்த
வாந்தி வருவது போன்று தோன்றினால் சுக்கை கொஞ்சம் வாயிலிட்டால் உடனே வாந்தி நின்று விடும்
♦ கபத்தை வெளியாக்க
உடலில் உள்ள கபத்தை வெளியாக்க இஞ்சி மிக சிறந்த மருந்தாகும் (திப்புன் நபவி)
♦ விந்து உற்பத்தி அதிகரிக்க
புளிப்பான இஞ்சி பாலியல் உறுப்புகளை பலப்படுத்தி விந்து உற்பத்தியை அதிகரிக்கும் (திப்புன் நபவி)
♦ நல்ல ஜீரண சக்திக்கு
இஞ்சி ஒழுங்கான ஜீரண செயற்பாடுகளுக்கு உதவும் (திப்புன் நபவி)
♣ மீன்
♦ உடல் கொழுத்திடவும் தாது சக்தி அதிகரிக்கவும்
மீனை உண்டுவந்தால் உடல் கொழுத்துப் பெருத்து விடும். பொறித்த மீனை தின்று வந்தால் விந்து கெட்டிப்பட்டு தாது சக்தியை நிறைவாகப் பெறலாம். ஆனால் விரைவில் ஜீரணமேற்படாமல் தாமதமாகவே ஏற்படும்.
♦ கருவாடு
கருவாடு சூடானது. அதை அதிகம் உண்டால் அரிப்பும், சொறி சிரங்கும் ஏற்படும்.
♦ மீனில் சிறந்தது
மீனில் சிறந்தது சுவைமிக்கதும், வாசத்தில் சிறந்ததும், மிதமான அளவுடையதும், நல்ல செதில்கள் உள்ளதும், மென்மையான சதை உள்ளதும், கூலாங்கற்களில் பாயக்கூடிய புதிய தண்ணீரில் வாழக்கூடியதும், கரிம கழிவுகளை இல்லாமல் தாவரங்களை உண்டு வாழக்கூடியதும் ஆகும். (திப்புன் நபவி)
சேறும் சகதியும் உள்ள குட்டைகளிலுள்ள மீனை உன்னவது நல்லதல்ல. அதனால் உடல் கெட்டுவிடும். உப்பில்லாத நல்ல தண்ணீரிலுள்ள மீனே மிகவும் நல்லது. அதிகம் முள் உள்ள மீனை உண்ணக்கூடாது.
♣ திராட்சை
♦ இரத்தம் சுத்தியாக
திராட்சைப்பழம் சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். உடலில் பலமும் தைரியமும் ஏற்படும். உடலில் சதைப்பிடிப்பு உண்டாகும். பித்தக்கோளாறுகளைப் போக்கி விடும்.
திராட்சை பழத்தின் கொட்டையை உண்ணக்கூடாது. அது நோயாகும்.
♣ கரும்பு
நல்ல ஜீரண சக்திக்கு
அப்பான் பின் முஸ்லிம் அஸ்-ஸக்கார் கூறினார்கள்:
"உணவருந்தி விட்டு கரும்பை சப்புபவர், எஞ்சிய நாளில் சுகமாக இருப்பார்" (திப்புன் நபவி)
விந்து உற்பத்தி அதிகரிக்க
கரும்பு விந்து உற்பத்தியை அதிகரிக்கும் (திப்புன் நபவி)
இருமல் நீங்க, உடலில் உள்ள அதிக நீரை வெளியேற்ற
கரும்பு இருமல் நீங்க துணை புரிகிறது, மேலும் உடலில், சுரப்பிகளில், நெஞ்சில் உள்ள தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்ற துணை புரிகிறது. (திப்புன் நபவி)
♣ கஸ்தூரி
♦ மிக சிறந்த வாசனை திரவியம்
அபூ சயீத் அல் குத்ரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"நறுமணங்களில் மிக சிறந்த நறுமணம் கஸ்தூரரி உடையதாகும்"
நூல் - அபூதாவூத் - அத்தியாயம் 20 : எண் 3152
திர்மிதி - பாகம் 2 : அத்தியாயம் 5 : எண் 991
நஸாஈ - பாகம் 3 : அத்தியாயம் 21 : எண் 1906
♦ மரத்த நிலை நீங்க
சில நேரங்களில் இரத்த ஓட்டக் குறைவால் உடல் மரத்து விடும். அப்போதும் அந்த இடத்தில் கஸ்தூரியை கொஞ்சம் தேய்த்து விட்டால் மரத்துவிட்ட நிலை நீங்கி விடும்.
♦ நீண்ட நேர தாம்பத்திய சுகத்திற்கும் உடல் பலத்துக்கும்
கஸ்தூரியை உபயோகிப்பது மற்றும் நுகர்வதால் நீர்த்துப்போன விந்து கட்டிப்பட்டு தாதுபலம் பெற்று நீண்ட நேர போக சுகம் பெறலாம். மேலும் கஸ்தூரியை உபயோகிப்பது மயக்கம், நடுக்கம், பலவீனம் முதலானவைகளை போக்கும். மயக்கமுற்றவருக்கு இதை நுகரச் செய்தால் உடனே மயக்கம் தெளிந்து எழுவார்.
♦ விஷக்கடிக்கு
விஷ பொருட்களை உண்டுவிட்டாலோ, விஷ ஜந்துக்கள் தீண்டி விட்டாலோ கஸ்தூரியை நீரில் கலந்து கொஞ்சம் குடித்தால் கடுமை குறைந்து விஷம் இறங்கிவிடும்.
♣ சுரைக்காய்
♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் விரும்பிய உணவு
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
தையற்காரர் ஒருவர் நபி ﷺ அன்னவர்களை தாம் தயாரித்திருந்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நானும் நபி ﷺ அன்னவர்களுடன் சென்றேன். அவர் வாற்கோதுமை ரொட்டியையும், சுரைக்காயையும் உப்புக்கண்டமும் இருந்த குழம்பையும் நபி ﷺ அவர்களின் முன்னால் வைத்தார். நபி ﷺ அன்னவர்கள் உணவுத் தட்டின் நாலா பாகங்களிலும் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நானும் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 65 : எண் 347
♦ மூத்திர கோளாறுகள் நீங்க
சுரைக்காய் சிறுநீரை நன்கு வெளிப்படுத்தும். மேலும் மூத்திரக் கோளாறுகளை நீக்கும்.
♣ தயிர், மோர், பாலாடை கட்டி, வெண்ணெய், நெய்
♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் பாலாடைக்கட்டி உண்டுள்ளர்கள்:
நபிகள் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் தபூக்கில் இருந்தபோது பாலாடைக்கட்டி கொண்டுவரப்பட்டது. அன்னவர்கள் கத்தியை கேட்டு அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதனை வெட்டினார்கள்.
நூல் - அபூதாவூத் - அத்தியாயம் 27 : எண் 3810
♦ தாது புஷ்டிக்கும் குரல் இனிமைக்கும்
பேரீச்சம்பழமும், வெண்ணையையும் சேர்த்துச் சாப்பிட்டால் தாதுபுஷ்டிக்கு நிகரற்றது. குரல் இனிமை தருவதற்கும் இது நல்ல உணவாகும்.
♦ விலா மூட்டு வலி நீங்க
1. தேனும் வெண்ணையும் சேர்த்துச் சாப்பிட்டால் விலா மூட்டுக்களில் உண்டாகும் வலி நீங்கிவிடும்.
♦ உப்பிடாத பாலாடைக்கட்டி உடலுக்கு நல்லது
உப்பிடாத பாலாடைகட்டி வயிற்றுக்கு நல்லது, சதை வளர்ச்சியை ஏற்படுத்தும். (திப்புன் நபவி)
♣ பால்
♦ பால் பரிசுத்தமானதும் இன்பகரமானதுமான பானம்
அல்லாஹ் அல் குர்ஆனில் கூறுகிறான்:
(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து பரிசுத்த்தமான பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அது அருந்துபவர்களுக்கு மிக்க இன்பகரமானது.
(அல் குர்ஆன் - 16 : 66)
♦ பால் ஒரு முழுமையான உணவும் பானமும் ஆகும்
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எவரேனும் ஒருவர் குடிக்க இறைவனால் பால் வழங்கப்பட்டால், அவர் 'அல்லாஹ்வே! இதில் எமக்கு பரக்கத் (அபிவிருத்தி) செய்வாயாக, இன்னும் எமக்கு இதனை நிறைய தருவாயாக!' என்று கூறட்டும். பாலை விட முழுமையான ஒரு உணவையோ பானத்தையோ நான் அறியவில்லை."
நூல் - இப்னு மாஜா - பாகம் 1 : அத்தியாயம் 29 : எண் 3322
அபூதாவூத் - அத்தியாயம் 26 : எண் 3721
திர்மிதி - பாகம் 6 : அத்தியாயம் 45 : எண் 3455
♦ காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் நோய்க்கு மருந்து
(மதீனா வந்த 'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்து) மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்' என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப் பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது 'மதீனா(வின் தட்ப வெப்பநிலை) எங்களுக்கு ஒத்து வரவில்லை' என்று கூறினர். அவர்களை நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் பாறைகள் நிறைந்த 'அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச் செய்து, 'இவற்றின் பாலை அருந்துங்கள்' என்று கூறினார்கள்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : எண் 589
♦ நோய்கள் வராதிருக்க
பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். இதன் மூலம் இதயபாதிப்பு நீங்கி இதயம் பலம் பெறும். மூளை சக்தி பெறும்.
♦ உடல் பளபளப்பாக
பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும். ஜீரண சக்தி அதிகமாகும்.
♦ நரம்புத்தளர்ச்சி நீங்க
பசும்பாலில் முருங்கைப்பீசினை இடித்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி, உடல் நடுக்கம் மற்றும் நரம்புக்கோளாறுகள் எல்லாம் குணமாகும். (142) முருங்கைக்காயின் உட்பகுதிச் சதையையும் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து தினசரி காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் டி. பி நோய் வலிமை இழந்து நாளடைவில் குணமாகி விடும். (143) தலைவலி நீங்க மிளகைப் பசும்பாலில் அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகிவிடும்.