MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸதகா


  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

பேரீச்சப் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்து) நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


அதீ பின் ஹாத்திம் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1417




  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர் அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக! என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார்கள்.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1442



  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும் என கூறியதும் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால், எனக் கேட்டனர். அதற்கு நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஏதேனும் கைத்தொழில் செய்து தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மமும் செய்ய வேண்டும் என்றார்கள். தோழர்கள் அதுவும் முடியவில்லையாயின் எனக் கேட்டதற்கு, தேவையுடைய உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று பதிலளித்தார்கள். தோழர்கள் அதுவும் இயலவில்லையாயின் என்றதும் நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும் எனக் கூறினார்கள்.


அபூமூசா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1445



  நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால் அல்லது அவர்களிடம் (எவரேனும் தமது) தேவையை முறையிட்டால் அவர்கள் (தம் தோழர்களை நோக்கி (உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவி செய்யும்படி பிறரிடம்) பரிந்துரை(யாவது) செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும் என்று கூறுவார்கள். பிறகு அல்லாஹ் தன் தூதருடைய நாவினால் தான் நாடியதை பூர்த்தி செய்கிறான் என்பார்கள்.


அபூமூசா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1432



(பெருநாளன்று) நான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களை கவனித்தேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்னால் தொழுவித்தார்கள். பிறகு தமது உரை பெண்களின் செவிகளைச் சென்றடையவில்லை என அவர்கள் கருதியதால் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்து விட்டு தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) ஒரு ஆடையை ஏந்தியவராக நின்றிருந்தார்கள். அப்போது பெண்கள் அதில் (தமது அணிகலன்களைப்) போடலானார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பார்களில் ஒருவரான அய்யூப் என்பார் இதை அறிவிக்கும்போது தமது காதையும் கழுத்தையும் சைகையால் காட்டினார்கள்.


இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1449