MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸகாத்

♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு நான்தான் உனது செல்வம் நான்தான் உனது கருவூலம், என்று சொல்லும் எனக் கூறிவிட்டு, பிறகு அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர் கருமித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக அது அவர்களுக்கு தீங்கேயாகும். அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும் நீங்கள் செய்கின்றவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்,, எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி - 1403




  அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.


இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

ஸஹீஹுல் புகாரி - 08




  அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ஒருவருக்கு பொருளாதார வளத்தை வழங்கி அதற்குரிய ஸகாத்தை (உரியவருக்கு) வழங்காதிருந்தால் மறுமை நாளில் கொடிய பாம்பொன்றை சுற்றப்படும். ‘ நான் தான் நீ சேர்த்து வைத்தசெல்வம்! நான் தான் நீ புதைத்து வைத்த புதையல் ! எனக் கூறிக்கொண்டே அவனைத் தீண்டிக்கொண்டே இருக்கும்.


அபூஹூரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹுல் முஸ்லிம்




அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் மறைவுக்கு பின்னர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்ததன் மூலம்) இறைமறுப்பாளர்கள் ஆகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தயாரானார்கள்.) உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியவர் தம் உயிரையும் உடைமையும் என்னிடமிருந்து காத்துக்கொண்டார். தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரை தவிர. அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என்று கூறியிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறியிருக்கும்போது நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் தொடுக்க முடியும் என்று கேட்டார்கள். அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, "அல்லாஹ்வின் மீது ஆணையாக தொழுகையையும் ஸகாத்ததையும் பிரித்து பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்துக்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக. அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்களிடம் வழங்கி வந்த ஒரு ஒட்டகை குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட நான் இவர்களுடன் போரிடுவேன்" என்றார்கள். இது பற்றி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "அல்லாஹ்வின் மீது ஆணையாக அபூபக்கரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவை பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கி இருந்ததாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கி கொண்டேன்" என்று கூறினார்கள்.


அபூ ஹூரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 1399, 1400