MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தமிழ் பகுதி - இமாம்கள் வரலாறு - இமாம் முஸ்லிம் ரலியல்லாஹு அன்ஹு

இமாம் முஸ்லிம் ரலியல்லாஹு அன்ஹு


அபுல் ஹுஸைன் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜுல் குஷைரி (ரலியல்லாஹு அன்ஹு) என்பது அன்னாரது முழுப்பெயர். இவர்கள் ஹஜ்ஜாஜ் என்பவரின் புதல்வர் ஆவார்கள். அபுல் ஹுஸைன் எனும் புனைப் பெயர் கொண்டு அழைக்கப்படுவர். இவர்கள் குஷைரி வர்க்கத்தில் நைஸாபூர் எனும் பட்டணத்தில் ஹிஜ்ரி 206 இல் பிறந்தார்கள். அதாவது கி.பி 817.


சொந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வியைக் கற்றார்கள். பின்னர் உயர்தரக் கல்விக்காகவும் கல்வி விருத்தி, ஆராய்ச்சி நடாத்தல் ஆகியவற்றிற்காகவும் ஹிஜாஸ், ஸிரியா, எகிப்து முதலான தேசங்களுக்குச் சென்று பல வருஷங்களைக் கழித்துத் தேர்ச்சியுற்றார்கள். அஹ்மத் இப்னு ஹன்பல் (ரலியல்லாஹு அன்ஹு), இமாம் புகாரி (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியவர்கள் இவர்களின் பிரதான ஆசிரியர்கள். இவர்களைத் தவிர யஹ்யா, குதைபா பின் ஸயீது (ரலியல்லாஹு அன்ஹுமா) போன்ற இன்னும் அநேகரிடம் பயின்றார்கள்.



பக்தாதுக்கு இவர்கள் சென்றபோது இவர்களின் சற்குணம், கல்வித்திறன் ஆகியவற்றைக் கண்டறிந்த பலரும் இவர்களின் சீடரானார்கள். இமாம் திர்மிதியும் இவர்களின் சிஷ்யராவர். இவர்கள் புத்தி நுட்பமுடையவர்கள். முன்பின் ஆராய்ந்து கருமமாற்றுபவர். ஒழுக்கத்தில் சிறந்தவர். சாந்தம், தயாளம், பொறுமை, தாழ்மை, தயை, ஈகை முதலிய எல்லா நற்குணாம்சங்களும் படைத்தவர்.


அகந்தை, மமதை, தற்பெருமையற்றவர். எந்த வினாக்களுக்கும் தயங்காது தைரியமாய் விடைபகரும் ஆற்றல் படைத்தவர். தெய்வ பக்தியும் நற்குண நல்லொழுக்கங்களும் நிறைந்த தாய் தந்தையரிடம் நல்லொழுக்கத்துடன் பழகி வந்ததினால் அப்பெற்றாரின் நற்குணங்கள் பிள்ளையிலும் பிரதிபலிக்குமன்றோ?


ஸஹீஹு முஸ்லிம் எனும் பரிசுத்த ஹதீஸ் கிரந்தம் இவர்களாலேயே இயற்றப்பட்டது. ஸஹீஹுல் புஹாரிக்குப் பின் இரண்டாவது சிறந்த ஹதீஸ் கிரந்தம் இதுவே. இமாம் புகாரியின் முன்மாதிரியை அனுசரித்தே இதில் ஹதீஸ்கள் அமைக்கப் பெற்றன. இதுவன்றி இன்னும் சுமார் ஒன்பது கிரந்தங்கள் இவர்களால் இயற்றப்பெற்றுள்ளன. இது பரிசுத்த நூலென அறிஞர் திருச்சபைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


ஹிஜாஸ், எகிப்து, ஸிரியா முதலிய பல தேசங்களுக்குச் சென்று இமாம் புகாரியைப் போன்று பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து மூன்று லட்சம் ஹதீஸுகளைச் சேகரித்து அவற்றை அலசித் தெளித்து வடித்துத் திருமணிகள் போன்ற 7000 ஹதீஸுகளை தேர்ந்தெடுத்து ஸஹீஹு முஸ்லிமில் வரைந்தார்கள். அவற்றில் மீட்கப்பட்ட ஹதீஸ்களை நீக்கின் 4000 ஹதீஸ்களெனலாம்.


இவர்கள் ஹிஜ்ரி 261 (கி. பி. 874) ரஜப் 24 ஆம் தேதி 55 ஆம் வயதில் இறையடி எய்தினார்கள்.


அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக.