MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
தமிழ் பகுதி - இமாம்கள் வரலாறு - இமாம் அபூதாவுத் ரலியல்லாஹு அன்ஹு
இமாம் அபூதாவூத் ரலியல்லாஹு அன்ஹு
இமாம் அபூதாவூத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பெயர் ஸுலைமான் என்பதாகும். அபூதாவூத் என்பது புனைப் பெயர். இவர்கள் அஷ்அத் என்பவரின் புதல்வராவார். ‘இஸ்தீ வம்சத்தில் உதித்தவர்கள். இவர்கள் ஹிஜ்ரி 202 இல் ஸீஸ்தான் (ஸஜஸ்தான்) எனும் ஊரில் பிறந்தார்கள்.
நைஸாபூரில் ஆரம்பக் கல்வி கற்றார்கள். பின்னர் பஸறா, கூபா, எகிப்து முதலான வேறு தேசங்களுக்குச் சென்று பொதுவாக எல்லாக் கல்விகளிலும் சிறப்பாக ஹதீஸ் கலையிலும் தேர்ச்சியுற்றார்கள். முஸ்லிம் இப்னு இப்ராஹீம், யஹ்யா இப்னு முஈன், அஹ்மத் இப்னு ஹன்பல் ஆகிய மகான்கள், இவர்களின் ஆசிரியர்களாவார்கள்.
பின்னர் தங்கள் சீவிய காலத்தின் பெரும் பகுதியை பஸராவிலேயே கழித்து அங்கு மக்களுக்குக் கல்வியூட்டி வந்தார்கள். அங்கிருந்த பொழுதுதான் தங்களிடமிருந்த
ஐந்து லட்சம் ஹதீஸுகலிளிருந்து 4800 ஹதீஸுகளைத் தெரிந்தெடுத்து
‘ஸுனனு அபீதாவூத்’ எனும் பிரபல்யம் வாய்ந்த ஹதீஸ் கிரந்தத்தை
இயற்றினார்கள். இயற்றினதும் தங்கள் ஆசிரியரான ஹன்பலி இமாம் அவர்களிடம் காண்பிக்க, அன்னவர் மிகவும் மகிழ்ந்து போற்றினார்கள். எல்லா இமாம்களாலும் மற்றும் அனைவோராலும் பரிசுத்த கிரந்தமென இது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆறு பரிசுத்த ஹதீஸ் கிரந்தங்களில் புகாரி, முஸ்லிம் எனும் கிரந்தங்களுக்கு அடுத்ததாக சிரேஷ்ட ஸ்தானம் வகிப்பது இதுவேயாகும்.
எண்ணற்ற மாணவர்களுக்குக் கல்வியூட்டிப் பயிட்சியளித்ததாலும், ஈரான், இராக், எகிப்து முதலிய நாடுகளின் மதத் தலைவர்கள் அவர்களின் இக்கிரந்தத்தைப் பயன்படுத்த உதவியமையாலும் இவர்களின் கீர்த்தி உலகமெங்கனும் பிரபல்யமானது. இவர்கள் அருங்கலைஞராயிருந்தோடு ஞாபசக்தி, நன்றியறிதல், ஈகை, தியானம், அன்பு, பக்தி ஆகிய எல்லா நற்குணங்களும் நிறைந்தவர்களாயிருந்தார்கள்.
ஹிஜ்ரி 275 ஆம் வருடம் ஷவ்வால் 14 ஆம் தேதி தங்களின் 72 ஆம் வயதில் பஸறா நகரில் இறையடி சேர்ந்தார்கள்.
அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக.