MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
தமிழ் பகுதி - இமாம்கள் வரலாறு - இமாம் நஸாயி ரலியல்லாஹு அன்ஹு
இமாம் நஸாயீ ரலியல்லாஹு அன்ஹு
இவர்கள் ஸுஐப் என்பவரின் புதல்வராவார்கள். அஹ்மத் என்பது இவர்களின் பெயர். அபூ அப்துர் ரஹ்மான் என்பது புனைப் பெயர். குராஸானைச் சேர்ந்த நஸாஃ எனும் ஊரில் ஹிஜ்ரி 214 இல் பிறந்தார்கள்.
அக்காலை கல்வியில் கீர்த்தி பெற்ற பல இஸ்லாமிய நகரங்களுக்கு சென்று கல்வி பயின்று பல கலைகளிலும் தேர்ந்தார்கள். ஹதீஸ் கலையிலும் சட்டக் கல்வியிலும் (பிக்ஹு) நிபுணத்துவம் எய்தினார்கள். அபூஸுலைமானுல் அஷ்அத், முஹம்மத்பின் பஷ்ஷார் முதலான பெரியார்கள் இவர்களின் ஆசிரியர்கள். ஹதீஸின் இமாம்களான ‘தபரானி’ ‘தஹாவி’ முதலானோர் இவர்களின் சீடர்களாவர்.
இறுதியில் இவர்கள் எகிப்திலேயே தங்கி அங்கு கல்வி பரப்பிக் கொண்டும் சன்மார்க்கத் தொண்டு புரிந்து கொண்டுமிருந்தனர். அங்கிருக்கும்போதே தங்களின் கிரந்தங்களில் பிரபல்யம் வாய்ந்ததும் பரிசுத்த ஹதீஸ்களுமடங்கிய கிரந்தமாகிய ‘ஸுனனுந் நஸாயி’ எனும் சிறந்த கிரந்தத்தை இயற்றினார்கள்.
இவர்கள் தெய்வபக்தி நிரம்பியவர்கள். பகற்காலங்களில் நோன்பு நோற்பதிலும் இரவில் சதா அல்லாஹ்வை நின்று வணங்குவதிலும் காலங் களிப்பர். இவர்கள் ஷாபியீ மத்ஹபைப் பின்பற்றி ஓழுகினார்கலெனினும் ஏனைய மத்ஹப்களிலும் கற்றுத் தேர்ந்தவர்கள்.
ஒருநாள் இவர்கள் டமஸ்கஸ் பள்ளியில் தங்களால் எழுதப்பட்ட ‘முர்தழவி’ எனும் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சரிதை அடங்கிய கிரந்தத்தை வாசித்துக் கொண்டிருக்கையில், அங்குள்ளார் இவர்களை அடித்து வெளியே தள்ளினார்கள். உடனே அவர்கள் தங்களை மக்காவுக்கு எடுத்துச் செல்லுமாறு தங்கள் ஏவலாட்களுக்குக் கூற அவர்கள் அங்கு எடுத்துச் சென்றனர். மக்காவை அடைந்த பின் ஹிஜ்ரத் 303 இல் (கி. பி. 915) தங்களின் 88 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார்கள்.
டமஸ்கஸில் உள்ளவர்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் புகழ்ந்து கூறுவதை விரும்பவில்லை. இது சில புரட்சிக்காரரின் நியாயமற்ற பிரசாரத்தால் உண்டானது. அன்றியும் “ராபிளி”கள் என்று ஒரு கூட்டம் அதற்கு முன் தோன்றியிருந்தனர். இவர்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) வைக் கௌரவிக்கும் விஷயத்தில் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு மாறாகச் சில தருணங்களில் வரம்பை மீறி விடுவர். இதனால் நஸாயி இமாம் அவர்களும் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் புகழமைந்த கிரந்தத்தை இயற்றியதால் அக்கூட்டத்திலுள்ளவர்கள் என்று சந்தேகித்தே இப்படிச் செய்து விட்டுப் பிறகு உண்மை விளங்கியதும் வருந்தினர்.
அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக.