MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தமிழ் பகுதி - வலிமார்கள் வரலாறு - ஷா பஹாவுத்தீன் நக்ஷபந்தி ரலியல்லாஹு அன்ஹு

ஷா பஹாவுத்தீன் நக்ஷபந்தி ரலியல்லாஹு அன்ஹு


பிறப்பு

எமது ஆத்மீக ஞான ஆசிரியர். ஆலிமே ஷரீஅத், இமாமே தரீகத், அல் குத்பு, நக்ஷ்பந்தி தரீக்காவின் ஸ்தாபகர் ஷைய்க் பஹாவுத்தீன் நக்ஷ்பந்தி புகாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டின் புகாரா என்னும் நகருக்கு அண்மையிலுள்ள கஸ்ரி அரபான் என்னும் கிராமத்தில் ஹிஜ்ரி 717 ஆம் ஆண்டு (கி.பி. 1317) முஹர்ரம் மாதம் பிறை 14 இல் பிறந்தார்கள்.



பிறப்பின் சிறப்பு

ஷைய்க் பஹாவுத்தீன் நக்ஷ்பந்தி புகாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தந்தையின் பெயர் செய்யிது முஹம்மது புகாரி (ரலியல்லாஹு அன்ஹு) என்பதாகும். இவர்கள் கண்மணி நாயகம்

​(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திருப்பேரர் இமாம் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு)

அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்கள்.



கல்வி

பஹாவுத்தீன் நக்ஷ்பந்தி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தமது பதினெட்டாம் வயதில் ஷரிஅத்துடைய கல்விகளில் நிபுணத்துவம் பெற்றார்கள். பின்னர் மாபெரும் அறிஞர் ஷேய்க் முஹம்மத் பாபா அஸ் ஸமாஸி அவர்களிடம் தரிகத்துடைய கல்விகளை பயின்றார்கள். அன்னாரின் வபாத்திற்கு பின்னர் ஷேய்க் அமிர் குலால் அவர்களிடம் ஆன்மீக கல்வியை தொடர்ந்தனர்.



திக்ர் முறை

ஷேய்க் அமிர் குலால் அவர்களின் மாணவர்கள் கூட்டமாக இருக்கும்போது சத்தமாகவும் தனிமையில் அமைதியாகவும் திக்ர் செய்வது வழக்கம். ஷைய்க் பஹாவுத்தீன் நக்ஷ்பந்தி புகாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அமைதியான திக்ர் முறைமையையே பெரிதும் விரும்பினார்கள். ஆனாலும் ஒருபோதும் அவர்கள் சத்தமாக திக்ர் செய்வது பற்றி எந்த ஆட்சேபனையோ விமர்சனமோ செய்யவில்லை. எனவே அமைதியான திக்ர் முறைமை ஏனைய தரீகாக்களோடு ஒப்பிடும்போது நக்ஷபந்தி தரீக்காவின் தனி பண்பு என்று குறிப்பிடலாம்.



வாழ்நாளின் பிற்பகுதி

அவர்கள் மூன்று முறை ஹஜ் செய்தார்கள். அவர்கள் தம் வாழ்நாளின் பிற்பகுதியில் தம் சொந்த ஊரான கஸ்ரி அரபானில் குடியேறினார்கள். எங்கும் இவர்களை பற்றியே பேசப்பட்டது. இவர்களது புகழ் நாலா திசைகளிலும் பரவி இருந்தது. தூர பிரதேசங்களில் இருந்தெல்லாம் பலர் அன்னாரை காணவும் அறிவுரை பெறவும் வந்து சென்றனர். 5000 பேர் இருந்து பயான் கேட்க கூடிய வசதி கொண்ட அன்னாரின் பள்ளியோடு கூடிய மதரசாவில் மக்கள் வந்து அன்னாரின் பயானை கேட்டுவிட்டு செல்வர். இவர்களின் போதனைகள் மிக எளிய முறையில் இருந்தன. இவர்களது போதனை இருள் கொண்டிருந்த பல உள்ளங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.



மறைவு

ஷைய்க் பஹாவுத்தீன் நக்ஷ்பந்தி புகாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்த பொழுது தனது சிஷ்யர்களில் ஒருவரான அலி தம்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் தனக்காக கப்ர் (புதைகுழி) தோண்டுமாறு கூறினார்கள். அவர்களது கடைசி நாட்களை அவர்கள் தமது அறையிலேயே கழித்தார்கள். அவர்களை தரிசிப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு ஷேய்க் நாயகம் அவர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள். அவர்கள் தமது இறுதி சுகவீனத்தை அடைந்ததும் அவர்கள் தமது அறை கதவை தாழிட்டுக்கொண்டார்கள். பின்னர் அவர்களின் முரிதுகள் ஒவ்வொருவராக அவர்களை தனிமையில் சந்தித்தனர். ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அவர்களவர்களுக்கு தேவையான அறிவுரைகளை ஷைய்க் பஹாவுத்தீன் நக்ஷ்பந்தி புகாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வழங்கினார்கள். பிறகு எல்லோரையும் சூரா யாசீனை ஓதுமாறு கூறினார்கள். அவர்கள் அனைவரும் ஓதி முடித்ததும் தம் இரு கைகளையும் உயர ஏந்தி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பின்னர் தம் விரலை உயர்த்தி கலிமா சொன்னார்கள். அத்தோடு தமது 71 ஆம் வயதில் ரபியுல் அவ்வல் 3 ஆம் பிறை திங்கள் இரவு ஹிஜ்ரி 791 இல் (கி.பி. 1388) இந்த உலகை விட்டு மறைந்தார்கள். அன்னாரின் வேண்டுக்கோளின்படி அவர்களின் தோட்டத்திலேயே அவர்களது புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.


அன்னாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.