MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தமிழ் பகுதி - இமாம்கள் வரலாறு - இமாம் திர்மிதி ரலியல்லாஹு அன்ஹு

இமாம் திர்மிதி ரலியல்லாஹு அன்ஹு


திர்மிதி இமாம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பெயர் முஹம்மத் என்பதாகும். ஈஸா என்பவர் இவர்களின் தகப்பனாராவார். இவர்கள் மஃமுன் அரசன் காலத்தில் ஹிஜ்ரி 209 இல் ‘பல்கு’ நகரைச் சேர்ந்த ‘திர்மிதி’ எனும் பகுதியில் பிறந்தார்கள்.


ஊரில் பலகாலம் பல கலைகள் கற்றுத் தேர்ந்த பின்னர் பல இஸ்லாமிய பிரதேசங்களில் பல காலம் பிரயாணஞ் செய்து பலரிடம் ஹதீஸுகளைக் கேட்டறிந்து ஹதீஸுக் கலையில் தேர்ச்சியுற்றார்கள். இமாம்களான புகாரி, முஸ்லிம், அபூதாவூத், குதைபா பின் ஸஃது, முஹம்மது பின் பஷ்ஷார், அஹ்மத் பின் முஸ்னீ, ஸுப்யான் பின் வகீஃ போன்ற அறிஞர்களிடம் ஹதீஸ்கள் கேட்டறிந்தார்கள். ஆயிரக் கணக்கான பெரியார்கள் இவர்களிடம் கல்வி பயின்றார்கள். முஹம்மத் பின் அஹ்மத் மரூஸி எனும் பிரசித்தி வாய்ந்த பெரியாரும் இவர்களிடம் கற்றவரே.


ஹதீஸ் கலையில் மட்டுமல்லாமல் சட்டக் கலையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள்.

​“ஜாமிஉத் திர்மிதி” ​எனும் பரிசுத்த ஹதீஸ் கிரந்தத்தை இயற்றியவர்கள் இவர்களே.

​இது எல்லோராலும் போற்றப்படும் ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் நாலாவது கிரந்தமாகும்.


உண்மை ஹதீஸ் எனச் சரியான ஆதாரம் பெறாதவிடத்து ஒரு பொழுதும் அதை எழுதமாட்டார்கள். பல திருத்த முறைகளும் இதில் கையாளப்பட்டிருக்கின்றன. எல்லோரும் இக்கிரந்தத்தைப் புனிதமான உண்மைத் திருவசனங்களடங்கிய கிரந்தமென ஒப்புக்கொண்டிருக்கின்றனர். பிரதிகள் பல எழுதிப் பல தேசங்களிலுமுள்ள பெரியார்களுக்கும் இதை அனுப்பி வைத்தார்கள். இதைக் கண்டவர்கள் அனைவரும் இச்சேவையையும் அமைப்பையும் பெரிதும் பாராட்டினர்.


உலகாசையை முற்றிலும் துறந்து துறவியாய்ச் சீவித்து அல்லாஹ்வைச் சதா அஞ்சி நடந்தார்கள். குணத்தின் குன்றென அக்காலை மக்கள் அனைவராலும் புகழப்பட்டனர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்க்கையின் அடிச்சுவட்டிலேயே நடந்தார்கள். உடல், பொருள், ஆவியை இஸ்லாத்துக்காக அர்ப்பணஞ் செய்தார்கள்.


இவர்கள் ஹிஜ்ரி 279 இல் ரஜப் மாதம் 17 ஆந் தேதி முஃதஸிம் என்னும் அப்பாஸிய்யா அரசரின் காலத்தில் தங்கள் 70 ஆம் வயதில் இறையடி எய்தினார்கள்.


அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக!