MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
திக்ரின் சிறப்புகள்
♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் – லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக (இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர.
அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி - 3293
♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!
அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி - 6405
♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹூல்முல்க்கு வலஹுல் ஹம்துவஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல் (அலைஹிசலாம்) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார்.
அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி - 6404
♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) என கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹூரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி - 6406
♣ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்விடம் வானவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் துதி செய்யப்படும் கூட்டங்களைத் தேடி உலா வருகிறார்கள். அத்தகைய கூட்டத்தாரைக் கண்டால். அவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கும் முதல் வானத்திற்கும் மத்தியிலுள்ள (இடைவெளியை) நிரப்பும் வகையில் தங்களுடைய இறக்கைகளால் ஒருவர் மற்றவரை சூழ்ந்து கொண்டிருப்பார்கள். (கூட்டத்திலுள்ள மககள்) கலைந்து செல்லும் போது (வானவர்கள்) வானத்தின் பால் ஏறி உயர்ந்து விடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்.
‘(அங்கு) அல்லாஹ், இவ்விஷயங்களை நன்கு அறிந்திருந்தாலும் கூட அவ்வானவர்களிடம் கேட்கின்றான்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
அதற்கு வானவர்கள் நாங்கள் பூமியிலிருக்கும் உன்னுடைய சில அடியார்களிடமிருந்து வருகிறோம். அவர்கள் உன் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன் மேன்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன்னைத் தவிர (வேறு) இறைவன் இல்லை என்று சாட்சியம் பகர்ந்து கொண்டிருந்தார்கள். உன்னை புகழ்ந்துக் கொண்டிருந்தார்கள். உன்னுடைய அருளை வேண்டியவர்களாக இருந்தார்கள் என பதில் கூறுவார்கள்.’
அல்லாஹ் : என்னிடம் அவர்கள் எதனை வேண்டினார்கள்?
வானவர்கள் : உன்னுடைய சுவர்கத்தை உன்னிடம் அவர்கள் வேண்டுகிறார்கள்.
அல்லாஹ் : அவர்கள் என்னுடைய சுவர்க்கத்தைக் கண்டுள்ளார்களா?
வானவர்கள் : இல்லை
அல்லாஹ் : என்னுடைய சுவர்கத்தைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்; (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)
வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.
அல்லாஹ் : எதிலிருந்து அவர்கள் என்னிடம் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.
வானவர்கள் : உன்னுடைய நரக நெருப்பிலிருந்து (பாதுகாப்பு தேடுகிறார்கள்)
அல்லாஹ் : அவர்கள் என்னுடைய நரக நெருப்பை கண்டுள்ளார்களா?
வானவர்கள் : இல்லை
அல்லாஹ் : என்னுடைய நரக நெருப்பைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)
வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.
அல்லாஹ் : நான் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்கள் வேண்டியதை அருளி, அவர்கள் தேடும் பாதுகாப்பையும் அளித்துவிட்டேன்.
வானவர்கள் : யா அல்லாஹ்! அவர்கள் மத்தியில் அதிகம் பாவம் செய்து கொண்டிருக்க கூடிய ஒரு அடியானும் இருந்தான. அவன் அவ்வழியே செல்லும்போது அக்கூட்டத்தாருடன் அமர்ந்து விட்டான்.
அல்லாஹ் : அவனுடைய பாவங்களைக் கூட நான் மன்னித்துவிட்டேன். அத்தகைய மக்களுடன் (கூட்டத்தில்) அமர்பவர்களும் வேதனையடையமாட்டார்கள்.
அபூஹூரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி, முஸ்லிம்