MAIL OF ISLAM

Knowledge & Wisdom



வலிமார்களின் சிறப்புகள்


கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

​அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ, அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கை யாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​புகாரி 6502



  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

​அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள்.


​உமர் பின் அல் ஹத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு)

அபூதாவூத் 3060



  அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனத்திற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான (வானவர்கள் நிறைந்த) சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன்.


அபுஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி, முஸ்லிம்



​​​​  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும். ஸாலிஹீன்களை நினைவு கூர்வது பாவபரிகாரமாகும்.


அல் ஜாமிஉஸ் ஸகீர் 2 - 299

​​


  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

அப்தால்கள் என்ற இறை நெருக்கம் பெற்ற நல்லடியார்கள் ஷாம் (சிரியா) நாட்டில் இருப்பார்கள். அவர்கள் 40 நபர்களாகும். அவர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு பதிலாக வேறொருவரை இறைவன் நியமிப்பான். அவர்கள் மூலம் மழை பொழியச் செய்யப்படும். மேலும் அவர்கள் மூலம் விரோதிகளிடத்தில் வெற்றி அடையப்படும். மேலும் அவர்கள் மூலம் சிரியா நாட்டவர்களை விட்டும் வேதனை திருப்பப்படும்.


அலி ரலியல்லாஹு அன்ஹு

மிஷ்காத் - 583

​​​


  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

அப்தால்கள் என்றால் இறை நேசர்களில் ஒரு பிரிவினராகும். அவர்கள் மூலமே இவ்வுலகை இறைவன் நிலை நிறுத்தாட்டிக் கொண்டிருக்கிறான். அவர்கள் மொத்தம் 70 நபர்களாகும். 40 பேர் சிரியாவிலும், மீதி 30 பேர் ஏனைய பகுதிகளிலும் இருப்பார்கள்.


மிஷ்காத் 10 - 176


​​

  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (சஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தாபிஈன்கள்) அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தப அத்தாபிஈன்கள்) பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி - 3651