MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இஸ்லாமும் பிற மதங்களும்  -  சமய ஒப்பீடு

இறைவன் மனித இனத்தை படைத்து, இப்பூவுலகில் அவர்களை வாழவைத்து, அம்மனிதர்களை நேர்வழியில் வழி நடாத்த காலத்திற்கு காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். இவ்வாறு பல்வேறு காலப்பகுதியில் பல்வேறு பிரதேசங்களில் பல ஆயிரம் இறைதூதர்கள் அனுப்பப்பட்டனர். இந்த இறைதூதர்கள் இறைவன் ஒருவனை வணங்கும்படியும் நல்லதை செய்யும்படியும் தீயதை தவிரும்படியும் அந்த மக்களுக்கு ஏவினர். இந்த இறைத்தூதர்களில் சிலருக்கு இறைவன் வேதங்களை அருளினான்.


மனிதர்களில் சிலர் அந்த இறைத்தூதர்களை ஏற்று அவர்கள் சொற்படி கேட்டு இறைவனை மட்டும் வணங்கி அவனின் சட்டங்களை பின்பற்றி நடந்தனர். இன்னும் சிலரோ அவர்களை நிராகரித்து இறைநிராகரிப்பாளர்களாக அல்லது இறைவனை விட்டுவிட்டு வேறு படைப்பினங்களை வணங்குபவர்களாக வாழத்தொடங்கினர். இன்னும் சிலரோ அந்த இறைத்தூதர்களின் மறைவுக்கு பின்னர் அவர்களையே இறைவன் என கூறி வணங்கத் தொடங்கினர்.


இவ்வாறே உலகில் உள்ள அனைத்து மதங்களும் உருப்பெற்றது எனலாம். ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து உண்டான மானிட வர்க்கம் இவ்வாறே பின்னர் பல கோத்திரங்களாக பல இனங்களாக பல மதங்களாக பிரிந்தது.


இதனால், ஆரம்பத்தில் இருந்து போதிக்கப்பட்டு வந்த சத்திய கொள்கைகள், மனிதர்களால் புது புது மதங்கள் உருவாக்கப்பட்டபோது, அவை திரிபுபடுத்தப்பட்டு அதன் அசல் வடிவம் மாற்றப்பட்டு, அல்லது சத்தியதோடு அசத்தியங்கள் கலக்கப்பட்டு சமுதாயங்களுக்குள் பரவலாயின.


எனவே, ஒரு மனிதன் தெளிந்த சிந்தனையோடும் கூரிய அறிவோடும் எல்லா மதங்களையும் ஆய்வு செய்து படித்து பார்ப்பானேயானால், நிச்சயமாக அவனால் சத்திய மார்க்கம், சத்திய வழி எது என தெரிந்து கொள்ள முடியும் என நாம் நம்புகிறோம். இறைவனின் அருளால், அதற்கு இந்த பகுதி நிச்சயம் உதவும் எனவும் நம்புகிறோம்.



இஸ்லாம் பற்றி சிறு அறிமுகம்

வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வை (இறைவனை) அன்றி வேறு யாரும் இல்லை. முஹம்மத் நபி ﷺ அன்னவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள். இது இஸ்லாம் போதிக்கும் அடிப்படை பாடம்.


இறைவனை அன்றி சிலைகளையோ, படைப்புகளையோ அல்லது இறைதூதர்களையோ வணங்க கூடாது. படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். காலத்திற்கு காலம் இறைதூதர்கள் வந்து சென்றுள்ளனர். அவர்களில் இறுதி இறைத்தூதராக  வந்துதித்த கருணை கடல், காருண்ய திலகம் முஹம்மத் நபி  ﷺ அன்னவர்களை இறைத்தூதராக ஏற்று அன்னவர்கள் போதித்த வழியில் அன்னவர்களை பின்பற்றி வாழவேண்டும். இதுவே அப்பாடத்தின் சுருக்கமான விளக்கம்.


இஸ்லாம் என்பது புதிதாக முஹம்மத் நபி ﷺ அன்னவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட மார்க்கம் அல்ல. முதல் மனிதரும் இறைதூதருமான ஆதம் (ஆதாம்) அன்னவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட வாழ்க்கை நெறியே இஸ்லாம். இறைதூதர் ஆதாம் தொடங்கி பின்னர் காலாகாலமாக வந்த அத்தனை இறைத்தூதர்களும் போதித்தது இஸ்லாம்தான்.


அந்த இறைத்தூதர்கள் போதித்து அவரவர்களின் மறைவோடு மங்கி போயின. அல்லது அவர்களையே இறைவனாக மக்கள் கொண்டாடினர். இதுவே நடந்த உண்மை. இறுதியாக முஹம்மத் நபி ﷺ அன்னவர்கள் வந்து இந்த புனித இஸ்லாமிய மார்க்கத்தை சம்பூர்ணப்படுத்தி சென்றார்கள் என்பதுவே இஸ்லாம் கூறும் உண்மையாகும்.



வேறு மதங்களில் இஸ்லாம்

மேலே சொன்ன உண்மைகளை பிறமத வேதநூல்களை ஆராயும்போது தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஏனைய மதங்களிலும் இஸ்லாம் போதிக்கும் ஏக தெய்வ கொள்கை தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்லாத்தை போலவே அம்மத வேதங்களிலும் சிலைகளை  வணங்குதல், படைப்புகளை வணங்குதல் போன்றவை பழித்து கூறப்பட்டுள்ளது. அதுபோலவே, முஹம்மத் நபி ﷺ அன்னவர்களின் வருகை பற்றி முன்னறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளது.


இவை அனைத்தையும் ஒரு மனிதன் சொந்த விருப்பு வெறுப்பின்றி தூய உள்ளத்தோடு படிப்பானேயானால், நிச்சயமாக விளங்கி கொள்வான்.


எனவே, தொடர்ந்து, ஒவ்வொரு மதத்திளும் இஸ்லாம் பற்றி கூறி உள்ளதை விரிவாக பார்க்கும் முன் நாம் வாசகர்களிடம் அன்பாக கேட்டுக்கொள்வது, இதனை உங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பால் வைத்து தூய உள்ளத்தோடும் உண்மையை விளங்கி சத்தியத்தின் பக்கம் செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடும் இதனை படியுங்கள்.


இன்ஷா  அல்லாஹ் ( இறைவன் நாடினால்) நிச்சயம் இறைவன் உங்களுக்கு நேர் வழி காட்டுவான்.

தமிழ் பகுதி - பிற மதங்களில் இஸ்லாம்

கிறிஸ்தவ மதத்தில் இஸ்லாம்

யூத மதத்தில் இஸ்லாம்

பௌத்த மதத்தில் இஸ்லாம்