MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இறைவன் அல்லாதவர்களை புகழலாமா?


புகழ்கள் 4 வகைப்படும்


1. இறைவன் தன்னைத்தானே புகழ்வது

2. இறைவன் மற்றவர்களை புகழ்வது

3. மனிதன் இறைவனைப் புகழ்வது

4. மனிதர்கள் மனிதர்களை புகழ்வது



இறைவன் தன்னைத்தானே புகழ்வது


O அவன் (யாவற்றையும்) மிகைத்தவன், ஞானமுள்ளவன் (57:1)


O அல்லாஹ் மகா பரிசுத்தமானவன் (17:1)


இதே போன்று ஏராளமான குர்ஆன் வசனங்கள் உள்ளன. இவை இறைவன் தன்னை தானே புகழ்வதற்கு உதாரணங்கள் ஆகும்.



இறைவன் மற்றவர்களை புகழ்வது


உதாரணமாக இறைவன் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களை புகழ்வது:


O நபியே! நீங்கள் நிச்சயமாக உயர்ந்த நட்குணத்தின் மீது இருக்கிறீர்கள்  (சூரா நூன் 04 )


O நபியே! நாம் உம் புகழை (வானளாவ) உயர்த்தி விட்டோம்  (சூரா அலம் நஸ்ரஹ் 04 )


O அனைத்து உலகத்தினருக்கும் அருளாகவே (ரஹ்மத்) தவிர (நபியே!) உம்மை நாம் அனுப்பவில்லை." (21:107)


இதே போன்று ஏராளமான குர்ஆன் வசனங்களில் இறைவன் நபிகள் நாயகத்தையும் ஏனைய நபிமார்களையும் வலிமார்களையும் புகழ்ந்து கூறி உள்ளான்.



மனிதன் இறைவனை புகழ்வது


இதற்கு விளக்கம் தேவையில்லை. ஏனென்றால் நாம் எல்லோரும் எந்நேரமும் இறைவனை புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். சுபானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்! என்று புகழ்ந்து கொண்டு இருக்கிறோம்.



மனிதர்கள் மனிதர்களை புகழ்வது


இதையும் நமது வாழ் நாளில் நாம் செய்துக்கொண்டு தான் இருக்கிறோம். தந்தை பிள்ளையை புகழ்வதும், கணவன் மனைவியை புகழ்வதும், பிள்ளை தாயை புகழ்வதும், காதலன் காதலியை புகழ்வதும், மனிதன் அரசனை புகழ்வதும், ஆசிரியர் மாணவரை புகழ்வதும், அரசன் அமைச்சர்களை புகழ்வதும், சீடர்கள் தலைவனை புகழ்வதும், பாமரன் அறிவாளியை புகழ்வதும் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.


இவை அனைத்தும் புகழ்தான். அப்படியென்றால் நாம் வாழ்நாளில் செய்து கொண்டிருப்பது தவறா? இல்லை. அப்படியென்றால் இறைவன் கூறுகிறானே: "புகழ் அனைத்தும் இறைவனுக்கே" என்று. அப்படியாயின் நாம் மற்றவர்களை புகழ்ந்தால், இறைவனுக்கு எப்படி புகழ் சென்றடையும்?



அதற்குரிய விடை


நாம் யாரை புகழ்ந்தாலும் எல்லாப் புகழும் இறைவனுக்குரியதே, ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து படைப்பினங்களும் இறைவனின் படைப்பினங்கள். நாம் எந்த மனிதர்களை புகழ்ந்தாலும், எந்த வஸ்துவை புகழ்ந்தாலும் அவை அனைத்தும் இறைவனின் குத்ரத்துகள். நாம் அந்த படைப்பை புகழும் பொழுது, அந்த புகழ் அந்த குறிப்பிட்ட படைப்பினத்திற்கு சென்றடையாது. அந்த புகழ் இறைவனுக்குச் சொந்தமானது. எனவே அந்த புகழ் இறைவனிடம்தான் சென்றடையும். இதுதான் உண்மையான தவ்ஹீத். ஆனால் இன்று தவ்ஹீத் என்ற பெயரில் ஷிர்க்கையும், வழிக்கேட்டையும் போதிக்கிறார்கள். நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்கு தான் நாம் உண்மையான தவ்ஹீத் வாதிகளான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத் தாபியீன்கள், இமாம்கள், சூபியாக்கள் காட்டிச்சென்ற எழுதிவைத்த கிதாபுகளை வாசித்தால் எமக்கு தெளிவான தவ்ஹீத் கிடைக்கும். ஆனால் இன்று சிலர் மக்களுக்கு தஹ்வா பணி செய்கிறோம், தவ்ஹீதை நிலை நாட்ட போகிறோம், தீன் உடைய வேலையை செய்கிறோம், தப்லீக் உடைய வேலையை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, மக்களை குழப்பி உண்மையான தவ்ஹீதை போதிப்பதற்கு பதிலாக, வழிகேட்டையும், ஷிர்க்கையும் போதிக்கிறார்கள்.


உண்மையான இஸ்லாமிய (அகீதா) கொள்கையான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இறுதி மூச்சு வரை நாம் இருக்க இறைவன் அருள் புரிவானாக!


எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!